India

தமிழக வெற்றிக் கழகம்: கட்சிக் கொள்கை அறிவிப்பு

தமிழக நடிகர் விஜய்யைத் தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை மற்றும் உறுப்பினர்களின் நடத்தைக் கட்டுப்பாடுகள் கொண்ட விபரங்கள் நேற்று ( பெப்.19) அறிவிக்கப்பட்டது. பனையூரில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நடிகர் விஜய் நேரடியாகப் பங்குபற்றியிருந்தார்.

நாட்டின் அரசியற் சாசனத்திற்கு முரண்படாமை, மதச் சார்பின்மை, தமிழ் மொழிக் காப்பு, சமூக நீதி ஆகியன கட்சியின் மூலாதாரக் கொள்கைகளென அறிவிக்கப்பட்டது. அத்தோடு கட்சியின் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிக்கான திட்ட வரைவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்திய இராணுவத்தில் பணியாற்றும் தமிழருக்கு தமிழில் மரியாதை செலுத்துதலுக்கான உறுதிபூணுதலுடன் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழுக்காக உயிர் நீத்த தியாகிகளின் பணிகளைத் தொடர்வோம் எனக் கட்சிப் பணியாளர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்ததுடன் நாட்டின் இறைமையையும், ஒருமைப்பாட்டையும் மத நல்லிணக்கத்தையும் பேணுவதுடன் ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதி ஆகியவற்றின் பாதையில் பயணிப்போம் என அவர்கள் உறுதிபூண்டனர்.

அத்தோடு சாதி, சமயம், பால், பிறப்பிடம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட வேறுபாடுகள் களையப்படுவதோடு இவ்விடயங்களில் பாகுபாடுகள் இருக்கக்கூடாது என்ற விடயத்தை மக்களிடம் விழிப்புணர்வு பெறச் செய்யவேண்டுமெனவும் எல்லோருக்கும் சம சந்தர்ப்பமும் உரிமையும் வழங்கப்பட வேண்டுமெனவும் கட்சிப் பணியாளர்கள் உறுதி பூண்டனர்.

கட்சிக்கான அங்கத்தவர்களைச் சேர்க்கும் பணி ஆரம்பிக்கப்பட்டதோடு பெண்களைத் தலைமையாகக் கொண்ட பெண்கள் அணியொன்றை உருவாக்கவும் முதல் தடவையாக வாக்களிக்கவிருக்கும் பெண்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டுமெனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.