US & Canada

தமிழரின் திறமை: அமெரிக்கா வாழ் 600,000 வெனிசுவேல் குடிவரவாளர்களது நாடகற்றல் நிறுத்தப்பட்டது!

தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தின் கீழ் (Temporary Protected Status (TPS)) அமெரிக்காவில் சட்டபூர்வமாக வாழும் 600,000 வெனிசுவேல் குடிவரவாளர்களை நாடுகடத்தும் ட்றம்ப் நிர்வாகத்தின் கட்டளை சட்டபூர்வமற்றது என சான் ஃபிரான்ஸிஸ்கோவைச் சேர்ந்த மத்திய அரசின் நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்துள்ளார். தேசிய ரீ.பி.எஸ். அலையன்ஸ் எனப்படும் அமைப்பினால் அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பாக இது அமைந்திருக்கிறது. தேசீய ரி.பி.எஸ். சார்பாக இந்த வழக்கை முன்னெடுத்த சட்டத்தரணிகளில் முன்னோடியாக இருந்து செயலாற்றியவர் UCLA சட்ட மன்றத்தைச் சேர்ந்த அகிலன் அருளானந்தம் என்னும் ஒரு தமிழராவார். இவரோடு மேலும் சில சட்டத்தரணிகள் இவ்வழக்கில் பங்கேற்றிருந்தார்கள்.

இக்குடிவரவாளர் பற்றி அமெரிக்க அரசாங்கத்தின் தரப்பில் முன்வைக்கப்பட்ட தவறான தகவல்களைத் தகர்த்தெறிந்ததுடன் அமெரிக்க பிரஜைகளோடு ஒப்பிடுகையில் வெனிசுவேலர்கள் கல்வியிலும் வருமானத்திலும் உயர் சாதனைகளைக் கொண்டவர்களாகவும் மிகக்குறைந்த குற்றச் செயல்களைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என அருளானந்தம் தரப்பு வாதிட்டிருந்தனர். இவ்வாத்தை அமெரிக்க அரசின் தரப்பு மறுதலிக்காமையைத் தொடர்ந்து நாடுகடத்தல் இக்குடும்பங்களுக்கு மட்டுமல்லாது இந்நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்துமெனக்கூறியதுடன் அமெரிக்க அரசின் இத் தீர்மானம் இனவெறுப்பின் காரணமாக எடுக்கப்பட்ட ஒன்று என்ற வாதத்தைத் தான் ஏற்றுக்கொள்வதாகவும் நீதிபதி தீர்ப்பளித்திருந்தார்.