தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள் | தி.மு.க. கூட்டணி 151 முதல் 158 ஆசனங்களைப் பெறும் – கருத்துக் கணிப்பு

அடுத்த சில வாரங்களில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில், தி.மு.க. கூட்டணி 151 முதல் 158 ஆசனங்களைப் பெறலாமென புதிய தலைமுறை தொலைக்காட்சி மேற்கொண்ட கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவருகிறது.

20 சட்டமன்ரத் தொகுதிகளில் 200 வெவ்வேறு இடங்களில் பெப்ரவரி 18 முத்ல் மார்ச் 15 வரை மேற்கொள்ளப்பட்ட இக் கருத்துக்கணிப்பின்போது அ.இ.அ.தி.மு.க. 76 முதல் 83 ஆசனங்களைப் பெறலாமெனவும் தெரியவந்துள்ளது.

தற்போதய ஆட்சி பற்றி கேட்கப்பட்ட கேள்வியில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 36% த்தினர் 6-10 புள்ளிகளையும், 31%த்தினர் 0-4 புள்ளிகளையும், 13.06%த்தினர் 5 புள்ளிகளையும் வழங்கியிருந்தனர்.

யார் முதலைமைச்சராக வரவேண்டுமென்று விரும்புகிறீர்கள் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, ஸ்டாலின் 37.51%, பழனிச்சாமி 28.33%, கமல்ஹாசன் 6.45% த்தையும் முறையே பெற்றிருந்தனர்.

சென்னையிலுள்ள 18 தொகுதிகளில் தி.மு.க. 47.27% வாக்குகளையும், அ.இ.அ.தி.மு.க. 20.81% வாக்குகளையும் பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு தமிழ்நாட்டில் தி.மு.க. 42.93%, அ.இ.அ.தி.மு.க. 32.61% வாக்குகளையும், மேற்குத் தமிழ்நாட்டில் தி.மு.க. 28.50%, அ.இ.அ.தி.மு.க. 36.45% வாக்குளையும் பெறலாமென இக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

சில இடங்களில், இக் கருத்துக் கணிப்புகள் சசிகலா அரசியலிலிருந்து விலகப்போவதாக அறிவிப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட படியால் சில மாற்றங்களை அங்கு எதிர்பார்க்க முடியும். இருப்பினும் அவை பெரும்பாலும் அ.இ.அ.தி.மு.க. வுக்கு எதிரானவையாகவே பார்க்கப்பட முடியும்.

அ.இ.அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தமிழ்நாட்டுக்கு நன்மை பயக்குமா என்று கேட்ட கேள்விக்கு, அது ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டு என 36.87% மானோரும், அது தமிழ்நாட்டுக்கு நன்மை பயக்குமென 16.66% மானோரும் தெரிவித்திருந்தனர். இதனால் அ.இ.அ.தி.மு.க. வுக்கு நன்மை என 8.44% மானோரும், தீமையென 7.02% மானோரும், பாஜ.க. விற்கு நன்மையென 6.91% மானோரும் தெரிவித்துள்ளனர்.

பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்கு நன்மை செய்துள்ளதா எனக் கேட்ட கேள்விக்கு, 60.03% இல்லையெனவும், 22.87% ஆம் எனவும் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளின் போராட்டம் பற்றிக் கேட்டபோது, ஆதரவாக 81.20% மானோரும் எதிராக 8.24% மானோரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

நாம் தமிழர் கட்சி பற்றி இக் கருத்துக்கணிப்பில் கேள்விகள் கேட்கப்பட்டனவா அல்லது அதற்கான ஆதரவு மிகக்குறைவாக இருந்ததனால் அது இங்கு குறிப்பிடப்படவில்லையா எனக் கூறப்படவில்லை.