தனியே வாழும் ஆண்களுக்கு ஆயுள் குறைவு
தனியே வாழும் ஆண்களுக்கு இளமையில் மரணம் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் மற்றவர்களை விட 23 % அதிகம். அதிலும் இருதய வியாதியால் இறக்கும் சந்தர்ப்பங்கள் 36% அதிகம். டென்மார்க்கில் 3346 ஆண்களிடையே ஐரோப்பிய இருதய சஞ்சிகை ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்திருக்கிறது. சராசரி 63 வயதைக் கொண்ட ஆண்களிடையே 1985 முதல் 32 வருடங்களாக மேற்கொண்ட ஆய்வின் போது 89% மான ஆண்கள் மரணமடைந்திருக்கிறார்கள். அதில் 36% மானோர் இருதய வியாதியால் இறந்திருக்கிறார்கள்.
இவ்வாய்வின் போது, சம்பந்தப்பட்டவர்களின் ஆரோக்கியம், நடத்தைகள், குணாதிசயங்கள், உடல் எடை, புகைத்தல், இரத்த அமுக்கம், நீரிழிவு, இரத்தக் கொழுப்பு அளவுகள் ஆகியன கருத்தில் கொள்ளப்பட்டன. இருப்பினும் தனியே வாழ்ந்த ஆண்களில் 23% மானோர் உரிய காலத்துக்கு முன்னராகவே மரணிக்கக்கூடிய ஆபத்தை அதிகரித்துக் கொண்டார்கள். இவர்களில் 36% மானோர் இருதய வியாதியினால் மரணிக்கும் ஆபத்தை எதிர்கொண்டிருந்தார்கள்.
பங்குபற்றியோரில் 19 % மானோர் பல்கலைக்கழகப் பட்டப் படிப்பை மேற்கொண்டிருந்தவர்கள் அல்லது உயர் பதவிகளை வகித்தவர்கள். மீதியானோர் தாழ்த்தப்பட்ட சமூக அந்தஸ்தைக் கொண்டவர்கள். இவர்களே மரணிக்கும் சாத்தியத்தை அதிகம் கொண்டிருந்தவர்களாவர். இந்த 81% மானோரும் பட்டினியில் வாழ்ந்திருக்கவில்லை, மாறாக, மத்திய தர, உடலுழைப்பால் வருமானத்தைப் பெறும் தொழிலாளிகள் ரகத்தினராவர்.
“பெரிய நகரங்களில் செறிவாக வாழும் சமூகங்களில் தனித்து வாழும் பண்பு அதிகமாகவிருக்கிறது. தனிமைப் படுத்தல் ஒரு உலகப் பிரச்சினை அதை இலகுவாகத் தீர்த்துவிட முடியாது. சமூக ஊடாட்டங்களை மையப்படுத்திய நகர நிர்மாணங்கள் சில வேளைகளில் பலன் தரலாம்” என்கிறார் இவ்வாய்வின் முதன்மை எழுத்தாளர், கொப்பன்ஹேகன் பல்கலைக்கழக மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் மக்னஸ் ரீ. ஜென்சன்.