HealthIndia

தமிழ்நாடு | கொறோனாவுக்குப் பலியான மருத்துவரது உடல் தகனத்தைத் தடுக்கும் ஊர் மக்கள்!

சென்னை, வானகரம் நகரிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் கோவிட்-19 நோய்த்தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் ஒருவர் சிகிச்சை பலனளிக்காததால் இன்று (திங்கள்) இறந்து போனார்.

ஆந்திரப்பிரதேசத்திலுள்ள நெல்லூரைச் சேர்ந்த, 62 வயதுடைய மருத்துவரது உடலைத் தகனம் செய்வதற்கென, பாதுகாப்பு அங்கிகளை அணிந்தபடி, மருத்துவ மனை ஊழியர்கள் அம்பத்தூரிலுள்ள தகன சாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

உடலைத் தகனம் செய்வதற்கு முன்னர், அருகேயுள்ள குடிமக்களின் பாதுகாப்பை முன்னிட்டு, அவர்களை விலகிச் செல்லுமாறு எச்சரித்துள்ளனர்.

இதனால் சந்தேகம் கொண்ட ஊர் மக்கள், தகனசாலையைச் சூழ்ந்துகொண்டு, உடலை திருப்பிக் கொண்டு செல்லும்படி வற்புறுத்தியுள்ளனர். இதுவரையில், அம்பத்தூரில் எவருக்கும் கொரோனாவைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை.

தகனசாலையில் பணிபுரிந்தவர்கள்கூட, பாதுகாப்பு அங்கிகள் இல்லாத காரணத்தால், அங்கிருந்து ஓடிவிட்டனர் எனக் கூறப்படுகிறது.

“இது சென்னை மாநகராட்சியின் தவறு. இந் நடைமுறையை முறையாக ஒருங்கிணைக்கத் தவறிவிட்டது. சமூக இடைவெளியாக்கல் இரூகிறதென்பதையும் மறந்து ஊர்மக்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். தகனசாலை இருக்குமிடம் மக்கள் செறிவாகக் குடியிருக்குமிடம். மக்களுக்கு நிச்சயம் ஆதங்கமிருக்கும்” என இவ் விடயத்தில் சம்பந்தப்பட்ட ஒரு காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மக்களின் எதிர்ப்பினால் மருத்துவரின் உடல் தகனம் செய்யப்படாமல் பிணசாலைக்குத் திருப்புக்கொண்டு செல்லப்பட்டுவிட்டது எனத் தெரியவருகிறது.

வானகரம் மருத்துவமனை தமது எல்லைக்குள் அடங்காது எனவும், இச் சம்பவத்திற்கும் தமக்கும் எதுவித தொடர்புமில்லை எனவும் சென்னை மாநாகராட்சி மன்றம் மறுத்துள்ளது.

இதுபற்றி தமிழ்நாடு அரச சுகாதாரச் செயலாளர் பீலா ராஜேஷ் கருத்து தெரிவிக்கையில், நோய்த்தொற்றுள்ளவர்களைத் தகனம் செய்வதற்கென சில விதிமுறைகள் உண்டு. இது ஒரு உணர்வு பூர்வமான விடயம். இறந்த மருத்துவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இது நடைபெற்றிருக்கிறது எனத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில், இன்று (திங்கள்) மட்டும் 98 புதிய தொற்றுக்கள் நடைபெற்றுள்ளன. மானிலத்தில் மொத்தம் 1173 தொற்றுக்களும், 58 பேர் முற்றாகக் குணமடைந்தும், 11 பேர் மரணமாகியுமுள்ளனர்.