LIFEWorld History

தனக்குத் தெரியாமலேயே பல கோடி உயிர்களைக் காப்பாற்றிய கறுப்பினப் பெண்

ஹென்றியெற்றா லாக்ஸ் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கறுப்பினப் பெண். 1951 ஆம் ஆண்டு, அவளுக்கு 31 வயதாகவிருக்கும்போது தனது ஐந்தாவது குழந்தையைப் பெற்றாள். இதனைத் தொடர்ந்து அவளுக்கு கர்ப்பப்பை வாயிலில் புற்றுநோய் (Cervical Cancer) இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவின் நிறப்பிரிகை இன்னும் தொடர்கின்ற காலமாகையால் மருத்துவ மனைகள் கறுப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் வேறு வேறாகவே இயங்கின. கறுப்பர்களுக்கான மருத்துவ வசதிகள் சொற்பமாகவே இருந்தன. இந்நிலையில் அவரது வாழிடத்துக்கு மிக நெருங்கிய தூரத்தில், பால்ரிமோர், மேரிலாந்தில், உள்ள ஜோன் ஹொப்கின்ஸ் மருத்துவ மனையை சிகிச்சைக்காக அணுகினார்.

ஹாக்ஸுக்கு வழங்கப்பட்ட வார்ட் இருந்த அதே தளத்திலேயே ஜோர்ஜ் கீ என்னும் கல ஆராய்ச்சியாளரது ஆய்வுகூடமும் இருந்தது. ஆராய்ச்சிக்கென மனிதக் கலங்களை ஆய்வுகூடத்தில் வளர்த்தெடுப்பதற்குப் பல தசாப்தங்களாக முயற்சிகளை மேற்கொண்டு வந்தவர் கீ. அதுவரை உலகில் எவருமே ஆய்வுகூடத்தில் மனிதக் கலங்களை வளர்க்கும் முயற்சிகளில் வெற்றிபெற்றிருக்கவில்லை. இவ்வேளை லாக்ஸின் புற்றுநோய்க் கட்டியை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவர், லாக்ஸின் கல இழையத்தின் ஒரு துண்டை அவருக்குத் தெரியாமலேயே பிரித்தெடுத்து கீயிடம் ஆய்வுக்காகக் கொடுத்துவிட்டார். நோயாளியின் சம்மதமில்லாது உறுப்புகளை அகற்றுவதோ பரிமாறுவதோ அக்காலத்தில் பிரச்சினையாக இருக்கவில்லை. ஆனால் இச்சம்பவம் உலகில் பிரமாண்டமான மாற்றத்தைக் கொண்டுவரப் போகிறதென்பதை ஹாக்ஸ் உட்பட, எவருமே அப்போது அறிந்திருக்கவில்லை.


மனிதக் கலங்கள் நீண்ட காலம் உயிர்வாழ்வதில்லை. அவற்றின் வயதெல்லை வந்ததும் அக்கலங்களை அழித்துவிடும் ஒரு தன்னியக்க செயல்முறையை உடல் கொண்டிருக்கிறது. முதுமையை எய்தியதும் ‘கலங்கள் ‘தற்கொலை’ செய்துகொள்ளும் இந்நடைமுறையை சென்னெசென்ஸ் (senescence) என்பார்கள். இதற்கு வலுவான காரணமும் தேவையுமுண்டு. மனித உடலில் உள்ள உறுப்புகளிலுள்ள இழையங்கள் கலங்களின் கூட்டமாகும். உதாரணத்திற்கு, எமது தோலின் புறப்பகுதி, குடலின் சுவர் ஆகியவை அடிக்கடி காயமுறுவது வழக்கம். காயப்படும் இவ்விழையங்களைத் திருத்தம் செய்ய அதே வகையான புதிய கலங்களை உடல் உற்பத்தி செய்ய வேண்டும். இத் தேவைக்காக ஆரோக்கியமான கலங்கள் பிரிகையடைந்து புதிய கலங்களைத் தோற்றுவிக்கின்றன. கலங்கள் பிரியும்போது அதன் முக்கிய அங்கங்களில் ஒன்றான நிறமூர்த்தங்கள் சரி பாதியாகப் பிளந்து புதிய கலங்களை உருவாக்கிறது. இந்நிறமூர்த்தங்களில் தான் DNA குடிகொண்டிருக்கிறது. மனித இயல்புகளும் குணாதிசயங்களும் இந்த DNA யில் மரபணுக்களாக இருக்கின்றன. ஒவ்வொரு தடவையும் கலப்பிரிகை நடக்கும்போது இந்த DNA க்கள் பலவீனமடைகின்றன. குறிப்பாக அவற்றின் முடிவுகளில் DNA யின் பாதுகாப்பை உறுதிசெய்யும் மூடிகளான ‘ரெலோமியர்ஸ்’ (teleomeres) சுருக்கமடைகின்றன. இவை முற்றாக நீக்கப்படும்போது DNA விரும்பத்தகாத விகாரங்களுக்கு (mutations) உள்ளாக நேரிடுகிறது. இதனால் தான் புற்றுநோய் மற்றும் முதியோர் நோய்கள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க மனித உடல் ஒரு உத்தியைக் கையாள்கிறது. சுருங்கி வரும் ரெலோமியர்ஸை அவதானித்து கலத்தின் பாதுகாப்பு பொறிமுறை ஏறத்தாழ 50 தடவைகளுக்கு மேல் இக் கலப் பிரிகை நடைபெறுவதை அனுமதிக்காது. இதன் பிறகு அக்கலம் ‘கொல்லப்பட்டு’ விடுகிறது.

ஆனால் லாக்ஸின் கலங்களை ஆராய்ந்த கீ அவை வித்தியாசமானவை என்பதை அறிந்துகொண்டார். எத்தனை தடவைகள் பிரிகையடைந்தாலும் அவரது கலங்கள் பிரிவதை நிறுத்திக்கொள்ளவில்லை. ஆவை ‘தற்கொலை’ செய்யவில்லை. ஆய்வுகூடத்தில் ஆய்வுக்காக மனிதக் கலங்கள் தேவைப்படும்போது தேவையான அளவு உருவாக்கிக் கொள்ள இது வசதி செய்தது. விரைவிலேயே விஞ்ஞானிகளின் ஆய்வுத் தேவைகளுக்காக லாக்ஸின் கலங்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகத் தொடங்கிவிட்டன. ஹென்றியெற்றா லாக்ஸ் (Henrietta Lacks) என்ற அவரது பெயரைச் சுருக்கி “ஹேலா” (HeLa) என இக்கலங்களுக்குப் பெயரிடப்பட்டது. மனித வரலாற்றில் ‘இறப்பில்லாத’ மனிதக் கலங்கள் என அறியப்பட்ட ஹேலா இன்றுவரை பல வியாதிகளைத் தீர்த்து வைப்பதற்குக் காரணமான ஆய்வுகளுக்கு அடிப்படையாக இருந்து வந்திருக்கிறது. இளம்பிள்ளைவாதம் (போலியோ), புற்றுநோய் போன்ற வியாதிகளுக்கும் செயற்கை கருத்தரிப்பு நடைமுறைக்கும் அடியாதாரமாக இருந்தது இந்த ஹேலா தான். அது மட்டுமல்லாது மனிதனுக்கு முன் விண்ணுலகை வலம் வந்ததும் இந்த ஹேலா தான்.

ஹேலாவின் இந்த அற்புத சாதனை பற்றி அவரது குடும்பத்தினர் அறிந்திருக்கவில்லை. அக்காலத்தில் சம்மதமில்லாது பெறப்பட்ட இக்கலம் பற்றிய செய்தி இருட்டடிப்புக்குள்ளாகியது விபத்தல்ல. அதுவும் நிறத்துவேஷம் கொடிகட்டிப் பறந்த காலத்தில் அது வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டது. சுமார் 50 வருடங்களுக்குப் பிறகு பி.பி.சி. ஊடகவியலாளர் றெபெக்கா ஸ்க்ளூட் இத்தகவலைக் கிண்டியெடுக்கும்வரை இதுவேதான் நிலைமை. இன்றய மனித குலத்தின் சுகவாழ்வுக்கு காரணமாகவிருந்த கறுப்பினப் பெண், லாக்ஸின் கதை இப்போதுதான் அவரால் பயன் பெற்ற மனிதருக்கு வெளிச்சமாகியிருக்கிறது. இது தொடர்பான பி.பி.சி. யின் காணொளியை இங்கே பார்க்கலாம். (Image Credit: Wikipedia)