Opinionமாயமான்

தமிழரசுக் கட்சி: சாம்-பந்தம் முறியவேண்டுமா?

மாயமான்

தமிழரசுக்கட்சியிலிருந்து மூப்பேறிய தலைவர் சாம்பந்தன் ஐயா விலகி இளைய தலைமுறைக்கு வழிவிட வேண்டும் என்ற குரல் அவரது குரலை விட ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. அதுவும் எதிர் பாராத வகையில் அவரிடம் நன்மதிப்பைப் பேணிவந்த வலங்கைman சுமந்திரனிடமிருந்து வருவது கொஞ்சம் சீரியஸான விடயம் தான்.

சம்பந்தன் ஐயாவைப் பற்றி சமூக வலைத்தளங்களில் நீண்டகாலமாக அவதூறுகள் வந்துகொண்டிருக்கின்றன. கொழும்பில் ஆடம்பர மாளிகையில் சொகுசாக இருக்கிறார் என்பது முதல் இப்படிப் பல. இதற்கு முதல், அவர் தனது தள்ளாத வயதில் ஒரு படுக்கையறை ‘மாளிகைக்கு’ மூன்று மாடி படிகளில் ஏறிப்போனதைப் பார்த்து இரங்கி மஹிந்த ராஜபக்ச அவருக்கு தற்போதைய ஆடம்பர மாளிகையைக் கொடுத்தார் என்று ஒரு கதை வந்தது. ஆனால் அவரது ஆடம்பரங்கள் பற்றி அலங்காரமாக எழுதுவது சிங்களவர்களல்ல மாறாக தேசியத் தமிழ் புனைகதை வீரர்கள். தமிழரசுக் கட்சியை அடிக்க வேறொன்றும் அல்லது வேறெவரும் இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறார் சாம்பந்தன ஐயா.

சம்பந்தன் ஐயா பதவி விலகவேண்டுமென்பதில் எனக்கும் உடன்பாடுண்டு. அதைக் கட்சிக்குள் பேசித் தீர்த்து ஒரு முடிவுக்குக் கொண்டுவருவது நாகரிகம். அதை விட்டுவிட்டு அதை நியாயப்படுத்துவதற்காக அவர் எத்தனை தடவை பாராளுமன்றம் சென்றார், எத்தனை தடவை வாயைத் திறந்தார் எனக் கணக்கு வைத்து பொதுவெளியில் ஓலம் வைப்பது அசிங்கம்.

சமப்ந்தன் ஐயாவுக்கு உடல் இயக்கம் தளர்வடைந்து போனது பல ஆண்டுகளுக்கு முன்னர். ஆனால் அவரிடம் இன்றுவரை புலனாட்சிக் குறைபாடு (cognitive impairment) இருக்கிறதா என்றால் அது சந்தேகமே. அவரைவிட அறிவாற்றல் குறைந்த, வாயில்லாப் பிறவிகள் பல பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றன. இந்தப் பெரிய அமெரிக்காவில்கூட நாவும், காலும் அடிக்கடி தடுக்கும் ஒரு முதியவர் கையில் அணுக்குண்டுப் பொத்தானைக் கொடுத்துவிட்டு பேசாமல் இருக்கிறார்கள் அமெரிக்கர்கள். சம்பந்தன் ஐயாவிடம் அதிகாரம் இல்லை ஆனால் அனுபவம் இருக்கிறது. நூல் நூலாகக் கழன்றுகொண்டிருக்கும் தமிழரசுக் கட்சியை இன்னும் பிணைத்துக்கொண்டிருக்கும் ஒரு பலமான நூல் அது. அதற்கும் விதி வந்துவிட்டது.

“திருகோணமலை படிப்படியாக சிங்களதேசத்தினால் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றது. அதை எதிர்கொள்ள ஒரு பலமான தலைமை அங்கு தேவை. சம்பந்தன் ஐயாவின் இன்றைய இயங்குநிலைப் போதாமை இதற்கு உதவி செய்யாது. எனவே அவர் கெளரமாகப் பதவி விலக வேண்டும் எனக் கட்சியும் வாக்காளர்களும் எதிர்பார்க்கின்றனர்” என்றொரு அறிக்கை வெளியிடப்பட்டிருக்குமானால் அதை நான் வரவேற்றிருப்பேன். கட்சி பாவம் செய்துவிட்டது.

தற்போதுள்ள தமிழரசுக்கட்சியில் மதிப்பினால் ஒற்றுமையைப் பேணவல்ல தலைவர்கள் என்று குறிப்பிடக்கூடியவர்கள் எவருமில்லை. தளபதிகள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கான களம் கொழும்பு. ஆனால் தலைவருக்கான களம் நிலம் கடந்தது, கடல் கடந்தது. எவருமே நினைவுக்கு வருகிறார்களில்லை.