தமிழ்நாடு: இந்தித் திணிப்புக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டம்
இந்தியா முழுவதும் இந்தி மொழியைத் திணிப்பதற்கு எதிராக தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள தி.மு.க. தலைமைச் செயலகங்களில் அக்டோபர் 15 அன்று ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. தி.மு.க. வின் முக்கிய தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் ஆகியோர் இவ்வார்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர். வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய தி.மு.க. இளையோரணித் தலைவரும் சட்டசபை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், தமிழ் நாட்டில் இந்த்தித் திணிப்பு முயற்சிகள் தொடருமானால் டெல்ஹியிலுள்ள பிரதமர் அலுவலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கும் தாம் தயார் எனத் தெரிவித்துள்ளார்.
“‘ஒரு நாடு ஒரு மொழி’ என்ற பா.ஜ.க. அரசின் சுலோகத்திற்கு எதிராக தொடக்கி வைக்கப்பட்டுள்ள இப் போராட்டம் 2024 பொதுத் தேர்தலுக்கான ஆரம்பம் எனவும், 2019 இல் தமிழ் நாட்டில் எப்படி பா.ஜ.க. தோற்கடிக்கப்பட்டதோ அதே போல் 2024 இல் நாடு முழுவதிலும் பா.ஜ.க. தோற்கடிக்கப்படும்” உதயநிதி மேலும் தெரிவித்தார்.
தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பமல்லாத அனைத்துக் கல்லூரிகளிலும் இந்தியைக் கட்டாயபூர்வ கற்கை மொழியாக அறிவிக்கவேண்டுமென உத்தியோகபூர்வ மொழிகளுக்கான பாராளுமன்றக் குழு தனது 11 ஆவது அறிக்கையில் பரிந்துரைத்தமையைத் தொடர்ந்து இந்திய மத்திய அரசு இந்தி மொழித் திணிப்பை அறிவித்திருந்தது. இதன் மூலம் மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள IIT, IIM, AIIMS போன்ற கல்லூரிகளில் அனைத்து போதனைகளும் இந்தி மொழியிலேயே வழங்கப்படும். இதனால் இந்தி மொழி கற்காத பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் அரிதாகிப்போகும் என தமிழ்நாடு உயர்கல்வி அமைச்சர் கே.பொன்முடி தெரிவித்துள்ளார்.