India

தமிழ்நாடு ஆளுனர் ரவியின் சேட்டைகள் – பதவி மாற்றக் கோரிக்கை

ஜனவரி 09 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தின் பருவகால இருக்கை ஆரம்பமானது. இவ்வமர்வை சம்பிரதாய முறையில் ஆரம்பித்து வைக்க தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என் ரவி எழுந்து தனது பேச்சை ஆரம்பித்தபோது தி.மு.க. உட்பட்ட பல கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதைப் பொறுக்க முடியாத ஆளுனரும் கோபத்தோடு சபையை விட்டு வெளியேறினார் எனக் கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக ஆளுனர் ரவியின் நடவடிக்கைகள் அவரது கடமை வரையறைகளுக்கு அப்பாற்பட்டதாக இருப்பதாக தி.மு.க. மற்றும் பங்காளிக் கட்சியினர் மத்தியில் முறியிட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு தனது பெயரை மாற்றி தமிழகம் என்று அழைக்கவேண்டும் எனப் பரிந்துரைத்திருந்தார். தமிழ்நாடு என்ற பெயர் அது ஒரு தனி நாடு என்பதைக் குறிப்பதாகக் கற்பனை செய்துகொண்டு ரவி அவர்கள் தனது வியாக்கியானங்களைத் தெரிவித்து வருகிறார். அதுமட்டுமல்லாது இந்த வருடத்துக்கான ஆளுனரது பொங்கல் விழா அழைப்பிதழில் தனது பதவியை ‘தமிழக ஆளுனர்’ என்றே பதிந்திருந்தார். ஆளுனரது இந்த நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்படப் பலரும் மிகக் கடுமையாக எதிர்த்திருந்தனர்.

இந் நிலையில் ஜனவரி 09 அன்று சட்டமன்ற அமர்வின் முதலாவது நாளில் ஆளுனர் ரவியின் பேச்சைத் தொடர்ந்து தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் (இரு பிரிவுகளும்) ஆகியவற்றின் உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்ததன் மூலம் தமது எதிர்ப்பைத் தெரிவுசெய்திருந்தனர்.

ஆளுனரின் பேச்சின்போது அவர் அம்பேத்கார், காமராஜர், பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றோரது பெயர்களைக் குறிப்பிடுவதையோ அல்லது தமிழ்நாட்டின் திராவிடக் கோட்பாட்டுடனான ஆட்சி பற்றிக் குறிப்பிடுவதையோ அல்லது தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு பற்றிக்குறிப்பிடுவதையோ தவிர்த்திருந்தார். ஆளுனர் பேச ஆரம்பித்ததுமே தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பைச் செய்திருந்தனர். ஆளுனரது பேச்சில் தமிழ்நாடு தலைவர்களது பெயர்கள் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டமை பற்றி முதல்வர் ஸ்டாலின் தனது கண்டனத்தைத் தெரிவிக்கும் பிரேரணையொன்றைச் சபையில் கொண்டுவந்திருந்தார்.

ஆளுனர் தனது பேச்சைத் தமிழில் ஆரம்பித்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்க ஆரம்பித்தபோது தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து “தமிழ்நாடு வாழ்கவே”, “எங்கள் நாடு தமிழ்நாடு” என்பது போன்ற சொற்றொடர்களை உரத்துக் கூறிக்கொண்டு சபையிலிருந்து வெளியேறினார்கள். அவர்களைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர். ஆளுனர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மற்றும் பா.ஜ.க. வின் வேலைத்திட்டத்துக்கு அமையப் பணியாற்றுகிறார் என அவர்கள் ஆளுனரைக் குற்றஞ்சாட்டியுள்ளனர். நீட் தேர்வு, சூதாட்டம் ஆகியவற்றுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட சட்ட நகல்கள் சட்டமாக்கப்படாமல் இருப்பதற்கு ஆளூனர் ரவியே காரணம் எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பொதுவாக ஆளுனரது பேச்சு தமிழ்நாடு அரசினால் தயாரிக்கப்பட்டு ஆளுனருக்கு வழங்கப்படுவதும் அதை அவர் வாசித்த பின்னரே பேசுவதும் வழக்கமெனினும் இந்தத் தடவை எழுதிக் கொடுக்கப்பட்ட பேச்சின் பல பகுதிகளை ஆளுனர் வேண்டுமென்றே தவிர்த்திருந்தார் எனவும் அதைச் சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் கண்டனப் பிரேரணையை முன்வைத்ததாகவும் கூறப்படுகிறது. சபையில் பிரேரணை நிறைவேறியதும் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னரே ஆளுனர் அவசரம் அவசரமாக சபையைவிட்டு வெளியேறினார் எனவும் கூறப்படுகிறது. இதன் மூலம் ஆளுனர் தேசத்தையே அவமதித்துவிட்டார் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார். ஆணுனரோடு அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்திருந்தனர்.

பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சிறிநிவாசன், பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை ஆகியோர் தி.மு.க. மற்றும் பங்காளிக் கட்சிகளின் நடவடிக்கைகளைக் கண்டித்திருக்கின்றனர். ஆளுனரின் பதவி வரையறைகளுக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளினால் அதிருப்தியடைந்த தமிழ்நாட்டின் அரசியல் தலவர்கள் பலர் அவரைப் பதஹ்வியிலிருந்து அகற்றவேண்டுமெனக் குரலெழுப்பி வருகின்றனர். (தி நியூஸ் மினிட்)