India

தமிழ்நாடு: ஈழத்தமிழ் அகதிகளுக்கு விசேட முகாம் – முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

தமிழ்நாட்டில் வாழ்ந்துவரும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு விசேட முகாமொன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 14 அன்று திறந்துவைத்துள்ளார். திண்டுக்கலில் அமைக்கப்பட்டுள்ள இம்முகாமில் மாநிலம் முழுவதிலுமிருந்து 321 குடும்பங்களைக் குடியமர்த்துவதற்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தொட்டனுது என்னுமிடத்தில் 17.17 கோடி ரூபா செலவில் எட்டு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட கட்டிட நிர்மாணம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. குழந்தைகள் பராமரிப்பு நிலையம் (அங்கன்வாடி) நீர்த் தாங்கி, நூலகம், குழந்தைகள் பூங்கா, பொதுச் சமையலகம், விளையாட்டுத் திடல் ஆகிய வசதிகளை இம்முகாம் கொண்டிருக்கிறது. தொட்டனுதுவில் வாடகை நிலத்தில் ஏற்கெனவே இயங்கிக்கொண்டிருந்த புனர்வாழ்வு முகாமிற்கு அருகில் இச்சிறப்பு முகாம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. ஆடியனுது மற்றும் கோபால்பட்டி முகாம்களில் தற்போது வாழ்ந்துவரும் தமிழ் அகதிகள் இப் புதிய முகாமில் வாழவைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் 29 மாவட்டங்களில் தற்போது 108 புனர்வாழ்வு முகாம்கள் உள்ளன. இம் முகாம்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லையென நீண்டகாலமாக செயற்பாட்டாளர்கள் குரலெழுப்பி வந்ததையடுத்து தி.மு.க. அரசு இத் திட்டத்தை முன்னெடுப்பதாக அறிவித்தது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம், தமிழ்நாட்டில் வாழும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு 317 கோடி ரூபா சமூகநலத் திட்டத்தை அறிவித்திருந்தார். இத்திட்டத்தின் முதற்படியாக திண்டுக்கல் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற முகாம்களை அமைக்க மாநில அரசு தயாராகி வருகிறது.

இணையவழி மூலம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட இந்த சிறப்பு முகாம் நிகழ்வில் நகராட்சி அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மட்டும் சிவில் வழங்கல் அமைச்சர் ஆர்.சக்கரபாணி, சிறுபான்மையினர் நல்வாழ்வு அமைச்சர் கிஞ்சி கே.எஸ்.மஸ்தான் மற்றும் திண்டுக்கல் கலெக்டர் டாக்டர் எஸ்.விசாகன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.