IndiaNews

‘தமிழ்நாடு’ கொடியேற்றியதற்காக சீமான் மீது வழக்குப் பதிவு!


அம்மாப்பேட்டை, சேலத்தில் மூவேந்தர் சின்னத்தைக் கொண்ட ‘தமிழ்நாடு’ கொடியை ஏற்றியதற்காக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது பிரிவினை ஊக்கச் சட்டத்தின் பிரகாரம் தமிழ்நாடு பொலிசாரால் வழக்குப் பதியப்பட்டுள்ளது. சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் சின்னங்களைக் கொண்ட இக் கொடியை நவம்பர் 1 அன்று சேலத்தில், சீமான் ஏற்றியிருந்தார்.

சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாப்பேட்டை என்னுமிடத்தில் ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி ஏற்பாடு செய்திருந்த ‘தமிழ்நாடு தினம்’ நிகழ்வின்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இக் கொடியை ஏற்றியிருந்தார். வழமையாக நவம்பர் 1 ம் திகதி நடைபெறும் ‘தமிழ்நாடு தினம்’ நிகழ்வு இனிமேல் ஜூலை 18இல் நடைபெறுமென தி.மு.க. அரசு செய்திருந்த அறிவிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாக நா.த.க. இந்த நிகழ்வை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

அம்மாப்பேட்டை கிராம உத்தியோகத்தர் ராஜா என்பவர் மேற்கொண்ட புகாரை அடுத்து, பிரிவுகள் 124A (பிரிவினை), 143 (சட்டத்துக்கு முரணாகக் கூட்டம் கூடியமை), 153A (ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் இன, மத வெறுப்புணர்வுகளைத் தூண்டும் வகையில் செயற்பட்டமை),269 (உயிராபத்தைத் தோற்றுவிக்கக்கூடிய நோய்த் தொற்றுக்குக் காரணமான கூட்டத்தை ஒழுங்கு செய்தமை), 505 (1) (c) (இன்னுமொரு சமூகத்துக்கெதிராக ஒருவரையோ அல்லது ஒரு சமூகத்தையோ குற்றம் புரிய ஏவும் வகையில் நடந்து கொண்டமை) ஆகிய இந்திய சட்டப் பிரிவுகளுக்கமைய தமிழ்நாடு பொலிசார் சீமான் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.

2019 வரை, ‘தமிழ்நாடு தினம்’, தமிழ்நாடு அரசினால் நவம்பர் 1ம் திகதியே கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் அக்டோபர் 30, 2021 இல், இந் நிகழ்வு இனிமேல் ஜூலை 18 இல் கொண்டாடப்படுமென தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். பிரித்தானியர் ஆட்சியில் மதறாஸ் மாநிலமாக இருந்த பிரதேசம் நவம்பர் 1, 1956 அன்று மொழி வழி மாநிலங்களாகப் (கர்நாடகம், கேரளம், ஆந்திரப் பிரதேசம், மதறாஸ்) பிரிக்கப்பட்டது. ஆனால் ஜூலை 18, 1967 அன்று மதறாஸ் மாநிலம் ‘தமிழ் நாடு’ எனப் பெயர் மாற்றம் பெற்றது.



முதலமைச்சரின் இந்த அறிவிப்பை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, பா.ஜ.க, அ.இ.அ.தி.மு.க. ஆகிய கட்சிகளும் எதிர்த்திருந்தன. ஜூலை 18 ம் திகதியை ‘தமிழ்நாடு தினமென’ ச் செய்த அறிவிப்பை மீளப்பெற்றுவிட்டு, நவம்பர் 1 ஐ அத் தினமாக அறிவிக்கும்படி சீமான் அவர்கள் தமிழ்நாடு அரசைக் கேட்டிருந்தார். அப்படிச் எய்யாவிட்டால் நாம் ஆட்சிக்கு வரும்போது மீளவும் நவமொஅர் 1 ஐத் தமிழ்நாடு தினமாக அறிவிப்போம் என சீமான் தனது பகிரங்க அறிவிப்பில் தெரிவித்திருந்தார்.

அத்தோடு, தமிழ்நாடு அரசு தனக்கென்று தனியான ஒரு கொடியை வைத்திருக்க வேண்டுமென சீமான் சிலகாலமாக தமிழ்நாடு அரசை வற்புறுத்தி வருகிறார். “கேரள அரசு அணுக் கழிவை மைசூரு, காமராஜநகர், குடகு மாவட்டங்களில் கொட்டியபோது கர்நாடக அரசு எதிர்ப்புத் தெரிவித்தது. அப்போது அது காங்கிரஸ் அல்லது பா.ஜ.க. கொடிகளுடனல்லாது தனது சொந்த கர்நாடக அரசின் கொடியுடனேயே எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது” என சீமான் சமீபத்தில் ஒரு ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

இது ஒரு அரசியல் பழிவாங்கலுக்காகவே செய்யப்படுகிறதென அ.இ.அ.தி.மு.க. வும் கூறியுள்ளது.