தன்னைக் ‘கொன்றவரைப்’ பழிவாங்கிய மான்!

Spread the love

அமெரிக்காவில், ஆர்க்கன்சாஸ் மாநிலத்திலுள்ள ஒசார்க் மலைப்பிரதேசத்தில் வேட்டைக்காரர் ஒருவரால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் மான் ஒன்று அவரைக் குத்திக் கொன்றதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

66 வயதுள்ள தோமஸ் அலெகக்சாண்டர் என்பவரே கொல்லப்பட்டவராவார்.

வழக்கம் போல மான் வேட்டைக்குச் சென்ற அலெக்சாண்டர் மானொன்றைச் சுட்டுவிட்டு அது நிலத்தில் வீழ்ந்து கிடந்தபோது மான் இறந்துவிட்டதா எனப் பரிசோதிக்க அதை அணுகியிருக்கிறார். அந்த வேளை மான் திடீரென எழுந்து அவரை முட்டி மோதித் தன் கொம்புகளால் அவரது உடலைக் காயப்படுத்தியதாகவும் அக் காயங்களுக்குச் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்துபோனதாகவும் அறியப்படுகிறது.

கொம்பினால் உடலில் பல துளைகள் ஏற்பட்டபோதும் அவர் தன் கைத்தொலைபேசி மூலம் மனைவியை அழைத்து அவசர சேவைகளின் உதவியைப் பெற்றதாகவும் இருப்பினும் காயங்களின் தீவிரத் தன்மை காரணமாகச் சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் அவர் மரணமடைந்ததாகவும் ஆர்க்கன்சாஸ் வனத்துறை பொழுதுபோக்கு ஆணையத்தின் பேச்சாளர் கீத் ஸ்டீபன்ஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இது மிகவும் துர்ப்பாக்கியமானதானாலும் மிகவும் நூதனமான ஒன்று எனவும் தனது 20 வருட சேவையில் இப்படியானதொன்றைத் தான் கேள்விப்பட்டிருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.


காயப்பட்ட மான் தப்பியோடிவிட்டதாகவும் அதைப் பிடிக்க வனத்துறையினர் முயற்சிப்பதாகவும் தெரிகிறது.

பிறிதொரு சம்பவத்தின் போது சிங்கமொன்றினால் தாக்கப்பட்ட மான் ஒன்று இறந்தது போல் பாசாங்கு செய்துவிட்டு சிங்கத்தின் கவனம் குறைந்த தருணத்தில் தப்பியோடியதைக் காட்டும் காணொளி ஒன்று வலைத் தளங்களில் உலாவியிருந்தது.

உயிரின் மீதான ஆசை மனிதருக்கு மட்டும்தான் இருக்கவேண்டுமென்பதில்லை.

Print Friendly, PDF & Email
>/center>