News & AnalysisSri Lanka

தமிழர்கள் நாடுகடத்தப்படுவதற்கு எதிராக ஜேர்மனியில் ஆர்ப்பாட்டம்

புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட பல தமிழர்களை ஜேர்மானிய பொலிசார் கடந்த சில நாட்களாகக் கைதுசெய்து தடுப்புக் காவலில் வைத்துவருகின்றனர். எதிர்பாராத வகையில் மேற்கொள்ளப்படும் அதிரடி நடவடிக்கைகளின் மூலம் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்படுவதற்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கும் மேலான தமிழர்களை விடுதலை செய்யும்படி கோரி பலநூற்றுக்கணக்கான ஆதரவாலர்கள் பியூரேன், ஃபோர்சைம் தடுப்புக்காவல் நிலையங்களுக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்துவருகின்றனர்.

“இலங்கை இனப்படுகொலை”, “நாடு கடத்தலை நிற்பாட்டு” என்ற கோஷங்களுடன் பல்லின மக்களும் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். ஜேர்மனியின் இடதுசாரி அரசியல் கட்சி மற்றும் செயற்பாட்டாளர்கள் முதல் சாதாரண பொதுமக்கள் வரை பல்ரும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

“தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் தமிழர் மற்றும் தமிழரல்லாத அனைவரும் விடுதலை செய்யப்படவேண்டும். இலங்கையில் போர்க்குற்றங்கள் புரியப்பட்டுள்ளன என்பது மனித உரிமைகள் ஆணையத்தினால் தெட்டத் தெளிவாக நிரூபிக்கப்பபட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள், ஊடக சுதந்திர மறுப்பு, கருத்துரிமை மறுப்பு ஆகிய நடவடிக்கைகள் தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் அவர்களை நாடுகடத்த முடியாது” என ஜேர்மனியின் இடதுசாரிக்கட்சியின் பேச்சாளர் ஹென்னிங் வீ. ஸ்ரோல்சென்பேர்க் தெரிவித்தார்.

“தமிழ் மக்களின் நிலைமை பற்றி எனது தமிழ் நண்பர்கள் மூலம் நான் அறிந்து கொண்டேன். இந் நாட்டில் வெகுவாக இணைந்து வாழ்ந்துகொண்டுவந்தவர்களும், இங்குள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றுத் தேறியவர்களும்கூட நாடுகடத்தப்படவுள்ளார்கள் எனக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன்” என ஒரு ஜேர்மானிய ஆர்ப்பாட்டக்காரர் தெரிவித்தார்.

“இவ் விடயம் எனக்கு மிகவும் மோசமான அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. அதனால்தான் நான் அரசாங்கத்தின் இந் நடவடிக்கையை எதிர்த்து மேற்கொள்ளப்படும் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள நான் வந்துள்ளேன். ஜேர்மனி முன்னர் செய்த அதே தவறை மீண்டுமொருதடவை செய்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியாமலுள்ளது. அதனால் தான் நான் இன்று உங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்கிறேன். கலந்துகொள்ள அனுமதித்தமைக்கு நன்றி” என அவர் மேலும் தெரிவித்தார்.

மற்றுமொரு இளைய தலைமுறை ஜேர்மானிய ஆரப்பாட்டக்காரர் பேசுகையில், “இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவதன் மூலம் இவர்கள் கொல்லப்பட்டோ அல்லது அவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத நிலையோ ஏற்படலாம். அவர்கள் நாடுகடத்தப்படாமலிருக்க நாம் உரிய அனைத்தையும் செய்ய வேண்டும்” என்றார். (நன்றி: தமிழ் கார்டியன்)