‘தனது நிலை குறித்து ஜனாதிபதி அவசர முடிவொன்றை எடுத்தாக வேண்டும்’ – சுமந்திரன்

“நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வது மட்டும் போதாது, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்ததை அகற்றிவிட்டு 21 ஆவது திருத்தத்தைக் கொண்டுவருவதன் மூலம் 19 ஆவது திருத்தத்தின் நல்ல அம்சங்களை மீளவும் நடைமுறைப்படுத்தும் வகையில் நாடு நகர வேண்டும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ராஜபக்சவின் அழைப்பின் பேரில் கொழும்பில் நடைபெற்ற விசேட சந்திப்பின்போது சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.

இலங்கை டெய்லி நியூஸ் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியொன்றின்போது, “நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதானால், நாடு தழுவிய ரீதியில் எடுக்கப்படும் கருத்துக்கணிப்பில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற வேண்டும். இப்போதுள்ள நிலைமையில் அது சிரமமாக இருக்கும் என பிரதமர் என்னிடம் கூறினார். அப்படி கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டால் மக்கள் தமது பூரண ஆதரவைத் தருவார்கள் என நான் எதிர்பார்க்கிறேன் என நான் பிரதமரிடம் தெரிவித்தேன்” என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இரசாயன இறக்குமதித் தடை, சர்வதேச நாணைய நிதியத்தின் உதவியைப் பெறுவதில் தாமதம் ஆகிய விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மன்னிப்புக் கோரியதுடன் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதற்காக உடனடியாக நாட்டின் அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவரும்படி பிரதமருக்கு அவர் பணித்திருந்தார். ஆனாலும் நாட்டின் பிரச்சினைகளுக்கு இந்த இரண்டும் மட்டுமே காரணங்களல்ல. நாடு இப்போது இருக்கும் நிலையில், மக்கள் போராட்டங்கள், தொடர்கின்ற நிலையில், புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கு நீண்ட காலம் எடுக்கும். அதற்குள் ஜனாதிபதி தனது நிலை குறித்து அவசரமான முடிவொன்றை எடுக்க வேண்டும். இல்லையேல் நாடு முழுவதிலும் பல விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட அது காரணமாகிவிடும் என சுமந்திரன் எச்சரித்துள்ளார்.