தமிழர் விடுதலைச் செயற்பாட்டாளர் திரு. அன்ரன் ஃபிலிப் சின்னராசா மறைவு!
‘அருட் தந்தை சின்னராசா’ என அன்புடன் அழைக்கப்பட்ட திரு. அன்ரன் ஃபிலிப் அன்னரசா நேற்று (பெப். 26) ரொறோண்டோவில் காலமானார். கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் நேற்று தனது இறுதிச் சுவாசத்தை முடித்துக்கொண்டார்.
உலகத் தமிழர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட திரு அன்ரன் சின்னராசா தமிழீழத் தேசியப் போராட்டத்துக்காகத் தமிழீழத்தில் மட்டுமல்லாது பல உலக அரங்குகளிலும் இறுதிவரை செயற்பட்டு வந்தவர். 1983 ஜூலை 25, 27 திகதிகளில் நடைபெற்ற வெலிக்கடை சிறைப் படுகொலையில் தப்பிய அவர், இதர தமிழ் அரசியல் கைதிகளுடன் மட்டக்களப்புச் சிறைசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். முதலாவது மட்டக்களப்பு சிறையுடைப்பின்போது (செப்.23, 1983) பலர் தப்பியோடியபோதும் திரு சின்னராசா மற்றும் நிர்மலா நித்தியானந்தன் போன்றோர் அப்போது தப்பியோடவில்லை. பின்னர் சென்னையிலிருந்த தலைவர் பிரபாகரனின் வேண்டுகோளுக்கமைய மட்டக்களப்பு நாகப் படையச் சேர்ந்த பரமதேவா தலைமையில் ஜூன் 10, 1984 அன்று மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சிறையுடைப்பின்போது திரு அன்ரன் சின்னராசா, நிர்மலா நித்தியானந்தன் ஆகியோர் காப்பாற்றப்பட்டு சென்னைக்குக் கொண்டுவரப்பட்டனர்.
இதன்பிறகு கனடா வந்த திரு சின்னராசா தொடர்ந்தும் விடுதலைப் புலிகள் ஆதரவாளராகச் செயற்பட்டு வந்தார் எனினும் சகல தரப்பினராலும் பொதுவாக மதிக்கப்பட்ட ஒருவர். எப்போதும் புன்முறுவலுடன் பண்பாகப் பேசும் சுபாவம் கொண்டவர்.
இறுதிக் காலங்களில் அவர் இறுதிப் போரின்போது இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை மற்றும் மனிதத்துக்கெதிரான குற்றங்கள் தொடர்பான ஐ.நா. விசாரணைகளுக்குத் தேவையான ஆவணத் தொகுப்பு விடயங்களில் செயற்பட்டு வந்ததாக அறிய முடிகிறது.
1983 ஜூலை கலவரத்தைத் தொடர்ந்து ஜூலை 25, 27 களில் நடைபெற்ற வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலையின் சாட்சியாக அவர் தனது அனுபவங்களைக் கூறும் காணொளியும் அதன் உள்ளடக்கமும் இங்கே தரப்படுகிறது.
1983 இல் கொழும்பு நகரம் முழுவதும் எரிந்து கொண்டிருந்தது எனக்கு இந்னும் நினைவில் இருக்கிறது. அந்த காற்று இன்னும் நினைவில் இருக்கிறது. ஆகாயம் முழுவதும் இருளாலும், தீயாலும் நிரம்பியிருக்கிறது. அப்போது நானும் சிலரும் வெலிக்கடைச் சிறைச்சாலையில் நடைபெற்ற படுகொலையிலிருந்து எப்படித் தப்பிப் பிழைத்தோம் என்பது பற்றிய கதை இது.
வெலிக்கடைச் சிறைச்சாலை 18 ஆம் நூற்றாணடில் பிரித்தானியரால் கட்டப்பட்டது. ‘தகவல்களை மறைத்து வைத்திருந்தேன்’ என்ற குற்றத்துக்காக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நான் அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்தேன். கத்தோலிக்க அருட் தந்தை அ. சிங்கராயர், அரசியல் கட்சியான தமிழ் ஈழ விடுதலை முன்னணியின் தலைவர் டாக்டர் தர்மலிங்கம், அக் கட்சியின் செயலாளர் திரு. கோவை மகேசன், காந்தீயம் அமைப்பின் தலைவர் டாக்டர் சோமசுந்தரம் ராஜசுந்தரம், அவரது உதவியாளர் கட்டிடப் பொறியிலலாளர் திரு எஸ்.ஏ.டேவிட், டாக்டர் ஜெயகுலராஜா, வண. ஜெயதிலகராஜா, திரு நித்தியானந்தன் ஆகிய 8 பேர் அங்கு என்னுடன் இருந்தார்கள்.
ஜூலை 23 அன்று யாழ்ப்பாணத்தில் ஏதோ ஒரு சம்பவம் நடைபெற்றதாக அன்று நாங்கள் அறிந்தோம். ஜூலை 25 ம் திகதி ‘உடல்கள் கொழும்பு கனத்தை மயானத்துக்கு கொண்டுவரப்படுமெனவும் கூறப்பட்டது. அன்று மாலை கனத்தையில் கலவரம் வெடித்தது. எங்களில் 9 பேர் அதியுயர் பாதுகாப்புச் சிறைக்கு மாற்றப்பட்டோம்.
அதே வேளை மேலும் 65 அரசியல் கைதிகள் ‘சப்பல் பிரிவு’ என்ற அப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். வானிலிருந்து பார்க்கும்போது இப் பிரிவு சிலுவை மாதிரித் தெரியும் என்பதால் அதற்கு அப்பெயர் சூட்டப்பட்டது. அங்கு நான்கு கூடங்கள் இருந்தன. குட்டிமணி, தங்கத்துரை போன்ற முக்கிய அரசியல் கைதிகள் அங்கு வைக்கப்பட்டிருந்தார்கள்.
கலவரம் ஆரம்பித்த முதலாம் நாள் (ஜூலை 25) நாம் அனைவரும் சிறைக்கு வெளியே கொண்டுவரப்பட்டோம். வானம் முழுவதும் புகைமண்டலமாக இருந்தது. வெளியே மிகப்பெரிய கலவரமொன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது எனவும் பல எரியூட்டல்களும் படுகொலைகளும் நடைபெற்றிருப்பதாகவும் அறிந்தோம்.
அன்று மாலை பல கூக்குரல்களும், அழுகுரல்களும் கேட்டன. அது சப்பல் பிரிவில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் மீதான தாக்குதல்கள் என்பதை நாம் உடனேயே அறிய முடிந்தது. அனைத்து சிங்கள கைதிகளும் விடுவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கைகளில் கிடைத்தவற்றை வைத்து தமிழ்க் கைதிகளைத் தாக்கிக்கொண்டிருந்தனர். அன்று மட்டும் 35 தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்டிருந்தனர்.
அதே வேளை நாங்கள் இருந்த பிரிவில் முதலாவது தளத்தில் 9 கூடுகளும், இரண்டாவது தளத்தில் திறந்த மண்டபத்துக்கு ஒரு படலையும் ஒரு கதவும் இருந்தன. 26ம் திகதியன்று எந்தவித விளக்கமுமின்றை எனது குழுவை இரண்டாவது தளத்துக்கு மாற்றினார்கள். முதலாம் நாள் படுகொலையின்போது உயிர் தப்பியவர்களை நாம் இருந்த முதலாவது தளத்துக்கு மாற்றியதாகப் பின்னர் அறிந்தோம். அங்கு ஒவ்வொரு கூட்டிலும் ஒருவர் சிறைவைக்கப்பட்டார். இப்படுகொலையில் பலருக்கும் பலவித கொடுமைகள் நிகழ்த்தப்பட்டிருந்தாலும் நான் எநது குழுவுக்கு இழைக்கப்பட்டவைபற்றி இங்கு கூறுகிறேன்.
ஜூலை 27 அன்று நாம் இருந்த கட்டிடம் தாக்குதலுக்கு உள்ளாகியது. சிங்களக் கைதிகள் வந்து எமது சிறையின் அனைத்து பூட்டுக்களையும் உடைத்தார்கள். உள்ளே வந்த வர்கள் எங்கள் அனைவரையும் வெளியே கொண்டுவர முயன்றார்கள். அதில் மூன்று கூடுகளை அவர்களால் உடைக்க முடியாது போனதால் அதிர்ஷ்டவசமாக நாங்கள் உயிர் தப்பினோம்.
அதே வேளை முதலாவது தளத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த சமபவங்களை எம்மால் கேட்க முடிந்தது. இதன்போது நாங்கள் எம்மைத் தயாராக்கிக்கொள்ள முடிந்தது. வழிபாடு செய்யவும், திருப்பணி செய்யவுமென எங்கள் அறையில் ஒரு மேசை இருந்தது. அம் மேசையை உடைத்து அதன் கால்களைத் தயாராக வைத்திருந்தோம். பூட்டுக்களை உடைக்க வருபவர்களின் கைகளை உடைப்பதுவே எங்கள் நோக்கம். இருந்தாலும் 20-30 கைதிகள் இரண்டாவது தளத்துக்கு வந்து எமது கூடுகளின் பூட்டுக்களை உடைத்துவிட்டார்கள். அவர்களோடு பேசிச் சமாதானப்படுத்த டாக்டர் ராஜசுந்தரம் முயற்சித்துப் பார்த்தார். ஆனாலும் அவர் வெளியே இழுக்கப்பட்டு அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார். நாங்கள் உடனேயே படலையை மூடி அவர்கள் உள்ளே வருவதைத் தடுக்க முயன்றோம். நான்கு மேசைக் கால்களுடன் சுமார் அரை மணித்தியாலங்கள் போராடினோம்.
அப்போது இராணுவத்தினர் வந்து கண்ணீர்ப்புகையைப் பிரயோகித்தார்கள். அது ஒரு மூடப்பட்ட கட்டிடமாகையால் நாமும் அதனால் பாதிக்கப்பட்டோம். அனைத்து சிங்களக் கைதிகளையும் இராணுவத்தினர் வெளியே கலைத்துவிட்டனர். துப்பாக்கிகளோடு உள்ளே வந்த இராணுவத்தினர் நாமும் எதையாவது செய்தோமென விசாரித்தார்கள். பின்னர் நாம் அனைவரும் முழந்தாளிடப்பட்டோம். அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள், எம்மையும் கொன்றுவிடப் போகிறார்களோ என்று நாம் நினைத்தோம். அதிர்ஷ்டவசமாக ஒரு உயரதிகாரி வந்து எங்கள் எல்லோரையும் வெளியேறுமாறு பணித்தார்.
நாம் அனைவரும் கண்ணிர்ப்புகையால் வெகுவாகப் பாதிக்கப்படிருந்தோம். கண்ணிர்ப் புகை என்றால் என்ன என்பதை நான் அப்போதுதான் உணரமுடிந்தது. பின்னர் நாம் வெளியேரும்போது கட்டிடத்தின் முன்னால் 18 உடல்களைக் கண்டோம். சில மணித்தியாலங்களின் பின்னர் எங்களில் எட்டுப் பேரும், முதலாவது தளத்தில் உயிர் தப்பிய ஒன்பது பேரும் ஒரு இராணுவ வண்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டோம். ஒரு முழு இரவும் சாப்பாடு எதுவுமில்லாது நாம் அவ்வண்டியில் படுக்க வைக்கப்பட்டோம். பலர் படுத்திருந்த இடத்திலேயே மல சலங்களை வடித்துக்கொண்டார்கள். ஒரு சாரமும் பனியனுமே என்னுடைய உடுப்புக்கள். அடுதநாட் காலை நாம் வெளியே கொண்டுவரப்பட்டு கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில் ஒரு சிறு விமானத்தில் கொண்டுசெல்லப்பட்டோம். அது மட்டக்களப்பு சிறைச்சலைக்கு என்பதைப் பின்னர் அறிந்துகொள்ள முடிந்தது. இரண்டு மாதங்களின் பின்னர் நாம் விடுதலை செய்யப்பட்டோம்.
இறந்தவர்கள் பட்டியலில் எனது பெயர் இருந்தமையினால் சிறைச்சாலைப் படுகொலை பற்றி அறிந்த எமது குடும்பம் எனது மரணச்சடங்குகளையும் செய்து முடித்திருந்தது. இந்தியாவிலிருந்த எனது நண்பர்கள் எனது பெயரில் பல நினைவு நிகழ்வுகளையும் நடத்தியிருந்தனர்.
****
இந்தியாவிலிருந்து கனடா வந்த திரு சின்னராசா அவர்கள் குடிவரவாளர்கள் கனடாவில் வெற்றிகரமாகக் காலூன்றுவதற்கான பணியாளராகச் செயற்பட்டுவந்த அதே வேளை தமிழரின் விடிவுக்காகமும் தொடர்ச்சியாகப் பணியாற்றி வந்தார். தமிழர்களின் முற்றுமுழுதான விடுதலையை அவரால் காணமுடியவில்லை எனினும் அவர் வாழ்ந்து முடித்த இந்த இரண்டாவது பிறப்பின்போது அவர் திருப்தி தருமளவுக்குத் தொண்டுகளை ஆற்றிச் சென்றிருக்கிறார். அவரது ஆத்மா திருப்தியடைய வேண்டி நாமும் பிரார்த்திக்கின்றோம். (Video Credit: NCCT)