தண்ணீரூற்று, புதுக்குடியிருப்பு பகுதிகளில் நீர் வழங்கல் வசதி: வடக்கு-கிழக்கு மறுவாழ்வு அமைப்பு
கனடா நக்கீரன் தங்கவேலு ஐயாவின் நிதியம் ஏற்பாடு
கனடா தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் நக்கீரன் தங்கவேலு ஜயாவின் எழுபது ஆண்டு அரசியல் இலக்கிய சமூக தொண்டினைப் பாராட்டி ரொறன்ரோ நகரில் எடுக்கப்பட்ட விழாவில் கிடைத்த அன்பளிப்பு பணத்தில் வடக்கு கிழக்கு மறுவாழ்வு அமைப்பினுடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணீறுற்று பகுதியில் குடிநீர் தேவைக்கான நீர்வசதியும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வீட்டு விவசாய தேவைக்கான நீர்வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
நக்கீரன் தங்கவேலு ஐயா அவர்கள் 90 வயதை எட்டியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனடாக் கிளை அவரது 70 ஆண்டுகால சமூகத் தொண்டினைப் பாராட்டி ரொறோண்டோ தமிழிசைக்கலாமன்ற மண்டபத்தில் ஒரு விழாவை ஒழுங்குசெய்திருந்தது. இதற்கு வந்திருந்த அவரது நண்பர்கள், ஆதரவாளர்கள், வாசகர்கள் மனமுவந்து அன்பளிப்பாக வழங்கிய பணம் முழுவதையும் அன்பளித்து தாய் மண்ணில் வாழும் மக்களுக்கு சேவைகளை வழங்கிவரும் வடக்கு-கிழக்கு மறுவாழ்வு அமைப்பினூடாக இரண்டு நீர்வழங்கல் திட்டங்களை முன்னெடுத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தண்ணீரூற்று மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் வாழும் மக்களுக்கு இரண்டு குழாய்க் கிணறுகளை இவ்வமைப்பு நிர்மாணித்துக் கொடுத்திருக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பிரதிநிதியும் பேச்சாளருமான திரு எம்.ஏ.சுமந்திரன் இந்நீர் வழங்கல் திட்டங்களை சம்பிரதாய பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.




