India

தமிழ்நாடு: கீழவைத் தேர்தல் கூட்டணியில் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. இணைவு!

எதிர்வரும் இந்திய மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சியின் கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிட பாட்டாளி மக்கள் கட்சி முடிவெடுத்துள்ளது. இது அ.இ.அ.தி.மு.க., தே. மு.தி.க. ஆகிய கட்சிகளுக்குப் பின்னடைவாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

நடைபெறவுள்ள இந்திய நாடாளுமன்றத்திற்கான கீழவைத் தேர்தல்களில் தமிழ்நாடு மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி அங்கம் வகிக்கும் தேசிய ஜநநாயகக் கூட்டணியில் இணைந்து போட்டியிடப் போவதாக நேற்று (மார்ச் 18) பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்திருக்கிறது.

அ,இ.அ.தி.மு.க. கூட்டணியில் இணைவதா அல்லது பா.ஜ.க. கூட்டணியில் இணைவதா எனக் கடந்த சில நாட்களாக அல்லாடிக் கொண்டிருந்த பா.ம.க. இறுதியில் பா.ஜ.க. வைத் தேர்ந்தெடுத்திருப்பது அ.இ.அ.தி.மு.க. கட்சிக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. பா.ம.க. வின் ஸ்தாபகரும் தலைவருமான எஸ்.ராமதாஸ் மற்றும் அதன் முன்னாள் மாநில தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் இணைவைதையே விரும்பியிருந்தனரெனவும் தற்போதைய தலைவரான அன்புமணி ராமதாஸ் பா.ஜ.க. கூட்டணியையே தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

வெற்றியீட்டும் பட்சத்தில் அன்புமணி ராமதாஸுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமென நம்பப்படுகிறது. இவர் முன்னர் மத்திய சுகாதார அமைச்சராகக் கடமையற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டணியால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பா.ஜ.க. கூட்டணிக்கு அமோக ஆதரவு கிடைக்க வாய்ப்புண்டு எனவும் இது அ.இ.அ.தி.மு.க. வுக்கு பாரிய பின்னடைவைத் தரலாமெனவும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.