EntertainmentIndia

தமிழ்த் திரை | ‘சில்க்’ சிமிதாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது


தமிழ்த் திரையுலகில் மிகவும் கவர்ச்சியான தாரகைகளில் ஒருவரான ‘சில்க்’ சிமிதாவின் வாழ்க்கைச் சரிதம் படமாகிறது. இதில் ‘சில்க்’ சிமிதாவாக அனசூயா பரத்வாஜ் நடிக்கிறார். இவர் தமிழ்த் திரையில் பிரபலமாகவில்லையாகினும், ரங்கஸ்தாளம் என்ற தெலுங்கு படத்தில் உதவி நடிகைப் பாத்திரமொன்றைச் சிறப்பாகச் செய்ததற்காக ஃபிலிம்ஃபெயர் விருதைப் பெற்றிருக்கிறார்.

விஜயலக்ஸ்மி வட்லபட்ல என்ற இயற்பெயரைக் கொண்ட சிமிதா 1980, 90 களில் பரந்தளவு ரசிகர்களைக் கவர்ந்த தென்னிந்திய திரைவானை அதிரவைத்த ஒரு நட்சத்திரமாவார். வண்டிச்சக்கரம் (1979) மூலம் அறிமுகமாகியபோது ‘சில்க்’ என்ற பட்டமும் அவரை ஒட்டிக்கொண்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 450 இற்கும் மேலான படங்களில் நடித்த சிமிதா, செப்டம்பர் 23, 1996 அன்று சென்னையிலுள்ள அவரது அப்பார்ட்மெண்டில் தற்கொலை செய்துகொண்டதாக அப்போது அறிவிக்கப்பட்டது.

கமல் ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மோகன்லால், மமூட்டி, நாகார்ஜுன் ஆகிய முன்னணி நடிகர்களது படங்களில் சிமிதா நடித்திருக்கிறார். தயாராகும் படத்தில் விஜே சேதுபதி முக்கிய பாத்திரமேற்று நடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

சிமிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் முயற்சி சமீபத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் நடிகையுமான அனசூயா பரத்வாஜ் சிமிதாவாக நடிக்கவுள்ளதாகத் தெரிய வருகிறது. இச் செய்தியை உறுதிப்படுத்துவது போல் அவர் தனது இன்ஸ்ராகிராம் பதிவில் தனது படத்துடன் செய்தியை பகிர்ந்திருக்கிறார்.



சில்க் சிம்க்தாவின் வாழ்க்கை வரலாறு ஏற்கெனவே இந்தியில் The Dirty Picture (2011) தயாரிக்கப்பட்டு அதில் சிமிதாவாக நடித்த வித்யா பாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய ஃப்லிம் விருதை வாங்கிக் கொடுத்திருந்தது. பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் இனால் 180 மில்லியன் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இப் படம் 1.17 பில்லியன் ரூபாய்களை ஈட்டிக் கொடுத்தது. மிலான் லுத்றியா இப் படத்தை இயக்கியிருந்தார்.