தமிழ்நாடு கோவில்களில் தமிழில் பூசை; பெண்கள் உட்பட எந்த ஜாதியினரும் பூசாரியாகலாம் – மாநில அரசு நடவடிக்கை!

அடுத்த 100 நாட்களுக்குள் பிராமணரல்லாத சாதியினரும் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு கோவில்களில் அர்ச்சகர்களாகப் பணி புரிவதற்கு இனிமேல் பிராமணர் தான் தேவை என்றில்லை. பெண்களுட்பட எந்த சாதியினரும் இனிமேல் பூசாரியாவதற்கு விண்ணப்பிக்க முடியுமெனெ தமிழ்நாடு இந்து சமய அறங்காவல் அமைச்சர் பி.கே.சேகர் பாபு அறிவித்துள்ளார். முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலினின் அங்கீகாரம் கிடைத்ததும் இது நடைமுறைக்கு வருமென அவர் தெரிவித்துள்ளார்.

இத் திட்டத்தின் முதற்படியாக பெண்களைப் பூசாரிகளாக்கும் திட்டமுள்ளது. விண்ணப்பிக்கும் பெண்களுக்கு பூசாரித் தொழிலுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டபின் நியமனங்கள் வழங்கப்படுமெனவும், அடுத்த கட்டமாக, அடுத்து வரும் 100 நாட்களுக்குள் சாதி பேதமின்றி எவரும் பூசாரியாவதற்கு விண்ணப்பிக்க வழிவகை செய்யப்படுமெனெ அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக கடந்த 35 நாட்களில் ஒன்பது அரச கட்டளைகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு முழுவதிலுமுள்ள கோவில்களில் இருக்கும் பூசாரிப் பதவிகளைக் கணக்கிலெடுத்து, இருப்பவர்களுக்குப் பதவியுயர்வுகளையும், வெற்றிடங்களுக்குப் புதியவர்களையும் நியமிக்கவெனெ, அமச்சு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அதன் பிரகாரம் தற்போது கோவில்களில் நிலவிவரும் வெற்றிடங்களுக்கு பெண்களை நியமிப்பது என முடிவெடுக்கப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பதாரிகள் பொதுவான பரீட்சை ஒன்றிற்குத் தோற்ற வேண்டுமா எனவும் ஆராயப்படுகிறது.

மாநில அரசாங்கத்தின் இந்து சமய அறங்காவல் அமைச்சின் கீழுள்ள 47 கோவில்களில் இனிமேல் தமிழில் மட்டுமே பூசைகள் நடைபெறுமென அறிவிப்புப் பலகைகளை வெளியில் போடும்படி அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அநேகமாக எல்லாக் கோவில்களிலும் இப்போது தமிழில் பூசைகளும், சடங்குகளும் நடைபெற ஆரம்பித்துவிட்டன எனவும், 47 உயர் தர கோவில்களில் மட்டும் அறிவிப்புப் பலகைகளை வெளியே மாட்டும்படி உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

கோவில்களில் பராமரிக்கப்படும் யானைகள் தொடர்பாக, அவற்றின் சுகாதார நிலைகளைத் தொடர்ந்து அவதானித்து, தேவையானால் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு, உடனுக்குடன் மருத்துவ வசதிகளை வழங்க அமைச்சின் அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (The Tamil Minute)