தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் – ஒரு பார்வை
மாயமான்
ஆசனங்கள்: தி.மு.க.: 156 | அ.இ.அ.தி.மு.க. | 74 மற்றையோர்: 4
வாக்கு வீதம்: தி.மு.க: 37.65% | அ.இ.அ.தி.மு.க. : 33.27% | நா.த.க.: 5.58% | காங்கிரஸ்: 4.28% | பா.ஜ.க.: 2.6%
தமிழ்நாட்டைப் பரபரப்பில் ஆழ்த்திய சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பலரது எதிர்பார்ப்புகளையும் கவிழ்த்துக்கொட்டியபடி வெளியாகிவிட்டன. பரமக்குடியில் ஒரு 37 வயதுப்பெண் தன் சத்தியத்தைக் காப்பாற்றுவதற்காகத் தனது நாக்கை வெட்டிக்கொண்டிருக்கிறார். இது தான் தமிழ்நாட்டு அரசியல். வடக்கு மாநிலங்களின் அரசியலோடு ஒப்பிடுகையில் இது எவ்வளவோ பரவாயில்லை.

எதிர்பார்த்த ஒருவிடயம் நிறைவேறி இருக்கிறது. அது தி.மு.க. கூட்டணியின் வெற்றி. மதச் சார்பற்ற, முற்போக்குக் கூட்டணி என்று அதன் தலைவர் எம்.கே. ஸ்டாலின் சொல்வது சரியானால் அதன் வரவு வரவேற்கத் தக்கதே.
எடப்பாடி பழனிச்சாமியும் தன் பலத்தைக் காட்டியிருக்கிறார். எப்போதுமே ஒரு incumbent factor இருக்கும். ஆனாலும் அ.இ.அ.தி.மு.க. வை மக்கள் முற்றாக நிராகரிக்கவில்லை. ஓ.பி.எஸ். தோற்றுப் போனது அதிசயமல்ல. அவர் இன்னுமொரு தடவை சசிகலாவின் கால்களில் விழக்கூடும்.
கமல் ஹாசனின் மக்கள் நீதிமன்றமும் தினகரனின் அ.ம.மு.க. வும் மூன்றாம் அணியாகப் பரிணமிக்குமென பல பண்டிதர்கள் கூறிய எதிர்வுகள் புஸ்வாணமாகிப் போய்விட்டன. நாம் தமிழர் கட்சி சொன்னதைச் செய்திருக்கிறது. மொத்த வாக்குகளின் எண்ணிக்கையில் அது காத்திரமான மூன்றாம் அணியாக உருவெடுத்திருக்கிறது. உடைக்கப்படாமல் இருந்தால் அதுவே அடுத்த ஆட்சியை அமைக்கும் என நம்பலாம்.
தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. கட்சிகள் இரண்டுமே மக்கள் பணத்தைச் சுருட்டி மீண்டும் மக்களுக்குக் கொடுத்து வாக்குகளை வாங்கியவை. நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த வாக்குகள் அனைத்தும் organic.
ஒரே பார்வையில்…
தமிழ்நாடு சட்டசபையின் 234 தொகுதிகளில் 3,998 வேட்பாளர் போட்டியிட்டிருந்தனர். 6.29 கோடி வாக்காளர்களைக் கொண்ட இத் தொகுதிகளில் ஏப்ரல் 6ம் திகதி நடைபெற்ற தேர்தலில் 81.69 வீதமானோர் வாக்களித்திருதனரென இந்திய தேர்தல் ஆணையம் கூறுகிறது.
தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. இடையில் கடும் போட்டி நிலவினாலும், 10 வருடப் பசியோடிருந்த தி.மு.க. தேர்தலை விழுங்கிவிடுமெனப் பலர் ஆரூடம் கூறியிருந்தனர். இதற்காக அதன் தலைவர் தன் திட்டமிடலை மிகவும் கச்சிதமாகச் செய்திருந்தார்.
ஆளும் கட்சியான அ.இ.அ.தி.மு.க., இதர ஆறு சிறிய கட்சிகளுடன் கூட்டாக, 179 தொகுதிகளில் போட்டியிட்டிருந்தது. இதில் பா.ஜ.க. 20, பா.ம.க. 23, த.ம.கா. 6 எனத் தொகுதிப் பங்கீடு இருந்தது.
தி.மு.க. 173 ஆசனங்களில், காங்கிரஸ் (25), CPI (6), CPI-M (6), MDMK (6), VCK (6) எனத் தொகுதிகளைப் பங்கிட்டிருந்தது.
சீமானின் நா.த.க. 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட்டிருந்தது. அதில் 50% பெண் வேட்பாளர்களாவர்.
மக்கள் நீதி மையம், நடிகர் சரத்குமாரின் கட்சி, ஐ.ஜே.கே ஆகியவற்றுடனும், தினகரனின் அ.ம.மு.க. தே.மு.திக. போன்ற கட்சிகளுடனும் கூட்டாகப் போட்டியிட, பாஹுஜன் சமாஜ் கட்சி, புதிய தமிழகம், இந்தியக் குடியரசுக் கட்சி என இதர கட்சிகளும் போட்டியிட்டன.
தி.மு.க. வெற்றியின் இரகசியம்
தேர்தல்களில் வெற்றியை ஈட்டுவதற்காக ‘சாணக்கியர்களை’ப் (மூலோபாயவாதிகளை (strategists)) பாவிப்பது மேற்கு நாடுகளில் இப்போது வழமையாகிவிட்டது. இந்தியாவில் பா.ஜ.க., கெஜ்ரிவால், மம்தா பனர்ஜி போன்றோர் இப்படியான சாணக்கியர்களைப் பாவித்து வெற்றிகளை ஈட்டியிருக்கின்றனர். தி.மு.க. வுக்கு கருணாநிதி தலைவராக இருக்கும்வரை சாணக்கியர் என்று எவரும் தேவைப்பட்டிருக்கவில்லை. அவரே சாணக்கியரை வென்ற சாணக்கியர். இந்த தடவை எம்.கே.ஸ்டாலினைப் பின்னணியிலிருந்து வழிநடத்தும் அவரது மகளின் கணவரான சபரீசன் புதிய சிந்தனைகளையும் அணுகுமுறைகளையும் பாவித்திருக்கிறார். இதனால் தி.மு.க. முதல் தடவையாக, பெரும் பணச் செலவில், ஒரு சாணக்கியரைப் பணிக்கு அமர்த்தியிருந்தது. அவரது பெயர் பிரஷாந்த் கிஷோர்.
பிரஷாந்த் கிஷோர்
பிரஷாந்த் கிஷோர் ஒரு பீகார் பிராமணர். பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு அவரே காரணம். திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கும் அவரே சாணக்கியர். ஆனால் அவரது பெயரை எவரும் வெளிவிடவில்லை. தி.மு.க. ஒன்றே முதன் முதலாக தாம் அவரது சேவைகளைப் பாவிப்பதாக அறிவித்திருந்தது.
பிரஷாந்த் கிஷோரின் கீழ் தமிழ்நாடு முழுவதும் சுமார் 500 பேர் பணி புரிகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் அவரது பணியாளர்கள் சென்று மக்களது மனநிலைகளைத் தொடர்ந்து கண்காணித்து வந்தார்கள். அதன் பிரகாரம் தி.மு.க.வுக்கு பல ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அவற்றில் சில:
- தற்போதுள்ள சூழலில் மக்கள் சமூக வலைத் தளங்களால் மனமாற்றம் பெறுகிறார்கள். எனவே சமூக வலைத் தளங்களில் கவனம் செலுத்துங்கள்.
- அப்பாவின் காலத்தில் போல் ஆரிய – திராவிட பாகுபாடு இனிமேல் எடுபடாது. பா.ஜ.கவின் பிரவேசம், ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் இந்துக்களைத் தூக்கத்திருந்து சிறிது சிறிதாக எழுப்பி வருகின்றன. எனவே பிராமணரைத் தாக்குவதை நிறுத்துங்கள். இந்துக்களை அவமதிக்காதீர்கள். அவர்களது திருமணங்களுக்குச் சென்று வாழ்த்துங்கள். அவர்களது மேடைகளில் ஏறி இந்துக் கலாச்சாரத்தைப் புகழுங்கள். முருகன் கோவில்களுக்குப் போங்கள், மக்களைச் சந்தியுங்கள்.
- அ.இ.அ.தி.மு.க. மீது அதிகம் கவனம் கொள்ளத் தேவையில்லை. அவர்களுக்குள் உள்வீட்டுப் பிரச்சினை முற்றிவிட்டது. அது விரைவில் உடைந்துவிடும்.
- புதிய அரசியல்வாதிகள் களத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் அனைவருமே தந்திரசாலிகள்.
- திராவிடத் தேசியம் தற்போது உடைக்கப்பட்டு தமிழ்த் தேசியத்துக்கு வழிவிட்டுள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சியின் உயிர்நாதமே அதுதான். தி.மு.க. திராவிட தேசியத்தை விட்டு தமிழ்த் தேசியத்தை நோக்கி நகர வேண்டும். அதனால் தான் சீமானின் பரப்பிற்குள் நுழைய முடியும்.
- கமல் ஹாசன் கட்சி திராவிடக் கட்சிகளுக்கு மாற்று அணியாக உருவாக முயற்சிக்கிறது.
- ரஜினிகாந்த் களத்தில் குதிப்பாரானால் எல்லாக் கணிதமும் மீளப்பரிசீலனை செய்யப்படவேண்டி ஏற்படலாம்.
- எனவே திராவிட-ஆரிய கொள்கைப் பிரகடனங்களைத் தூர வைத்துவிட்டு வெற்றியை மட்டும் நோக்கியதாக செயற்பாடுகள் இருக்க வேண்டும்
- தேர்தல்கள் முடியும்வரை ஆரிய – திராவிடப் பிரிவுகள் பற்றியோ பிராமணர்கள் பற்றியோ பேசாதீர்கள்.
- தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பு பற்றி நிறையப் பேசுங்கள். தமிழை அழிக்க இந்தி முயல்கிறது என வாய் கிழியக் கத்துங்கள்.
- பழைய தலவர்களை அகற்றிவிட்டு இளையவர்களுக்கு களம் கொடுங்கள்.
- குடும்ப அரசியலை முன்னுக்குக் கொண்டுவராதீர்கள்.
- இளையோரைக் கவர்வதற்காக கல்லூரி மாணவர்களை வேட்பாளர்களாக நிறுத்துங்கள்.
இவை கிஷோரின் சில ஆலோசனைகள். தி.மு.க. தலைவர் இவ்வாலோசனைகளை சிரமேற்கொண்டு பணியாற்றியுள்ளார் போலத் தெரிகிறது.
பிரஷாந்த் கிஷோர் இதற்கு முன்னர் மக்கள் நீதி மன்றத்திற்காக 6 மாதங்கள் பணிபுரிந்துவிட்டு விலகி விட்டார். எடப்பாடி பழனிச்சாமியும் கிஷோரின் ஆலோசனைகள் எடுத்திருந்தாலும் அவரோடு எந்தவித ஒப்பந்தத்தையும் செய்துகொள்ளவில்லை.
தி.மு.க. இத் தேர்தல்களின்போது பெருந்தொகையான பணத்தைச் செலவழித்திருந்தது. வழமையான பணம், பிரியாணி, மிக்சர் இத்தியாதிகள் எதிர்க்கட்சியால் கொடுக்கப்படும்போது நாம் தமிழர் கட்சியைப் போல் நேர்மையான அரசியலைச் செய்தால் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது. எனவே பழைய அரசிலையும் தி.மு.க. கைவிடவில்லை. ஆனால் நவீன அணுகுமுறைகளை அது அனுசரிக்கத் தொடங்கியிருக்கிறது. கூகிள் போன்ற உலக தளங்களில் அதன் விளம்பரங்கள் முதன் முறையாக வலம் வந்தன. சமூக வலைத் தளங்கள் மிகவும் கவனமாகவும் நுணுக்கமாகவும் கையாளப் பட்டன. இவையெல்லாம் அவற்றின் வெற்றிக்குத் துணைபுரிந்துள்ளன என்பது மட்டுமல்லாது தமது எதிர்பார்த்த முடிவுகளையும் ஓரளவு பெற்றுக் கொடுத்திருக்கிறது.
சசிகலா அ.இ.அ.தி.மு.க. வுக்கு பாரிய பாதிப்பைச் செய்திருந்தாலும், அவரது குலம் சார்ந்த வாக்கு வங்கிகள் மருமகன் தினகரனது கட்சிக்கு ஆதரவளித்ததுபோல் தெரியவில்லை. பன்னீர்செல்வத்தின் தோல்வி சசிகலாவின் எதிர்காலத்தைக் கேள்விக்குறிக்குள்ளாக்கியிருக்கிறது.
நா.த.கட்சியும் ஒருவித சாணக்கியத்தை இத் தேர்தலில் பாவித்திருக்கிறது. ஈழத் தமிழர் அரசியலை அதிகம் முன்னணிக்கு அது கொண்டுவரவில்லை. விடுதலைப் புலிகளின் தலவரது படமோ அல்லது சின்னங்களோ கட்சியின் மேடைகளில் முக்கியத்துவம் பெறவில்லை. தமிழ்நாடு, சூழல், தமிழ்த் தேசியம் ஆகியவையே முக்கியம் பெற்றிருந்தன. அது நல்ல விடயம். ஆனால் மக்களுக்குப் பணம், பிரியாணி இத்தியாதிகள் எதையுமே கொடுக்காமல் கணிசமான வாக்குகளை எடுத்த நா.த.க. பாராட்டப்படவேண்டியது.
எதிர்பார்ப்புகள்
பெரும்பாலானோரின் கருத்துக்கணிப்புகளின்படி, தி.மு.க.150-170 வரையிலும், அ.இ.அ.தி.மு.க. 50-60 வரையிலும் ஆசனங்களைப் பெறுமெனவும் ம.நீ.மை, அ.ம.மு.க மூன்றாவது அணிகளாக வருவதற்குச் சாத்தியங்கள் உண்டெனவும் பெறுபேர்கள் எதிர்பார்க்கப்பட்டன.
சீமானின் நாம் தமிழர் கட்சியைப் பெரும்பாலான ஊடகங்களும், கருத்துக்கணிப்பு நிறுவனங்களும் உதாசீனம் செய்துவந்தனவெனினும் சமூக வலைத் தளங்களின் மூலம் அவர்களது பிரசன்னம் தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்தது. இதனால் அக் கடசியின் வாக்காளர் பலர் இளைய தலைமுறையச் சேர்ந்தவர்களும் மாணவர்களும் ஊழலற்ற அரசியலை விரும்புபவர்களாகவும் இருந்தனர். அவர்கள் எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ளவில்லை. எமது வாக்காளர்கள் இப்போதுதான் வளர்ந்து வருகிறார்கள் அடுத்த தடவை நாம் ஆட்சியமைப்போம் என அவர்கள் கூறிவருவது இம்முறை வாக்களிப்பின்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
சீமான் போட்டியிட்ட திருவொற்றியூரில் அ.இ.அ.தி.மு.க., தி.மு.க. வுக்கு அடுத்தபடியாக, மூன்றாமிடத்தில் 48,000 வாக்குகளை அவர் பெற்றிருக்கிறார். கிராமப் புறங்களில் நா.த.கட்சியின் தமிழ்த் தேசியம் செல்வாக்குப் பெற்றுவருவது உணரப்பட்டாலும், நகர்ப்புறத் தொகுதிகளில், ஊடகங்களின் பங்களிப்பில்லாமல் கணிசமான வாக்குகளைப் பெற்றிருப்பது அக்கட்சியின் எதிர்காலம் சிறப்பாக இருக்கப்போவதை உணர்த்தியிருக்கிறது. குறிப்பாக, திருவெரும்பூர், திருசி கிழக்கு, தாம்பரம், சிறீபெரும்புதூர், அளந்தூர், ஆவடி ஆகிய நகர்ப்புறத் தொகுதிகளில் நா.த.க. கணிசமான வாக்குகளைப் பெற்றிருக்கிறது.
புதிய அரசாங்கம்
மே 7 ம் திகதி புதிய தி,மு.க. அரசாங்கம் பதவியேற்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவையில் துரை முருகன்,தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், கே.என். நேரு, கீதா ஜீவன், உதயநிதி, அன்பில் மகேஷ் ஆகியோர் இடம் பெறலாமெனப் பேச்சுகள் அடிபடுகின்றன.
தி.மு.க. தலைவர் எம்.கே.ஸ்டாலின் அவரது தந்தையாரிந் அளவுக்கு சாணக்கியர் இல்லாதுவிட்டாலும் மற்றவர்களின் ஆலோசனைகளை அனுசரித்து நடப்பவர் போல் தெரிகிறது. அதன் பிரதான எதிர்க்கட்சியாக அ.இ.அ.தி.மு.க இருந்தாலும் செயற்படும் எதிர்க்கட்சியாக நா.த.க. யே இருக்குமாயின் தமிழ்நாட்டுக்கு நல்லது.