தமிழ்நாடு | இரண்டு மரணங்கள், தொடர்கிறது ஜல்லிக்கட்டு!

ஜனவரி 15 அன்று திருச்சி மாவட்டத்திலுள்ள பெரிய சூரியூர் என்னுமிடத்தில் நடைபெற்ற காளையடக்கும் போட்டியில் (ஜல்லிக்கட்டு) அக் காளைக்குச் சொந்தக்காரர் அவரது காளையினாலே குத்தப்பட்டு மரணமானார்.

27 வயதுடைய மீனாட்சிசுந்தரம் என்பவர் தனது காளையை காளையடக்கும் நிகழ்வு நடைபெறுமிடத்திற்கு எடுத்துச் செல்கையில் அக் காளையினால் தாக்கப்பட்டுப் பின்னர் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு மரணமடைந்ததாக அறியப்படுகிறது.

இது இவ்வாரத்தில் நடைபெற்ற இரண்டாவது காளையடக்குதல் தொடர்பான மரணமாகும். பொங்கலன்று (ஜன.14) அவனியபுரத்தில் நடைபெற்ற காளையடக்குதல் நிகழ்வின்போது 19 வயதுடைய பார்வையாளர் காளையொன்றினால் தாக்கப்பட்டு மரணமடைந்திருந்தார்.

பெரிய சூரியர் சம்பவத்தின்போது காளையின் சொந்தக்காரர் காளையை வாசலுக்கு வழிநடத்திக்கொண்டு போகும்போது அது தனது கொம்பினால் அவரது தொடையைக் குத்திக் கிழித்துவிட்டதாக நிகழ்வின் ஒழுங்கமைப்பாளர் தெரிவித்திருக்கிறார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அவர் திருச்சி மாகாத்மா காந்தி நினைவு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் அவர் அதற்கு முன்னதாகவே மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரிய சூரியர் நிகழ்வின்போது மட்டும் இதுவரை 9 பேர் காயங்களுக்குள்ளாகியிருப்பதாக அறியப்படுகிறது.

காளையடக்குதலில் முதலாமிடத்தைப் பெறுபவருக்கு கார் ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலினும், இராண்டாமிடத்துக்கு வருபவருக்கு மோட்டர் சைக்கிள் ஒன்றை, தி.மு.க. இளையோரணித் தலைவரும் முதலமைச்சரின் மகனுமான உதயநிதியும் பரிசாகக் கொடுப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

மொத்தமாக 704 காளைகளும், 300 போட்டியாளர்களும் இவ்வருட நிகழ்வுகளில் பங்குபற்றியுள்ளதாக அறியப்படுகிறது. ஏழு சுற்றுக்களைத் தொடர்ந்து காளைகளின் சொந்தக்காரர்களுக்கும், அவற்றை அடக்குபவர்களுக்கும் தங்க நாணயங்கள், வீட்டு பாவனை இயந்திரங்கள் (appliances), ஈருருளிகள், புடவைகள், இனிப்பு பதார்த்தங்கள், பணப் பொதிகள் ஆகியன பரிசுகளாக வழங்கப்படுகின்றன.