IndiaTamil History

தமிழ்நாடு: கீழடி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைத்தார்

சங்க காலத் தமிழினதும், மக்களினதும் தொன்மையைப் பறைசாற்றும் சான்றுகளைக் காட்சிப்படுத்தும் அருங்காட்சியகமொன்று சிவகங்கை மாவட்டத்தில் ஞாயிறு (05) அன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்டது. 18.43 கோடி ரூபாய்கள் செலவில், இரண்டு ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டு ‘கீழடி அருங்காட்சியகம்’ எனப்பெயரிடப்பட்ட இக் காட்சியகத்தில் 2018 முதல் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

கங்கை நாகரிகம் நகர்மயப்படுத்தப்பட்ட கி.மு. ஆறாம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் வைகையின் ஆற்றுப்படுகையும் நகர்மயமாக்கப்பட்டிருந்ததமை கார்பன் கால நிர்ணயமுறை மூலம் ஏற்கெனவே உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. 1000 த்துக்கும் மேற்பட்ட சின்னங்களும், தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட 60 பானை ஓடுகளும், ஒரு தமிழ் எழுத்துச் சுவடியும் இவ்வகழ்வின்போது கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இதற்கு முன்னர் சங்க காலமென நிர்ணயிக்கப்படிருந்த காலப்பகுதி கி.மு. 3ஆம் நூற்றாணடு முதல கி.பி. 3 ஆம் நூற்றாண்டு ஆகும். கீழடி அகழ்வுகளைத் தொடர்ந்து சங்க காலம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்துவிட்டது என தமிழ்நாடு தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரம், குஜராத், கங்கை நாகரீகம், ரோம் ஆகியவற்றுடன் தமிழ்நாடு வர்த்தகத் தொடர்புகளைப் பேணிவந்தது என்பதற்கான எண்ணற்ற சான்றுகளையும் இவ்வகழ்வுகள் தந்துள்ளன.

கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் ஆறு பிரிவுகளாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. அவை:

  1. மதுரை மற்றும் கீழடி
  2. விவசாயமும் நீர் முகாமைத்துவமும்
  3. மட்பாண்டத் தொழில்
  4. நெய்தலும் மணி மாலை உற்பத்தியும்
  5. கடல் வர்த்தகம்
  6. வாழ்வியல்

அத்தோடு கீழடி மற்றும் தமிழ்நாட்டின் முக்கியத்துவம் பற்றிய விபரங்களைக் காட்டும் காணொளியொன்று குளிரூட்டப்பட்ட அறையொன்றில் பார்வையாளர்களுக்குக் காண்பிக்கப்படும். வைகைப் படுகையில் அகழ்வாராய்ச்சி செய்யப்படும் பகுதிகளைக் காட்டும் கணனிகளும் பார்வையாளர்களுக்காக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்டுள்ள தொல்பொருட்களை முப்பரிமாணப் பார்வையில் பார்க்கக்கூடிய கணனிவசதிகளும் இவ்வருங்காட்சியகத்தில் உண்டு. (படம்: தமிழ் நியூஸ் மினிட்)