NewsWorld

தமிழ்க் குடும்பத்தை நாடுகடத்துவது அவுஸ்திரேலிய குணமல்ல – தொழிற்கட்சித் தலைவர்

அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு தற்போது கிறிஸ்மஸ் தீவில் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருக்கும் நடேசலிங்கம் குடும்பத்தை நாடுகடத்த வேண்டாமென்று பல்லாயிரக்கணக்கான அவுஸ்திரேலியர்கள் குரலெழுப்பி வருகிறார்கள்.

சிட்னி ஊடகவியலாளர் அலன் ஜோன்ஸ் இந்நாடுகடத்தலுக்கெதிராக மிகவும் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டுவரும் வேளையில் அவருடன் கை கோர்த்திருக்கிறார் தொழிற்கட்சித் தலைவர் அந்தோனி அல்பனீஸ். “அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழ்க் குடும்பத்தை நாடுகடத்துவது ‘அவுஸ்திரேலிய குணாம்சம்’ அல்ல என அவர் அரசாங்கத்தைச் சாடியிருக்கிறார். “அவுஸ்திரேலியாவில் பிறந்த இரண்டு குழந்தைகளுடன் இக் குடும்பம் குயீன்ஸ்லாந்திலுள்ள பிலோஎல கிராமத்தில் தொடர்ந்து வாழ்வதற்கு அரசு அனுமதிக்க வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார்.

நான்கு வயதுடைய கோபிகா, இரண்டு வயதுடைய தருணிக்கா ஆகியோரின் தாயார் பிரியா 2012 இலும் தந்தையார் நடேசலிங்கம் 2013 இலும் படகுகள் மூலம் அவுஸ்திரேலியக் கரையை வந்தடைந்து அகதிகளாத் தஞ்சம் கேட்டிருந்தனர். இரண்டு குழந்தைகளும் அவுஸ்திரேலியாவில் பிறந்திருந்தாலும் அவர்களது அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது.

அவுஸ்திரேலிய தொழிற்கட்சித் தலைவர் அந்தோனி அல்பனீஸ்

2018 மார்ச் மாதம் இக் குடும்பம் கைது செய்யப்பட்டு சிறீலங்காவிற்கு நாடுகடத்தப்படுவதற்காக அவர்களது உடமைகளை எடுத்துக்கொண்டு புறப்படுவதற்கெனெ ஒரே ஒரு மணித்தியாலம் அவகாசம் கொடுக்கப்பட்டது.

“பிரியா புனித வின்சண்ட் டி போல் இல் தொண்டராகவும், கணவர் ஒரு இறைச்சித் தொழிலகத்திலும் பணிபுரிகிறர்கள். அவர்கள் வாழும் சிறு நகர மக்கள் இக் குடும்பத்துக்கு ஆதரவு வழங்குகிறார்கள். மக்கள் செறிவற்ற பிரதேசங்களில் சனத்தொகையை அதிகரிக்க வேண்டுமென முழங்கும் அரசாங்கம் இப்படிச் செய்கிறது” என அல்பனீஸ் கூறினார்.

இக்குடும்பம் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல, பொருளாதார காரணக்களுக்காகவே அகதி அந்தஸ்துக் கோரினார்கள் என்ற காரணத்துக்காகவே நீதிமன்றம் அவர்களது கோரிக்கையை நிராகரித்தது என்ற தீர்ப்பைத் தான் ஏற்றுக்கொள்வதாக அல்பனீஸ் குறிபிட்டார்.

“இறுக்கமான எல்லைகளை நான் வரவேற்கின்றேன். ஆனால், இக் குடும்பம், இச் சூழ்நிலையில், அவர்கள் அகதிகளல்ல என நிரூபிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் இங்கு நீண்ட காலம் வாழ்ந்தவர்கள். நீதிமன்றம் அவர்களைப் பொருளாதார அகதிகளாகக் கண்டிருந்தது. பல மில்லியன் அவுஸ்திரேலியர்களும் இங்கு பொருளாதாரக் காரணங்களுக்காகக் குடியேறியவர்கள் அல்லது அவர்களின் வாரிசுகள் தான்” என்று அல்பனீஸ் மேலும் தெரிவித்தார்.

இன்னுமொரு சந்தர்ப்பத்தில் ஒரு வீட்டுப் பணிக்காக வந்தவர் நாடுகடத்தப்படவிருந்த போது அவ்விவகாரத்தில் தற்போதய உள்விவகார அமைச்சர் தலையிட்டு பணக்காரர் தமது வீடுகளுக்கு தற்காலிக விசா அனுமதியோடு பணிப்பெண்களை அழைப்பதற்கு வழி செய்ததை ஜோன்ஸ் நினைவூட்டினார்.

அல்பனீஸ் இவ் விடயத்தை நேரடியாகப் பிரதமர் ஸ்கொட் மொறிசனிடம் எடுத்துச் சென்றார் இருப்பினும் இவ் விடயத்தில் தலையிட அவர் மறுத்துவிட்டார். உண்மையில் இதில் சட்டப்படி தலையிட அருகதையுள்ளவர் குடிவரவு அமைச்சர் டேவிட் கோல்மன் தான்.

“உண்மை என்னவென்றால், குடிவரவு அமைச்சரின் நடவடிக்கைகளில் தலையிட அதிகாரமில்லை என்று ஸ்கொட் மொறிசன் சொல்ல முடியாது. அவர் ஒரு சமிக்ஞை கொடுத்தால் சகலதும் முடிந்துவிடும்” என்றார் அல்பனீஸ்.