தமிழ்நாடு: ‘சாதிச் சுவர்’ களைத் தகர்ப்பதில் அரசு தீவிரம்
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள தொக்காமூர் கிராமத்தில் தலித் குடியிருப்பைப் பிரித்துவைப்பதற்காக எழுப்பப்பட்டிருந்த ‘சாதிச் சுவர்’ அக்டோபர் 3 அன்று தகர்க்கப்பட்டது.
அரசாங்க உத்தரவின் பேரில் த்கர்க்கப்பட்ட 7 அடி உயரமுள்ள இச்சுவர் 2016 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. வெள்ளப்பெருக்கைத் தடுப்பதற்காக இச்சுவர் எழுப்பப்பட்டது என அப்போது கூறப்பட்டாலும் அது உண்மையில் அப்பகுதியில் ஆதீனத்துக்குச் சொந்தமான நிலத்தில் அமைந்துள்ள கோவிலையும் அருகிலுள்ள தலித் குடியிருப்பையும் பிரிப்பதற்கென்றே கட்டப்பட்டது என தாசில்தார் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் மூறைப்பாடு செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து தலித் சமூகத்துடனும் வன்னியர் சமூகத்துடனும் கலெக்டர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இச்சுவரை அகற்றுவதென முடிவுசெய்யப்பட்டது.
தாழ்த்தப்பட்ட சமூகங்களைப் பிரித்து வைப்பதற்காக ‘சாதிச் சுவர்கள்’ எழுப்பப்படுவது தமிழ்நாடு மாநிலத்தில் சாதாரணமானது என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயலாளர் சாமுவேல் ராஜ் தெரிவித்துள்ளார். தமது நிலங்களின் பெறுமதியை அதிகரிக்கச் செய்வதற்காக உயர்ந்த சாதியினர் உயரமான சுவர்களை எழுப்பித் தலித் மக்களைப் பிரித்து வைக்கிறார்கள் எனவும் எமது போன்ற அமைப்புக்கள் சுட்டிக்காட்டும்வரை பொறுத்திருக்காமல், திருவள்ளூரில் செய்தது போல, தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் இந்நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
2019இல், கோயம்புத்தூரிலுல்ள நாடூர் கிராமத்தில் எழுப்பப்பட்டிருந்த 20 அடி ‘சாதிச் சுவர்’ சரிந்து விழுந்ததனால் கண்ணப்பன் நகரைச் சேர்ந்த 17 தலித் கிராமத்தவர் கொல்லப்பட்டிருந்தனர். அவ்வருடம் பெய்த அடைமழையால் சுவர் சரிந்து மூன்று வீடுகளை நாசமாக்கியிருந்தது. இச்சம்பவத்தின்போது 17 பேர் நசித்துக் கொல்லப்பட்டிருந்தனர். இச்சுவரை எழுப்பிய அருகிலுள்ள துணிக்கடை வியாபாரியான சிவசுப்பிரமணியம் என்பவர் அடுத்த வருடமே நகரசபை அனுமதியுடன், அச்சுவரை அதே உயரத்துக்கு மீண்டும் கட்டி எழுப்பியிருந்தார்.
“திருவள்ளூர் சுவர் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் தகர்க்கப்பட்டது. சகல தரப்பினரினதும் இணக்கத்துடனேயே இச்சுவர் தகர்க்கப்பட்டதால் நாம் பிரச்சினைகள் எதையும் எதிர்கொள்ளவில்லை” என இத்தகர்ப்பிற்குப் பொறுப்பான கலெக்டர் அல்பி ஜோன் தெரிவித்துள்ளார். (TNM)