தமிழ்நாடு அரசின் முழு இரவு மகாசிவராத்திரி விரத நிகழ்வுக்கு விடுதலைச் சிறுத்தை கட்சி எதிர்ப்பு

தமிழ்நாட்டிலுள்ள கபாலீஸ்வரர் கோவிலில் முழு இரவிலான மகாசிவராத்திரி விரத அனுட்டான நிகழ்வொன்றை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறக்கட்டளைத் திணைக்களம் ஒழுங்குசெய்தமைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. வெள்ளி இரவன்று வெளியிட்ட அறிக்கையில் “தமிழ்நாடு அரசு இக் கொண்டாட்டத்தைக் கொண்டாடுவது ஆபத்தானது” என அக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வன்னிய அரசு தெரிவித்துள்ளார்.

“கோவில்களை நிர்வகிப்பதற்கென உருவாக்கப்பட்ட இந்துசமய அறக்கட்டளைத் திணைக்களம் அந்நிர்வாக முகாமைத்துவத்துடன் நின்றுவிட வேண்டும். ஒரு மத சார்பற்ற அரசு எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் இந்த அரசு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. போன்றவற்றைத் திருப்திப்படுத்தவே இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது” என அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. அரசு இப்படியான நிகழ்வுகளை ஒழுங்கு செய்வது தவறான செய்தியைக் கொடுக்கும். முந்தைய அ.இ.அ.தி.மு.க. அரசுகூட இப்படியான நிகழ்வுகள் செய்வதைத் தவிர்த்து வந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெறவுள்ள இக் கொண்டாட்டத்தில் சங்கீதம், நடனம், விவாதங்கள் என முழு இரவிலான நிகழ்வுகளை ஒழுங்குசெய்துள்ளதாக தமிழ்நாடு அரசு விளம்பரப்படுத்தி வருகிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆளும் தி.மு.க. வின் கூட்டணியில் ஒரு பங்காளிக் கட்சியாகும்.