தன்னையே திருமணம் செய்துகொள்ளும் இந்தியப் பெண்
இந்தியாவிலுள்ள வடோதரா பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய கிஷாமா பிந்து என்னும் பெண் இந்த் அமாதம் திருமணம் புரிகிறார். ஆனால் ஆச்சரியமாக இத் திருமணத்தில் மாப்பிள்ளை இல்லை. தானே தனக்குத் தாலி கட்டிக்கொள்ளப்போவதாக அவர் அறிவித்திருக்கிறார். இந்த மாதம் திருமணம் நடக்கவிருக்கிறது.
‘ரைம்ஸ் ஒஃப் இந்தியா’ பத்திரிகைச் செய்தியின்படி, மணமகன் என்ற அம்சத்தைத் தவிர மற்றப்படி இத் திருமணம் இந்து கலாச்சார மரபைப் பின்பற்றியே இருக்குமெனவும் மணமகன் இல்லாத காரணத்தால் மாப்பிள்ளை ஊர்வலம் மட்டும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எனக்கு மணப்பெண்ணாக இருப்பதற்கு விருப்பம் ஆனால் திருமணம் செய்வது பிடிக்காது என்பதனால் நான் என்னையே திருமணம் செய்யத் தீர்மானித்துள்ளேன். இதன் மூலம் இந்தியாவில் முதன் முதல் தன்னைத் தானே கல்யாணம் செய்துகொண்ட் ஒருவராக எனது பெயரே இருக்கும்” என கிஷாமா கூறுகிறார். சுய காதலை முன்வைத்து நடைபெறும் இவ்வகையான திருமண நடைமுறையை ‘சுய ணம்’ (Autogamy /Sologamy) என அழைக்கிறார்கள்.
“சுய மணம் என்பது ஒருவர் தன்னைத்தானே நிபந்தனையற்ற முறையில் காதலித்துக்கொள்வது, முற்று முழுதாகத் தனது வாழ்க்கையைத் தனக்காகவே அர்ப்பணித்துக் கொள்வது. வழமையாக் அஒருவர் இன்னொருவரைக் காதலிப்பதனால் பந்தத்தில் இணைகிறார்கள். நான் என்னையே காதலிப்பதால் என்னைத் திருமணம் செய்கிறேன்” என்கிறார் அவர்.
இந்த மாதம் (ஜூன்) 11 ம் திகதி கோத்ரியில் நடைபெறவுள்ள இத் திருமணத்துக்கு கிஷாமாவின் பெற்றோர் அங்கீகாரம் அளித்துள்ளனர். திருமணச் சடங்கின்போது கிஷாமா தனக்குத் தானே ஐந்து சபதங்களை எடுத்துள்ளாரெனவும் இந்து சம்பிரதாயப்படி குங்குமப் பொட்டை வைத்துக்கொள்வதன் மூளம் தான் திருமணம் செய்துகொண்ட ஒருவர் என்பதைப் பிரகடனப் படுத்திக்கொள்வாரெனவும் கூறப்பட்டுள்ளது.
திருமணம் முடிந்ததும் கிஷாமாவும் கிஷாமாவும் இரண்டு வாரம் ‘தேன் நிலவுக்காக’ கோவா செல்லவுள்ளார்(கள்).
‘சுய மணம்’ ஒரு புதிய நடவடிக்கை அல்ல. 21 ஆம் நூற்றாண்டில் பிரபலமாக வந்த இந் நடைமுறையில் பெரும்பாலும் பெண்களே ஈடுபடுகிறார்கள். இந் நடைமுறையை ஆதரிப்பவர்கள் ஒருவரது சுய விழுமியங்களை மதித்துக் காப்பாற்றிக்கொள்ளவும் அதே வேளையில் பிறரது தொந்தரவின்றி மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிகிறது. உலகில் இதுவரை எந்த நாடும் இந் நடைமுறைக்கு சட்டபூர்வமான அங்கீகாரத்தை வழங்கவில்லை. (ரைம்ஸ் ஒஃப் இந்தியா)