தன் குடும்பத்தினருக்காகப் பேரம் பேசிய முன்னாள் ஜனாதிபதி சிறிசேன!

டிசம்பர் 3, 2019

மைத்திபால சிறிசேன குடும்பம்

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னணிக் கட்சிகளிடையே நடைபெற்ற பேரம் பேசலின்போது முன்னாள் நல்லாட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடந்துகொண்ட விதம் பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

பேரம் பேசுதலில் ராஜாவான மஹிந்த ராஜபக்ச சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரிபால சிறிசேன அணியைத் தன்பக்கம் இழுப்பதற்குப் பேரம் பேசினார். தன் சுய தேவைகளை முன்னிறுத்தும் சிறிசேன, பொதுஜன் பெரமுனவில் இணைவதற்கு இரண்டு நிபந்தனைகளை முன்வைத்தார்.

அவரது நிபந்தனைகளை சட்ட பூர்வமான ஒப்பந்தமாக எழுதமுடியாது எனக் கூறிய மஹிந்த ராஜபக்ச தன் குடும்பத்தினரைச் சம்மதிக்க வைத்து இரண்டு தரப்பினருக்குமிடையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் எழுதப்பட்டது. அதில் இருந்த சிறிசேனவின் இரண்டு நிபந்தனைகளும் இவை தான்:

  1. மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் குமாரசிஙக சிறிசேன தொடர்ந்தும் சிறிலஙகா ரெலிகொம் தலைவராக இருக்க வேண்டும்
  2. நாஷனல் ஷேவிங்ஸ் பாங்க் உட்பட்ட சகல அரச நிறுவனங்களினதும் விளம்பரத் தேவைகளைத் தனது மகளான சத்துரிக்கா சிறிசேனவுக்குச் சொந்தமான விளம்பர நிறுவனத்துக்கே கொடுக்க வேண்டும்.

புதிய அரசாங்கம் அமைந்தவுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, தகவல் தொழில்நுட்ப அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு இட்ட கட்டளை சிறிலங்க ரெலிகொம் தலைவரை மாற்றவேண்டாமென்பது.

இதில் இரண்டு விடயங்கள் உறுதிப்படுத்தப்படுகின்றன.

ஒன்று: சிறிசேனவின் இந்தக் குணாம்சம் நல்லாட்சியில் நடைபெற்ற பல ஊழல்களுக்கு வழி வகுத்தது. அவர் கொண்டிருந்த அதிகார ஆசையினால் தான் அக்டோபர் புரட்சியே (2018) நடைபெற்றது; நல்லாட்சி குழம்பியது; பெரும்பாலான பழிகள் ரணில் விக்கிரமசிங்க மீது போடப்பட்டன; ஊழல் செய்தாலும் ராஜபக்சக்கள் பரவாயில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்தார்கள்; ஆட்சி கவிழ்ந்தது. இருப்பினும் தன் ஓய்வு காலத்தையும் மிழ்ச்சியுடன் கழிக்க அவர் போதுமான அளவு பேரம் பேசிப் பெற்றுக்கொண்டுவிட்டார். தற்போது சபாநாயகராக வருவதற்கும் முயற்சிக்கிறார்.

இரண்டு: மஹிந்த ராஜபக்ச, தன் நண்பர்களைக் கைவிடுவதில்லை.

மஹிந்த – கோதபாய பூசல்கள் வெடிப்பதற்கு அதிக காலம் தாமதிக்கத் தேவையில்லைப் போலிருக்கிறது..

-சிவதாசன்