India

தமிழ்நாடு | குழந்தையைக் கடத்திக் கொலை செய்த குரங்குகள்


தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாகப் பிறந்த இரட்டைக் குழந்தைகளைக் குரங்குகள் சில கடத்திச் சென்று அதில் ஒரு குழந்தையைக் கொலைசெய்துள்ளதாகச் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட குழந்தையின் உடலைப் பக்கத்திலிருந்த அகழியில் இருந்து எடுத்ததாகவும், இரண்டாவது குழந்தை வீட்டின் கூரை மீது இருந்து அயலவர்களால் உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

தஞ்சாவூர் அரண்மனைக்கு அருகேயுள்ள மேள அளங்கம் என்னுமிடத்தில் இச்சமபவம் நடைபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் தந்தை ராஜா வேலைக்குச் சென்றுவிட்டதாகவும், மனைவி புவனேஸ்வரி சமையலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை வீட்டின் கூரை ஓடுகளைக் கழற்றி உள்ளே இறங்கிய குரங்குகள் குழந்தைகளைக் கடத்திக்கொண்டு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. குரங்குகள் கீச்சிடும் சத்தம் கேட்டு புவனேஸ்வரி உள்ளே போய்ப் பார்த்தபோது குழந்தைகளைக் காணவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இறந்த குழந்தையின் உடல் தற்போது தஞ்சாவூர் அரசாங்க மருத்துவமனையில் மரண பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருக்கிறதென்று தஞ்சாவூர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.



குரங்குகள் இந்த இடத்தில் பொதுவாக வாழ்வதில்லை எனவும் ஆனால் அவை கூட்டம் கூட்டமாக இடத்துக்கு இடம் செல்வது வழக்கமெனவும் குரங்குகள் தொல்லை தருவதாக் அதமக்கு எவரும் முறைப்பாடு செய்யவில்லை எனவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

ஓடுகளைக் கழற்றிக் குரங்குகள் இறங்கி அச் சிறு துளைமூலம் பிள்ளைகளைக் கடத்துவது என்பது இலகுவான காரியமில்லை எனவும், அதே வேளை குழந்தைகளின் உடலில் குரங்குகளின் நகங்களால் ஏற்பட்ட காயங்கள் எதையும் காணமுடியவில்லை எனவும் வனப்பாதுகாப்பு அதிகாரி தொல் தெரிவித்துள்ளார். குழந்தையின் மரணம் மீது ஒரு முடிவுக்கு இன்னும் வரவில்லை என பொலிஸ் அதிகாரி எம்.இளையராஜா தெரிவித்துள்ளார் (தி நியூஸ் மினிட்)