India

தமிழ்நாடு: கள்ளச்சாராயம் அருந்தியதால் கள்ளக்குறிச்சியில் 33 பேர் மரணம், 15 பேர் ஆபத்தான நிலையில்!

  • நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம்
  • கலெக்டர் இடமாற்றம்
  • காவற்துறை அத்தியட்சகர் தற்காலிக பணிநீக்கம்

தமிழ்நாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை அருந்தியதால் இதுவரை 33 பேர் மரணமாகியிருக்கிறார்கள். மேலும் 15 பேர் உயிராபத்தான நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இச்சம்பவம் தொடர்பாக 109 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.

இது தொடர்பாக நேற்று (ஜூன் 19) 49 வயதுடைய கண்ணுக்குட்டி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 200 லீட்டர் கள்ளச் சாராயத்தையும் காவற்துறையினர் மீட்டுள்ளனர். சாராயத்தில் மெதனோல் என்னும் பதார்த்தத்தைக் கலந்து பக்கெட்டுகளில் அடைத்து அவர் விற்பனை செய்தார் எனக் காவற்துறை தெரிவிக்கிறது.

இப்பகுதியில் கள்ளச் சாராய விற்பனை வழக்கமானது எனவும் விற்பவர்கள் பற்றி யாராவது காவற்துறைக்கு முறையீடு செய்தால் கொஞ்ச நாட்களுக்கு நிறுத்தப்பட்டபின் வியாபாரம் தொடருமெனவும் இப்பகுதி வாழ் மக்கள் தெரிவித்துள்ளனர். இதே வேளை முறையீடு செய்பவரது அடையாளம் ஏதோ ஒரு வகையில் விற்பனை செய்பவர்களுக்கு அறிவிக்கப்பட்டதும் அவர்கள் முறையீடு செய்பவரை மிரட்டுவது வழக்கமெனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக கள்ளச்சாராய விற்பனையாளர்கள் காவற்துறையினருக்கு லஞ்சம் கொடுப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கருணாபுரம் கிராமத்தின் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்பிலேயே அதிக மரணங்கள் நிகழ்ந்துள்ளன எனவும் 13, 15 வயதுச் சிறுவர்களுக்கே கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா போன்றன விற்கப்படுகிற்து எனவும் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒருவரின் குடும்பத்தவர் தெரிவித்துள்ளார். (மூலம்: தி நியூஸ் மினிட்)