‘தமிழர் பிரச்சினை தொடர்பாக இந்தியாவிடமிருந்து எதுவித அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை’ – ஜி.எல்.பீரீஸ்

“இலங்கையின் வடமாகாணத் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக இந்தியாவிடமிருந்து எந்தவிதமான அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை” என இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜயசங்கரின் அழைப்பின் பேரில் பெப்ரவரி 6 அன்று அமைச்சர் பீரிஸ் இந்தியா சென்றிருந்தார்.

இப் பயணத்தின்போது ஸ்றாட்நியூஸ் குளோபல் ஆசிரியர் நிதின் கோகலேயுக்கு அளித்த பேட்டியின்போது அமைச்சர் பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.

“இலங்கையின் இனப்பிரச்சினை நிறுவனம் சார்ந்த குறைபாடுகள் மட்டுமே. அடிமட்ட மக்களிடையே எந்தவித பிரச்சினைகளும் இல்லை. எனவே இப்பிரச்சைனை தீர்க்கமுடியாத ஒன்றென நாம் கருதவில்லை. தற்போது எமக்கு முன்னாலுள்ள பிரச்சினைகள் பொருளாதாரமும், சீனாவுடனான எமது உறவு போன்றனவே” என அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அயலார் உறவு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், பல துறைகளிலும் இணைக்கப்பட்ட பொருளாதாரமொன்றைக் கட்டியெழுப்ப அது விரும்புகிறது. இதன் பிரகாரம் இலங்கையின் மின்சாரத் தேவைகளைப் பூர்த்திசெய்ய இரு நாடுகளிடையேயும் மின்னிணைப்புகளை ஏற்படுத்துவதன் அவசியத்தை அமைச்சர் பீரிஸ் வலியுறுத்தினார். அதே வேளை கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையம்மிந்தியாவின் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டதன் மூலம் கப்பற் போக்குவரத்தில் இந்தியாவுடன் இணைப்புகளை மேற்கொள்ள முடியும். இத்துறைமுக அபிவிருத்திப் பணிகள் அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் ஆரம்பமாகவிருக்கிறது.

அதே வேளை, சீனாவுடனான உறவு தொடர்பாக அதை நாம் பெரிதும் மதிக்கும் அதே வேளை இந்தியாவைப் பகைத்துக்கொண்டு அதைத் தாம் முன்னெடுக்கப்போவதில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கருடனான அமைச்சர் பீரிஸின் சந்திப்பு திங்களன்று (07) புது டெல்ஹியில் நடைபெற்றது. இருநாடுகளுக்குமிடையிலான உறவு சார்ந்த பல்வேறு விடயங்கள் இங்கு பேசப்பட்டதாகத் தெரிகிறது. இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறகொட மற்றும் தூதுவராலய அதிகாரிகள், இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஹார்ஷ் வர்தன் ஷிரிங்க்லா, இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இச்சந்திப்பின் பின்னதான அறிக்கையில் “இலங்கை வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பு மிகவும் காத்திரமானதாக இருந்தது. இலங்கையின் தற்போதைய நிலையை முன்னேற்றவல்ல பொருளாதாரம், முதலீடுகள் பற்றிப் பேசப்பட்டது. அத்தோடு இலங்கையின் எரிபொருள் வழங்கல் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்படவேண்டிய மேலதிக நடவ்டிக்கைகள் பற்றியும் பேசப்பட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.