‘தமிழ்த்தாய் வாழ்த்து’ இனிமேல் தமிழ்நாட்டின் மாநிலப் பாடல் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசாணையாகப் பிரகடனம்
தமிழ்நாடு அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் அனைத்தும் இனிமேல் தமது உத்தியோகபூர்வ கீதமாகத் தமிழ்த்தாய் வாழ்த்தையே இசைக்கவேண்டுமெனவும், தனியார் நிகழ்வுகளிலும் அவை இசைக்கப்படுவதை அரசு ஊக்குவிக்குமெனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
டிசம்பர் 17 அன்று முதல்வர் ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட இப் பிரகடனத்தின்படி, தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சகல அரச அலுவலகங்களிலும், கல்வி நிலையங்களிலும் நடைபெறும் நிகழ்வுகளில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்படவேண்டுமெனவும் அப்போது உடலியக்கம் தளர்ந்தவர்களைத் தவிர ஏனையோர் எழுந்துநின்று மரியாதை செலுத்தவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாது இந் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பதிவு செய்யப்பட்ட இசைத்தட்டுக்கள் அல்லது நாடாக்களிலிருந்து ஒலிபரப்பப்படக் கூடாது எனவும், பயிற்றப்பட்டவர்களால் சொந்தக் குரலில் பாடப்படவேண்டுமெனவும் அரசாங்கம் கட்டளையிட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து முறைப்படி இசைக்கப்படுவதைச் வழக்கமாக்கும் காலம் வந்துவிட்டது எனத் தமிழ்நாடு அரசு மேலும் தெரிவித்துள்ளது.
1891 இல் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை அவர்களால் எழுதப்பட்டு 1970 இல், அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களால் மாநிலத்தின் பிரார்த்தனைப் பாடலாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப் பாடலின் வரிகளுக்கு பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.
இப்பாடல் இசைக்கப்பட்ட ஒரு நிகழ்வில் அது தமிழ்நாட்டின் தேசிய கீதம் இல்லை எனக்கூறி காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜேந்திர சுவாமிகள் எழுந்து நிற்க மறுத்ததைத் தொடர்ந்து அது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கொன்றில் ‘இப் பாடல் பிரார்த்தனைப் பாடலே தவிர மாநில கீதமல்ல’ என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
அதேபோல, இந்திய தொழில்நுட்பக் கல்லூரியின் சென்னை வளாகம் சமீபத்தில் தனது பட்டமளிப்பு விழாவின்போது இப் பாடலைப் பாட மறுத்தமையைத் தொடர்ந்து கல்லூரியின் அனைத்து நிகழ்வுகளிலும் இப் பாடல் இசைக்கப்படவேண்டுமென, மாநில கல்வி அமைச்சர் கே.பொன்முடி கல்லூரியின் பணிப்பாளர் பாஸ்கர் ராமமூர்த்திக்குக் கட்டளையிட்டிருந்தார்.
இச் சம்பவங்களைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இப் பிரார்த்தனைப் பாடலை இப்போது தமிழ்நாடு மாநிலத்தின் மாநிலப்படலாக, உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தியுள்ளார்.