தமிழ்த் திரை | விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படங்கள்


-திரை அலசல்

மாயமான்

வீடுகளுக்குள் முடக்கப்பட்டு சின்னத் திரைகளைக் கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் தமிழ்த் திரை ரசிகர்களுக்கு விரைவில் விடுதலை கிடைக்கப்போகிறது – கொறோனேஸ்வரி மனது வைத்தால்-. ஆகஸ்ட் 23 முதல் தமிழ்நாடெங்குமுள்ள திரையரங்குகள் முடக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தன. “ஆனானப்பட்ட ஜாம்பவன்களையெல்லாம் பார்த்துவிட்ட எனக்கு நீங்கள் எம்மாத்திரம்” எனத் திரையங்கு வாசல்களில் கொரோனா காத்திருக்க, “வருவது வரட்டும் தலிவண்ட அண்ணாத்தையைப் பார்க்காமல் விடுறதில்லை” என ரசிகர்களும் மல்லுக்கட்ட வியாபாரிகளுக்கோ “இதுக்குத்தானே பார்த்திருந்தோம் பாலகுமாரா” மொமென்ட்.

சரி, வினாயக சதுர்த்தியோடு அரங்குகளின் திரைகளைப் பற்றி எரியவைக்கப்போகும் படங்கள் என்னவெனப் பார்ப்போம்.

தலைவி

அரவிந்தசாமி – இல்லை கங்கானா றனோவை – முக்கிய பாத்திரமாகக் கொண்டு எடுக்கப்பட்ட மறைந்த ‘தலைவி’ செல்வி ஜயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படம். செப்டம்பர் 10 தமிழ்நாடு திரையரங்குகளை அழவைக்கப்போகிறது. ஏப்ரல் மாதம் வெளியிடப்படவிருந்த இப்படத்தை கொரோணா அம்மா சென்சார் பண்ணி வைத்திருந்தார். முடக்கத்துக்குப் பிறகு தமிழ்நாடு திரைகளை அலங்கரிக்கப்போகும் முதல் படம் என இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. தலைவி எப்போதும் ‘தலைவி’ தான். ‘அண்ணாத்தை’யால் கூட அவரைப் பின்தள்ள முடியவில்லை. மூன்று மொழிகளில் ஏக காலத்தில் வெளியிடப்படுகிறது. வடக்கிலிருந்து கொண்டுவரப்பட்டிருந்தாலும் கங்கானா றனோ அம்மா ஜயலலிதாவோடு மிகவும் பொருந்திப் போகிறார். அரவிந்தசாமி இதில் எம்.ஜி.ஆராக நடிக்கிறார். ம்ம்ம்.. நோ கொமென்ட்.. ஏ.எல்.விஜே இயக்குகிறார்.

லாபம்

விஜே சேதுபதி (yeah அவர் தான்), சுருதி ஹாசன் நடிக்கும் இப்படத்தை செப்டம்பர் 9 இலேயே அரங்குகளில் வெளியிடுவோம் எனத் தயாரிப்பாளர்கள் அடம் பிடிக்கிறார்கள். ‘தலைவி’யோடு போட்டி போட்டு எவரும் வென்றதாகச் சரித்திரமில்லை. தேசிய விருதைப் பெற்ற இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய படம் இது. துரதிர்ஷ்டவசமாக கடந்த மார்ச் மாதம் அவர் மாரடைப்பினால் இறந்துபோனார். இதுவே அவர் இயக்கிய கடைசிப் படம்.

‘தலைவி’, ‘லாபம்’ ஆகிய இரண்டுக்கும் திரையிடலுக்கான திகதி குறிப்பிட்ட நிலையில், மேலும் பல படங்கள் post production நிலைகளில் இருந்துகொண்டு ‘பிரமாண்ட வெளியீடு’ வெருட்டல்களுடன் ரசிகர்களை பானைக் கடைகளில் (பொங்கலுக்காக) வரிசையில் நிறுத்தி வைத்துள்ளன. அதிகாரபூர்வமாக தயாரிப்பாளர்கள் வெளியீட்டுத் திகதிகளை அறிவிக்கவில்லையாயினும், அடுத்த சில மாதங்களில் அவை பெருந்திரைகளுக்கு வருமென நம்பப்படுகிறது. அவற்றில் சில:



டாக்டர்

சிவகார்த்திகேயன், பிரியங்கா மோஹன் நடித்த ஒரு, வகையான, சிரிப்புப் படம். வினாய், யோகி பாபு, இளவரசு, அர்ச்சனா ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். நெல்சன் டிலிப்குமார் இயக்கியிருக்கிறார். ஏற்கெனவே பல தடவைகள் ‘இந்தா வருகிறது’, ‘அந்தா வருகிறது’ என வெருட்டிவந்த இப்படம், வந்தால் சிரிக்கலாம். மார்ச் 26 இல் வெளிவருமெனக் கூறப்பட்ட இப்படம் தமிழ்நாடு தேர்தலுக்காகப் பின்போடப்பட்டிருந்தது என்றார்கள். பின்னர் ரம்ழான் பெருநாளையொட்டி வெளிவருமென்றார்கள் ஆனால் கொறோனா 2.0 அதை அனுமதிக்க மறுத்துவிட்டது. இப்போது பொங்கலுக்கு ? கொறோனா 3.0? வந்தால் வாழ்த்துக்கள்.

முருங்கைக்காய் சிப்ஸ்

தலைப்பைப் பார்த்து சிரிக்கலாம். வேறு யார் இப்படித் தலைப்பை வைப்பார்கள், நம்ம இயக்குநர் கே. பாக்யராஜ் தான். சந்தனு பாக்கியராஜ், ஊர்வசி, மனோபாலா, யோகிபாபு, முனிஷ்காந்த், மயில்சாமி ஆகியோருடன் கே.பாக்கியராஜும் இணைந்து நடிக்கும் ஒரு romantic comedy. சந்தனு பாக்க்யராஜ், விஜயின் ‘மாஸ்டர்’, ‘பாவக் கதைகள்’, ‘அதுல்ய ரவி’ ஆகிய படங்களில் முன்னணி பாத்திரங்களில் நடித்தவர். ‘விரைவில் வெளிவருகிறது’ வகைக்குள் அடக்கலாம்.

எம்.ஜி.ஆர். மகன்

பொராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்து வெளிவரவிருக்கும் இப்படத்தில் நமக்குப் பிடித்த சமுத்திரக்கனி, சத்தியராஜ் ஆகியோருடன் மிமாலினி ரவி, சிங்கம் புலி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் நடிக்கிறார்கள். சிரிக்க வாய்ப்பிருக்கும் போலிருக்கிறது – பொறுப்பில்லை.

மஹா

யூ.ஆர். ஜமீல் இயக்கும் முதல் படம். ஹன்சிகாவின் 50 ஆவது படம். சிலம்பரசன் டீ.ஆர். மற்றும் சிறிகாந்த் நடிக்கிறார்கள். ஒரு crime thriller டுமீல் வகை.



யாதும் ஊரே யாவரும் கேளிர்

இன்னுமொரு புதிய இயக்குனர் – வெங்கட கிருஷ்ணா றோக்நாத் – இயக்கத்தில் விஜே சேதுபதி, மேகா ஆகாஷ் நடிக்கும் இப்படம் அரசியல் செய்தியோடு வருகிறது. குண்டுவெடிப்புடன் வீட்டை விட்டுச் சிதறியோடும் மக்கள்; அகதியாகத் தமிழ்நாட்டுக்கு வரும் சேதுபதி; அங்கு அவர் பாரபட்சத்துடன் நடத்தப்படுவது “தமிழ் நாட்டிற்கு வந்தபோதுதான் என்னால் தமிழில் பேச முடிந்தது ஆனால நான் அதற்காகக் கைதுசெய்யப்பட்டேன்” என வசனம் பேசுவது… இன்னுமொரு ஈழத்தமிழ் அரசியல். கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ தலைப்பாகச் சொருகப்பட்டது பொருத்தமாயினும், இது கணியன் பூங்குன்றனாரின் காலமோ அல்லது அவர் காலத்து தமிழ்நாடோ அல்ல. சேதுபதி ஈழத்தமிழர்களுக்கு நிறையக் கடன்பட்டிருக்கிறார் என்பவர்கள் இதை ஒரு ‘damage control’ படமாகப் பார்க்கவும் வாய்ப்புண்டு. (‘படத்தைப் படமாய்ப் பாருங்கள்’) ஆனால் படம் அதைவிடப் பெரிய செய்தியைத் தமிழ்நாட்டு மக்களுக்குச் சொல்லுமானால், let us spin it.

அரண்மனை 3

சுந்தர் சீ யின் horror-comedy அரண்மனை 3. ஆர்யா, அண்ட்றியா, ராஷி கன்னா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். நமது பெரு விருப்பிற்குரிய மறைந்த நடிகர் விவேக் மற்றும் மனோ பாலா, யோகி பாபு ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். சிரிப்புப் படமானாலும் அழவேண்டியும் ஏற்படலாம்.

மாநாடு

சிலம்பரசன் டீ.ஆர்., கல்யாணி பிரியதர்சன் ஆகியோரை முன்னணி நட்சத்திரங்களாகக் கொண்டு வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வரும் ஒரு political thriller. பாத்திரங்கள் மீண்டும் மீண்டும் கட்ந்த காலங்களுக்குள் சுழன்றுவரும் ஒரு வகையான பயங்கர அனுபவத்தைப் படம் தருகிறது என்கிறார்கள். அரசியலே பயங்கரம் நிறைந்ததும், மீண்டும் மீண்டும் ஒரே காலச் சுழற்சிக்குள் மக்களை அமுக்கி எடுப்பதும் தானே. ஏதோ, அதுவும் விரைவில்….

அண்ணாத்தே

‘தலைவி’யில் தொடங்கித் ‘தலிவனில்’ முடிப்பது தான் எனது ஸ்டைல். யேஸ்.. சூப்பர் ஸ்டார் ரஜ்நிகாந்த்தின் – பலரை விசராக்கிய – படம் நவம்பர் 4, தீபாவளி வெளியீடாக வெளிவருகிறது. ரஜினிகாந்த், மீனா, குஷ்பூ, நயந்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஸ்றொஃப், ஜகபதி பாபு, பிரகாஷ் ராஜ், சூரி, சதிஷ் எனப் பலரும் இதில் நடிக்கிறார்கள். கலாநிதி மாறனின் பணத்தில், சன் பிக்சர்ஸ் எடுத்திருக்கும் இப்படத்தை சிவா இயக்குகிறார். டி. இமான் இதற்கு இசையை வழங்கியிருக்கிறார்.

இப்படங்கள் எல்லாவற்றையும் திரையரங்குகளில் பார்க்க விரும்பாதவர்கள், கொறோனேஸ்வரியை வெளியே விட்டுவிட்டு, வீட்டுக்குள் இருந்து ‘கள்ளக் கொப்பி’களைச் சுடச் சுடப் பார்த்து மகிழவும் வழிகளுண்டு.

Enjoy!