EntertainmentIndia

தமிழ்த் திரை | சூடு பிடிக்கிறது ஜாய் பீம் – வன்னியர் தகராறு

ரி.ஜே.ஜானவேலின் இயக்கத்தில் உருவாகி சூர்யா நடித்து உலகப் புகழ் பெற்ற ‘ஜாய் பீம்’ படத்தில் வன்னியர்களை இழிவாகக் காட்டப்பட்டது தொடர்பாக அதன் தயாரிப்பாளர்களான நடிகர் சூர்யா, அவரது மனைவியும் நடிகையுமான ஜோதிகா மற்றும் இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்குத் தொடரும்படி சென்னை நீதிமன்றமொன்று உத்தரவிட்டிருக்கிறது.

“சமூகங்களுக்கிடையே வன்முறையைத் துண்டும் நோக்கோடு இப் படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது” என வன்னியர் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கமான ‘ருத்திர வன்னியர் சேனை’ என்னும் அமைப்பு நீதிமன்றத்தில் மேற்கொண்ட முறைப்பாடு காரணமாக நீதிமன்றம் இவ்வுத்தரவை வழங்கியிருக்கிறது. வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் விதத்தில் இப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது என இவ்வமைப்பு தனது முறைப்பாட்டில் தெரிவித்திருக்கிறது.

இப் படத்தில் வரும் பல காட்சிகளும், அதில் கெட்டவர்களாகச் சித்தரிக்கப்படுபவர்கள் பலர் வன்னியர்கள் என்பது போலவும் இருப்பது, இதர சமூகங்கள் மத்தியில் ‘வன்னியர் எதிர்ப்பு’ உணர்வை வளர்ப்பதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அம்சங்கள் எனவும் இது சமூகங்களுக்கிடையே வன்முறையைத் தூண்டும் முயற்சியே எனவும் கூறி இவ்வமைப்பு நவம்பர் 2021 இல் சென்னை சைதாப் பேட்டை நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தது.

ஏப்ரல் 29, 2022 அன்று நீதிமன்றத்தில் இவ் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா மற்றும் இயக்குனர் ஞானவேல் எவரும் நீதிமன்றத்தில் சமூகமளித்திருக்கவில்லை. முறைப்பாட்டாளர்களின் கோரிக்கையைப் பரிசீலித்த நீதிபதி, இம் மூவருக்கும் எதிராக முதற் தகவல் அறிக்கையைத் (FIR) தயாரிக்கும்படி காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். மே 20 அன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கிறது.

இப்படத்தில் வரும் சப் இன்ஸ்பெக்டர் பாத்திரம் மிகவும் கொடுங்கோலர் ஒருவரெனச் காட்சிப்படுத்தப்பட்டதோடு அவர் வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை வலுக்கட்டாயமாகச் சித்தரித்துமிருந்தது. வன்னியர் சங்கத்தின் ‘அக்னி குண்டம்’ சின்னம் பொறித்த நாட்காட்டி ஒன்று இந்த சப் இன்ஸ்பெக்டர் பாத்திரத்தின் அலுவலகச் சுவரில் மாட்டப்பட்டிருந்தமை இதை உறுதிப்படுத்தியிருந்தது. இது வன்னியர் சமூகத்தின் மீது திட்டமிட்டுத் தொடுக்கப்பட்ட தாக்குதல் என பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார். இவ்வெதிர்ப்பைத் தொடர்ந்து அக்காட்சியிருந்து அக்குறிப்பிட்ட நாட்காட்டி மாற்றப்பட்டுவிட்டது. இருப்பினும் இது வன்னியர் மீதான மக்களின் அபிப்பிராயத்தை நிரந்தரமாகக் கெடுத்துவிட்டது என வன்னியர் சமூகம் போராடி வருகின்றது.

இவ் விவகாரம் தொடர்பாக ‘ஜாய் பீம்’ தயாரிப்பாளர்கள் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரவேண்டுமெனவும், வன்னியர் சமூகத்தைப்பற்றிய சித்தரிப்புகள் படத்திலிருந்து நீக்கப்படவேண்டுமெனவும், வன்னியர் சமூகத்தினால் புனிதமாகப் போற்றப்படும் ‘அக்னி குண்டம்’ சின்னம் அகற்றப்படவேண்டுமெனவும், திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இந் நடவடிக்கைகளுக்காக தயாரிப்பாளர்கள் வன்னியர் சமூகத்துக்கு 5 கோடி ரூபாக்கள் நட்ட ஈடு வழங்கவேண்டுமெனவும் கோரி வன்னியர் சங்கம் சூர்யா, ஜோதிகா ஆகியோரின் தயாரிப்பு நிறுவனமான் 2D என்ரெற்றெயிண்ட்மெண்ட் மீது வழக்குப் பதிந்திருந்தது.

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது காவல்துறையினர் மேற்கொள்ளும் மிருகத்தனமான அட்டூழியங்களை வெளிக்கொணரும் இப்படம் பல உலக அரங்குகளில் வரவேற்பைப் பெற்ற ஒன்று.