NewsSri Lanka

தனுஷ்கோடியிலிருந்து திருகோணமலைக்குப் பாலமமைக்க இந்தியா தயாராகிறது – ஜே.வி.பி.

மஹாநாயக்கர்களும் சிவில் சமூக அமைப்புகளும் தலையிட வேண்டும்

தனுஷ்கோடியிலிருந்து திருகோணமலைக்கு குறுகிய வழியில் பாலமொன்றை அமைக்க 2002 ஆம் ஆண்டிலிருந்து இந்தியா முயற்சி செய்து வருகிறது எனவும் 2015 இல் இது தொடர்பான அறிக்கையொன்றை அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய போக்குவரத்து அமைச்சருக்குச் சமர்ப்பித்திருந்தார் எனவும் ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இவ்விடயத்தில் மஹாநாயக்க தேரர்களும் சிவில் சமூக அமைப்புக்களும் தலையிட்டு இம் முயற்சியைத் தடுத்து நிறுதவேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.



“இப் பாலத்தை நிர்மாணிப்பதன் மூலம் தலைமன்னார், மன்னார், பெரியகுளம் A30 தெரு, வவுனியா, கெபிதகொல்லாவ, ஹொறோவப்பொத்தனை, A9 தெரு மற்றும் திருகோணமலை A12 தெரு ஆகியவற்றினூடாக இந்தியர் திருகோணமலைக்கு விரைவாக வர முடியும்” என ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

இது மிகவும் ஒரு பாரதூரமான விடயம் எனவும் பாராளுமன்றம் செயற்படாத வேளையில் வலு சக்தி அமைச்சர் அவசரம் அவசரமாக இந்தியாவுடன் ஒப்பந்தங்களைச் செய்துகொண்டது நாட்டுக்கு குந்தகமானது எனவும் நாட்டின் இறைமையை இது பாதிக்குமெனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.