தலையங்கம்

தமிழர் தெருவிழா -2026

கனடாவில் தமிழர் செறிந்து வாழும் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள மார்க்கம் நகரில் சனி, ஞாயிறு (ஆகஸ்ட் 22, 23) நாட்களில் நடைபெறவிருக்கும் தெருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 10 வருடங்களாக ஸ்காபொரோ நகரில் கனடிய தமிழர் பேரவையினால் நடத்தப்பட்டுவந்த இவ்விழா மார்க்கம் நகரபிதாவின் அழைப்பின் பேரில் இம்முறை மார்க்கம் நகருக்கு நகர்ந்திருக்கிறது. இந்நகர்விற்காக பின்னணியில் உதவியாகவிருந்த அனைவருக்கும் நன்றி.


வழக்கம்போல இந்திய, இலங்கை, கனடிய தமிழ்க் கலைஞர்கள் பங்குபற்றுகிறார்கள். கனடிய தமிழ் மற்றும் இதர சமூக வணிக நிறுவனங்கள் கொடையாளிகளாக முன்வந்திருக்கிறார்கள். பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், பொதுச்சேவை

நிறுவனங்கள் சாவடிகளை அமைக்கவிருக்கிறார்கள். குழந்தைகளின் விளையாட்டு திடல்கள், கலாச்சார காட்சிப்படுத்தல்கள், தமிழ் அகதிகள் சார்பில் கனடிய அரசு தொடர்ந்து காட்டிவரும் தார்மீக அனுசரணைகளை நினைவுகொள்ளும் வகையில் எண்பத்தாறில் நியூபவுண்லாந்துக்கு அருகே அத்லாந்திக கடலில் எம்மவர்களைக் காப்பாற்றிய அந்நிகழ்வின் 40 ஆவது ஆண்டு பூர்த்தியை ஞாபகப்படுத்தும் வகையில் அவர்களைத் தாங்கி வந்த படகு என உடலுக்கும் உணர்விற்கும் உரமூட்டும் பல விடயங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.

இவ்வருட தெருவிழா நடைபெறும் இடம் பலருக்குப் பரிச்சயமில்லாதிருக்கலாம். அதற்காக இலகுவான விளக்கத்தைத் தரும் வரைபடமொன்றை இணைத்திருக்கிறோம்.

போதிய அளவு வாகனத் தரிப்பு வசதிகள் உண்டு. Birchmount Road இன் ஒரு பகுதி இதற்காக மூடப்படுகிறது. இப்பகுதி மார்க்கம் நகரின் மையமாக இருப்பதனால் இதைச்சுற்றி இருக்கும் அலுவலக கட்டிடங்கள் வார விடுமுறை கருதி மூடப்பட்டிருக்கும். ஆனால் அவற்றின் பிரமாண்டமான வாகனத் தரிப்பிடங்கள் எமது பாவனைக்கு உபயோகமாகவிருக்கும். அது மட்டுமல்லாது மார்க்கம் / ஸ்டீல்ஸ் சந்திப்பிலிருந்து விசேட பேருந்து சேவைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

தமிழரையும், தமிழர் கலாச்சாரத்தையும் சிறப்பாகக் காட்சிப்படுத்தியமையால் தான் பெரும் சமூகம் எம்மைக் கண்டுகொண்டது. சகல அரசுகளிலும் தமிழர்கள் பிரதிநிதிகளாக இருப்பதற்கு இப்படியான கடந்தகால காட்சிப்படுத்தல்களே காரணம்.

வாருங்கள் வந்துண்டு களித்து உறவாடி ஊர் கூடி தமிழர் தெருவிழாவைச் சிறப்பித்து செல்லுங்கள்.