தமிழரை அவமானப்படுத்திய யாழ். விமானநிலையத் திறப்பு விழா

பேரா. றட்னஜீவன் ஹூல் / கொழும்பு ரெலிகிராப்
தமிழில்: சிவதாசன்

இக் கட்டுரை Colombo Telegraph பத்திரிகைக்காக பேராசிரியர் றட்னஜீவன் ஹூல் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. முடிந்தவரை கருத்துப் பிசகின்றி மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. பேராசியர் ஹூலுக்கும் கொழும்பு ரெலிகிராப் பததிரிகைக்கும் நன்றி.

பேராசிரியர் றட்னஜீவன் ஹூல்

சென்ற வியாழன் (16.10.2019) சிறீலங்காவிற்குச் சிறப்பான நாள். யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையம் இன்று திறக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தை சிறீலங்காவுடன் இணைப்பது; தமிழ்நாட்டிலிருந்து வரும் (இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் அதிகம்பேர் தமிழ்நாட்டிலிருந்துதான் வருகிறார்கள்) சுற்றுலாப் பயணிகளுக்கு யாழ்ப்பாணத்தை மட்டுமல்ல அனுராதபுரம், சிகிரியா, பொலநறுவ, திருகோணமலை போன்ற இடங்களைத் காட்டுவது; இந்தியாவின் தொழில்துறையை, குறிப்பாக அதன் இயந்திரமாக விளங்கும் தமிழ்நாட்டின் தொழில்துறையை இணைப்பது என்று பலவித வாய்ப்புகளை இவ் விமானநிலையத் திறப்பு தந்திருந்தது.

நான் தவறவிட முடியாத நிகழ்வு இது. யாழ்ப்பாணத்தில் பிறந்தவன் என்ற முறையில், நான் 1960கள், 1980களின் பிற்பகுதி, 1990 கள் என்று பல தடவைகள் பாவித்த விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாகத் தரமுயர்த்தப்படவிருக்கிறது என்பது குறித்து என் மனம் புளகாங்கிதமடைந்தது. இதைச் சாத்தியமாக்கிய அத்தனை பேருக்கும் என் மனம் நன்றி சொன்னது.

எங்கள் எல்லோரையும் ஒரு தேசமாக இணைக்க வேண்டிய நிகழ்வு அதற்கு எதிர்மறையான விளைவைக் கொண்டுவந்திருக்கிறது.

பேராசிரியர் றட்னஜீவன் ஹூல்

இருப்பினும், இவ் விமான நிலையம் ஒரு தேசிய முக்கியத்துவம் பெறுவதற்குப் பதிலாக, ஒரு இனவாதப் பொறாமைக்குள் சிக்கிப்போனது. விமானப்படைத் தளபதி தனது ஒத்துழைப்பை வழங்க மறுத்திருந்தார். 16ம் திகதியன்று, இந்திய தொழில்நுட்பக் குழுவொன்று, பலமணி நேர கடும் வேலைக்குப் பின்னர் தேனீர் கிடைக்குமா என்று கேட்டதற்கு “இந்தியர்கள் இதைத் தமிழர்களுக்காகவே செய்கிறார்கள். உங்களுக்கு நாங்கள் தேனீர் வழங்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களா?” என்று அந்த தளபதி பதிலளித்தார். களைத்துப்போன இந்தியர்கள் 2 மணி போல் ஜீப் ஒன்றைக் காங்கேசந்துறைக்கு அனுப்பி சிற்றுண்டிகளைப் பெற்றுக்கொண்டார்கள்.

நாட்டை முன்னேற்றவும், நாட்டின் ஐக்கியத்தைப் பேணவும், பொருளாதாரத்தை முன்னேற்றவுமென்று ஆரம்பிக்கப்பட்ட திட்டம் இனவாத உணர்வுகளுக்குள் முடங்கிப்போனது. தமிழத் தேசியக் கூட்டமைப்பின் உதவியுடன் பிரதமரால் செயற்படுத்தப்பட்ட இத் திட்டம் இப்போது சில சிங்களவர்களால் சொந்தம் கொண்டாடப்படுவதுமல்லாமல் தமிழருக்கு அவர்கள் செய்யும் சிறு உதவியாகவும் இது பார்க்கப்படுகிறது.

யாழ்.சர்வதேச விமான நிலையம்

இந்த ஆரம்ப நிகழ்வுக்கு வருவதற்கு ஏற்கெனவே இணங்கியிருந்த ஜனாதிபதி, அழைப்பிதழ் அச்சிடப்பட்ட பின்னரும்கூடத் தன் வருகையை உறுதிப்படுத்தாமல் இருந்திருக்கிறார். எனவே இன் நிகழ்வில் பிரதமரும் சில அமைச்சர்களுமே வருவதாகவும், இதை ஒரு ஐ.தே.கட்சியின் நிகழ்வாகப் பார்க்கப்படுமென்பதாகவுமே இருந்தது. ஜனாதிபதியின் வருகை, குறிப்பாக அவர் தனது கட்சியில் வகித்த பதவிகளைத் துறந்திருந்த படியால், இன் நிகழ்வை ஒரு பொது நிகழ்வாகக் காட்டியிருக்கும். தேர்தல் காலமாகையால் பிரதமரே அதிக அதிகாரங்களைக் கொண்ட மனிதராகையால் தேர்தல் ஆணையகம் சாதாரண கட்டுப்பாடுகளையே விதித்திருந்தது.

இந் நிகழ்வை ஒரு ‘தமிழ்’ விடயமாகக் காட்ட விரும்பாமையால் நிகழ்வை ஒழுங்குசெய்யும் பொறுப்பு கொழும்பு அதிகாரிகளிடமே கொடுக்கப்பட்டிருந்தது. பல சிங்கள அதிகாரிகள் அழைக்கப்பட்டு அவர்களது பெயர்கள் பொறிக்கப்பட்ட முன் வரிசை ஆசனங்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தன. தமிழர்களுக்கு ஆசனங்கள் ஒதுக்கப்படவில்லை. பாடசாலைப் பிள்ளைகள் மண்டபத்தின் பின்னால் நிறுத்தப்பட்டிருந்தனர்.

பலத்த இராணுவப் பிரசன்னம் ஜனாதிபதி வருவதைத் தெரிவித்தது.

நாடா வெட்டும் நிகழ்வு பிரதான மக்கள் கூட்டத்திலிருந்து ஒதுக்குப்புறமாக ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. அந்த இடத்துக்கு யார் யார் வரலாமென்பதைப் பாதுகாப்பு அதிகாரிகளே முடிவு செய்தார்கள். யாழ்ப்பாணத்தின் அதி உயர் அரசாங்க அதிகாரியாகிய அரசாங்க அதிபர் வேதநாயகன், மாகாணசபைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் அவர்களுடன் நானும் தமிழ் அதிகாரிகளால் அந்த இடத்துக்குச் செல்ல வழிகாட்டப்பட்டோம். அங்கு எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனக் கூறினார்கள். இதனால் பா.உ. ஈ.சரவணபவனும் வேறு சிலரும் அனுமதிக்கப்பட்டனர். வேதநாயகன் அமைதியாகப் பிரதான கூடாரத்துக்குச் சென்றார். கதவுக்கு அருகில் நின்ற ஒரு சிங்கள அதிகாரி உள்ளே சென்று, சிவஞானம் மாகாணசபையின் தலைவர் எனவும் அவரை அனுமதிக்கும்படியும் பரிவுடன் கேட்டுக்கொண்டார். அப்படியிருந்தும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பிறகு நாங்கள் இருவரும் பிரதான முகாமுக்குச் சென்றோம்.

அங்கு ஒரு சிறுவன் எனக்கொரு பின் வரிசை ஆசனமொன்றைத் தந்தான். சிவஞானம் ஆசனத்துக்காக அங்குமிங்கும் திரிந்தார். வெறுமையான ஆசனமொன்றக் கண்டு அதில் உட்கார முற்பட்டபோது அது வேறொருவருக்கு ஒதுக்கப்பட்டது என அவருக்குக் கூறப்பட்டது.

நாடா வெட்டும் நிகழ்வைப் பெரும் திரையொன்றில் எங்களுக்குக் காட்டுவதாக இருந்தது. அப்படியொன்றைப் பார்த்ததாக எனக்கு ஞாபகமில்லை. சென்னையிலிருந்து விமானம் தரையிறங்குவது எங்களுக்குக்குக் காட்டப்படவிருந்தது. விமானம் ஓடுபாதையில் ஊர்ந்துவந்து நிற்பதையே நாங்கள் பார்க்க முடிந்தது.

பின்னர், பெட்டிகளில் உணவு பரிமாறப்பட்டது. எனக்கு சைவ உணவு வேண்டுமென்று கேட்டபோது வேண்டுமென்றால் மாமிசத்தைப் பிரித்து வைத்துவிட்டு உண்ணும்படி கூறப்பட்டது. நான் மறுத்துவிட்டேன். இதர சைவ உணவைக் கேட்ட தமிழர்கள் ஒரு சாண்ட்விச்சைப் பகிரவேண்டியிருந்தது. மற்றையோர் மகிழ்ச்சியோடு குதப்பிக்கொண்டிருந்தார்கள். யாழ்ப்பாணக் கலாச்சாரத்தின் உத்தியோகபூர்வ உணவைத் தருவதாகக் கூறிக்கொள்ளும் ‘திண்ணை’ யின் பெயர் அப் பெட்டிகளில் அச்சிடப்பட்டிருந்தது. பாடசாலைக் குழந்தைகள் வாயூறி நிற்கும்போது இப்படியான கொடுமையான செயலுடன் பங்குதாரர்களாகத் ‘திண்ணை’ இருந்திருக்கக் கூடாது.

பின்னர் கொழும்பிலிருந்து வந்த ‘பெரிசுகள்’ நாடா வெட்டுதலை முடித்துவிட்டு எங்கள் மண்டபத்துக்குள் வந்தார்கள். அவர்கள் முன் வரிசையில் அமர்ந்தார்கள். பா.உ.க்கள் மாவை சேனாதிராஜாவையும், சுமந்திரனையும் திரையில் பார்த்தேன். ஆளுனர், பிரதமர், ஜனாதிபதி, இந்திய தூதுவர் ஆகியோரும் அங்கிருந்தனர்.

முதலில் நிகழ்வில் பங்குகொள்வேன் என ஒத்துக்கொண்டு அழைப்பிதழில் தன் பெயரைப் பதிவுசெய்தபின் வருவது பற்றி உறுதிசெய்துகொள்ளாமல் முரண்டு பிடித்துப் பின்னர் ஒருவாறு வந்து சேர்ந்திருந்தார் ஜனாதிபதி. இது விழா ஒழுங்கில் குழப்பத்தை விளைவித்திருந்தது. நிகழ்ச்சி நிரலில் அவர் பேசுவதற்கு இடம் ஒதுக்கப்படவில்லை. இறுதியாக சுமந்திரன் பேசுவதற்கு ஒதுக்கப்பட்ட நிரலிலிருந்து அவர் பெயர் அகற்றப்பட்டு ஜனாதிபதி பேசுவதற்கு இடம் வழங்கப்பட்டது.

தென்னிலங்கை ஒழுங்கமைப்பாளர்கள், தேர்தல் பிரசாரத்துக்காக, இந் நிகழ்வை ஒரு சிங்கள நிகழ்வாகக் காட்டுவதற்கு அத்தனை முயற்சிகளையும் எடுத்திருந்தார்கள். எல்லாச் சிங்களவர்களும் சிங்களத்திலேயே பேசினார்கள். கொழும்பிலும், யாழ்ப்பாணத்தில் தமிழர் ஒழுங்கு செய்யும் நிகழ்வுகளிலும், உடனடி மொழிமாற்றம் செய்வது வழக்கமெனினும், இங்கு அது நடைபெறவில்லை. எனவே, விமானப்படைத் தளபதி கூறியதுபோல் இது தமிழரருக்கான விமான நிலையமல்ல என்ற செய்தியை உரத்துச் சொல்லவும், தமிழரை வேண்டுமென்றே அவமானப்படுத்துவதற்காகவும் நடத்தப்பட்ட நிகழ்வாகவே நான் பார்க்கிறேன்.

ஆளுனர் மூன்று மொழிகளிலும் பேசித் தேர்தலுக்குப் பின்னரும் தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சித்தார். இந்தியத் தூதுவர் ஆங்கிலத்தில் பேசினார். சேனாதிராஜா தமிழில் பேசினார். ஏனையவர்கள் என்ன பேசினார்கள் என்பது எவருக்கும் விளங்கியதாகத் தெரியவில்லை. பாடசாலைக் குழந்தைகளுக்கு, தமிழில் பேசப்பட்டதைத் தவிர மற்றதெல்லாம் மாயக் குரல்கள் தான்.

சிங்களத்தில் பேசியவர்களது பேச்சுக்கள் அங்கு குழுமியிருந்த தமிழருக்கு எதையும் சொல்லியிருக்கப் போவதில்லைத்தான். நாங்கள் பேசும்போது அதற்கு காரணங்கள் இருக்கும். மற்றவருக்கு ஒரு செய்தியைத் தெரிவிப்பது அதன் முக்கியமான நோக்கம். சபையில் இருந்த பெரும்பாலானாருக்கு சொல்லப்படுவதற்கு செய்தி எதுவுமே இருக்கவில்லை. பிரதமர் பேசும்போது ஒரே ஒரு தடவை ஆங்கிலத்தைப் பாவித்தார். அது இந்திய தூதுவருக்கு நன்றியைச் சொல்வதற்கு மட்டுமே. அவரது நடை தமிழருக்கு ஒரு செய்தியைச் சொன்னதாகவும் இருக்கலாம். அதாவது இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் தமிழர்களோடு பேசுதற்கு இஷ்டமில்லை என்ற கருத்துடன் இது உங்கள் நாடல்ல எனத் தமிழருக்கு அறைந்து சொன்னதாகவும் பார்க்கலாம். அத்தோடு, “விமான நிலையம் தமிழ் மக்களுக்கானதல்ல எனவே எங்களுக்கு வாக்களிப்பதை நிறுத்திவிடாதீர்கள்” எனத் தென்னிலங்கை வாக்காளர்களுக்குச் சொன்ன செய்தியாகவும் இருக்கலாம்.

இதில் மோசமான விடயமென்னவென்றால், பிரதமர் பேசி முடிந்ததும், தனக்கு விருப்பமில்லாத நிகழ்வில் பங்குபற்றக் கட்டாயப்படுத்திய கோபத்திநாலோ என்னவோ, ஜனாதிபதி சடுதியாக எழும்பி வெளியேறிவிட்டது தான். முன் வரிசைகளில் அமர்ந்திருந்த பலரும் எழுந்து அவர் பின்னால் நடந்து சென்றார்கள். உயர் நிலையிலிருந்த பிரதமர் பேசிவிட்ட படியால், சுமந்திரன் பேசுவதற்கு இடமில்லாமல் போய்விட்டது. ஆசன ஒழுங்குகளைச் செய்தபோது மறந்துபோயிருந்த படிநிலை நெறிமுறை அவர்களுக்குத் திடீரென்று ஞாபகத்துக்கு வந்திருந்தது.

எங்கள் எல்லோருக்கும் மிக்க மகிழ்வாக இருந்திருக்க வேண்டிய நிகழ்வு, இனவாதப் பார்வையாளருக்கு வழங்கிய தேர்தல் தகிடுதத்தங்களால் பிசுபிசுத்துப் போனது. எங்கள் எல்லோரையும் ஒரு தேசமாக இணைக்க வேண்டிய நிகழ்வு அதற்கு எதிர்மறையான விளைவைக் கொண்டுவந்திருக்கிறது.