தமிழ்நாடு: அகதி முகாமில் பிறந்த ஈழத்தமிழருக்கு இந்திய குடியுரிமை
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மத்திய அரசு இணக்கம்
திருச்சி அகதி முகாமில் 1986 இல் ஈழப்பெற்றோருக்குப் பிறந்த நளினி என்பவருக்கு மத்திய அரசு இந்தியக் குடியுரிமையையும் கடவுச்சீட்டு ஒன்றையும் வழங்கியிருக்கிறது. நளினி பிறந்தது முதல் இம் முகாமிலேயே வளர்ந்து திருமணமாகித் தனது இரண்டு பிள்ளைகளுடன் வாழ்கிறார். தனது பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக அவர் அகதி முகாமை விட்டு வெளியே சென்று வாழ விரும்பியிருந்தாலும் மத்திய அரசு அதற்கு அனுமதி வழங்கவில்லை.
இருப்பினும் றோமியோ றோய் அல்ஃப்றெட் என்ற வழக்கறிஞரின் உதவியுடன் நளினி இந்தியக் குடியுரிமைக்கான விண்ணப்பத்தை பூர்த்திசெய்து மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தார். இவ்வழக்கறிஞரின் உதவியுடன் இந்தியக் குடியுரிமைச் சட்டத்தைப் பூரணமாக வாசித்து அதைப்பற்றிய விளக்கத்தையும் நளினி பெற்றிருந்தார். இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்த முதல் சிலரில் நளினியும் ஒருவர். நளினியின் வெற்றியைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுமெனத் தான் எதிர்பார்ப்பதாகவும் அகதி முகாம்களில் பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் இனிப் பிரகாசமாகவிருக்குமென தான் நம்புவதாகவும் நளினி தெரிவித்திருக்கிறார்.
இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின்படி இந்திய மண்ணில் பிறந்த எவரும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் எனக்கூறப்படுகிறது. ஆனால் அவ்விண்ணப்பங்களைக் கவனியாமல் விடுவதன்மூலம் இந்திய அரசு ஈழத்தமிழ் அகதிகளை உதாசீனம் செய்துவந்தது. இதை எதிர்த்து நளினி வழக்கறிஞரின் உதவியுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ஆகஸ்ட் 14 அன்று நளினிக்குச் சார்பாகத் தீர்ப்பை வழங்கியிருந்தது. இதன் பிரகாரம் நளினிக்கு உடனடியாக குடியுரிமை வழங்கப்படவேண்டுமென்பதோடு இந்தியக் கடவுச்சீட்டையும் அவருக்கு உடனே வழங்கவேண்டுமெனத் தீர்ப்பு வழங்கியிருந்தது.
நளினியின் முதல் நோக்கம் இவ்வகதி முகாமிலிருந்து வெளியேறித் தன் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலமொன்றை அமைத்துக் கொடுக்கவேண்டுமன்பதே. “எனது இளமைப்பருவம் கழிந்துவிட்டது. நான் இந்த முகாமிலிருந்து வெளியேறி எனது மகன்கள் இருவரும் நல்ல கல்வி வாய்ப்பைப் பெறுவதற்கேற்ற நல்ல பாடசாலைகளில் சேர்த்து விடுவதே எனது பிரதான நோக்கம். எனக்குக் கிடைக்காத வாழ்வு அவர்களுக்காவது கிடைக்கட்டும். இந்தியக் குடியுரிமையைப் பெற்றதஹ்ன் மூலம் நான் அதைச் சாதிக்கலாம் என நம்புகிறேன். அத்தோடு என்னைப்போல முகாம்களில் இருக்கும் பலர் குடியுரிமையைப் பெற வாய்ப்புகள் கிட்டும் என நம்புகிறேன்” எனக் கூறுகிறார் நளினி.
இந்திய அகதி முகாம்களில் பிறந்தவர்கள் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கமுடியும் என்பதுகூட, 2014 வரை இம்முகாம்களில் இருப்பவர்களுக்குத் தெரியாது என்கிறார் சரவணன். இவர் 1990 முதல் அககி முகாமில் வாழ்ந்து வருகிறார். 2014 இல் சென்னை பல்கலைக் கழகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட மாந்நடு ஒன்றில் பல்வேறு பல்கலைக்கழகங்களிலுமிருந்து துறைத்தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். முகாம்களில் வாழும் அகதிகள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளும் அங்கு வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. அதற்கு முகாம்களிலிருந்த சில கற்றவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். அப்போதுதான் முதன் முதலாக இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின்படி முகாம்களில் பிறந்த பிள்ளைகள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது அகதிகளுகுத் தெரியவந்தது. இதன் பின்னர் பலரும் குடியுரிமக்கு விண்ணப்பித்திருந்தார்கள். அவர்களில் நளினியும் ஒருவர்.
சிறப்பு அகதி முகாம்களில் பிறந்தவர்களுக்காக குடியுரிமை விண்ணப்பங்களில் உதவிகளைப் புரியும் இன்னுமொரு வழக்கறிஞரான கென்னெடி என்பவரின் கருத்துப்படி 10,000 த்துக்கும் மேலானவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் எனத் தெரிகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 90,000 த்துக்கும் அதிகமான அகதிகள் வாழ்கிறார்கள். இவர்களில் 90% த்துக்கும் மேலானோர் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க விரும்புகிறார்கள். மேற்கு நாடுகளில் போல அகதிகளுக்கென இந்தியாவில் ஒரு சீரான திட்டம் இல்லை. அனுமதியின்றி உள்ளே வருபவர்கள் அனைவரும் சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் எனவே கணிக்கப்படுகின்றனர். (தி நியூஸ் மினிட்)