• Post category:INDIA / LIFE
  • Post published:October 17, 2020
Spread the love

‘Recycled teenager’, ‘retired rat race runner’ எனப் பல பெயர்களால் தன்னை அழைத்துக்கொள்ளும் சென்னை வாசியான எஜ்ஜி கே. உமாமகேஷ் மரணமடைவதற்கு முதல் தனது மரண அறிவித்தல், இறுதியாக விடைபெறும் முகநூல் பதிவு ஆகியவற்றைத் தானே எழுதிவைத்துச் சென்ற சம்பவம் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது.

தனது மரண அறிவித்தலைத் தானே எழுதிவிட்டு இறந்துபோன உமாமஹேஷ் 1
இதுதான் அவர் பத்திரிகைகளுக்கென எழுதி வைத்த மரண அறிவித்தல்

எஜ்ஜி மத நம்பிக்கையற்றவர். வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தவர். அவரது திருமணத்தைக்கூட வெறும் 60 ரூபாய்களுடன் நடத்தி முடித்தவர் (1975 இல்). இருதய அறுவைச் சிகிச்சை 10 வீதமே வெற்றியளிக்கும் சாத்தியமுண்டு என்ற போதும் அதைத் துணிந்து எதிர்கொண்டவர். அதனால் சிகிச்சைக்குப் போகுமுன்னரே அவர் தனது மரண அறிவித்தலை எழுதி வைத்துக்கொண்டார். தனது முகநூல் நண்பர்களிடம் பிரியாவிடை பெற்றுக்கொண்டார். எல்லாம் அவர் வாழ்ந்த அதே ‘ஸ்டைலில்’.

எஜ்ஜி ஒரு காரோட்ட வீரர். ஃபோர்மூலா வண், இந்திய கிராண்ட் பிறி ஆகியவற்றின் உதவிச் செயலாளர். கார்கள் மீதும், காரோட்டம் மீதும் அலாதிப் பிரியம் கொண்ட எஜ்ஜி தனனை ஒரு பெறுமதி வாய்ந்த பழைய வாகனமாகவே உருவகப்ப்டுத்திக் கொள்வார். தனது முகநூல் நண்பர்களுக்கு அவர் எழுதிய பிரியாவிடையும் இதையொட்டியே இருந்தது. “இப் பழைய வாகனத்தைத் திருத்த முற்பட்ட்போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வாகனம் பாவனையை இழந்துவிட்டது. அப்படியிருப்பினும் அதிலுள்ள சில உதிரிப்பக்கங்கள் செயற்படும் நிலையில் இருப்பதால் வேறு வாகனங்களுக்கு உதிரிப்பாகங்கள் தேவைப்படுபவர்கள் அவற்றைப் பாவிக்கலாம்” என அவர் தனது உடற்பாகங்களைத் தானம் செய்தது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு தனது உடலை மருத்துவக் கல்லூரிக்கு ஆராய்ச்சிக்காகத் தானம் செய்திருக்கிறார்.



முகநூல் நண்பர்களுக்கு எழுதிய பிரியாவிடை:

தனது மரண அறிவித்தலைத் தானே எழுதிவிட்டு இறந்துபோன உமாமஹேஷ் 2

இறுதியாக அவர் தனது பிரியாவிடையில் குறிப்பிட்டுள்ள விடயம்:

தனது மரண அறிவித்தலைத் தானே எழுதிவிட்டு இறந்துபோன உமாமஹேஷ் 3
எஜ்ஜி தனது மனைவி ஷியாமளா மற்றும் மகள்கள் ரசிகா, சரிகா ஆகியோருடன்

“இறுதியாக நான் எனது நண்பர்களுக்கும், எதிரிகளுக்கும், இவ்விருவருக்கும் இடைப்பட்டவர்களுக்கும் கூறிக் கொள்வது – “எனது பரபரப்பூட்டும் வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி. எனது party முடிந்துவிட்டது. நான் விட்டுச் செல்பவர்களுக்கு hangover இருக்காதென்று நான் நம்புகிறேன். எல்லோரது காலமும் மிக விரைவாக ஓடிக்கொண்டிருக்கிறது. நன்றாக வாழுங்கள், வாழ்க்கையை அனுபவியுங்கள், பார்ட்டியைத் தொடருங்கள்”

Print Friendly, PDF & Email