தடையையும் மீறி சீன உளவுக் கப்பல் நாளை இலங்கை வருகிறது?

வரவைப் பின்போடுமாறு இலங்கை அரசு விடுத்த வேண்டுகோளையும் மீறி சீன உளவுக் கப்பலான யுவான் வாங் 5 அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை அடையும் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் பலத்த எதிர்ப்பைத் தொடர்ந்து இக் கப்பலின் வருகையைத் தாமதிக்க வைக்க ஜனாதிபதி விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி ஆகியோர் எடுத்த பகீரத முயற்சிகளையும் தாண்டி இக் கப்பலை இலங்கைக்குக் கொண்டுவருவதில் சீனா மிகவும் உறுதியாக இருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.

இந்திய ஊடகங்களின் தகவல்களின்படி 23,000 தொன் எடையுள்ள யுவான் வாங் 5 கப்பல் ஆகஸ்ட் 9, காலை 9:30 மணிக்கு அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை அடையலாம் எனக் கூறப்படுகிறது. இச் செய்தி உண்மையானால் விக்கிரமசிங்கவின் அரசுக்கு வரும் முதல் ராஜதந்திர சோதனையாக அமையும் எனவும் இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் இந்திய – சீன முறுகல் நிலையை இது மேலும் உக்கிரமாக்குமெனவும் கூறப்படுகிறது.

இக் கப்பலின் வருகைக்கான ராஜதந்திர அனுமதி ஜூலை 12ம் திகதியே வழங்கப்பட்டுவிட்டதெனவும் இதன் பிரகாரம் ஆகஸ்ட்11 முதல் 17 வரை இக்கப்பல் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் தரித்து நிற்குமெனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

400 மாலுமிகளுடன் வரும் இக்கப்பலில் செய்மதித் தொடர்பாடல்களைக் கவர்ந்தறியும் வசதிகள் மற்றும் இந்தியாவினால் ஒடிசாவில் மேற்கொள்ளப்படும் இடைக்கண்ட ஏவிகணைகளின் எறிபாதைகளைக் கண்டறியும் வசதிகள் போன்ற நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்டிருப்பதாக இந்திய உளவுத்துறை கூறுகின்றது. அத்தோடு இவ்வுபகரணங்களின் கண்காணிப்பு வீச்செல்லை 700 கி.மீ க்கு மேல் இருப்பதால் இஅந்தியாவின் தென் மாநிலங்களிலுள்ள அணுமின்நிலையங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களின் நடவடிக்கைகளையும் சீனாவினால் அறிந்துகொள்ள முடியுமென இந்திய அதிகாரிகள் நம்புகின்றனர்.

இந்தியாவின் அதி தீவிர அழுத்தத்தின் காரணமாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, விடயங்கள் முற்றாகத் தெளிவுபடுத்தப்படும்வரை சீனக் கப்பலின் வருகையைப் பின்போடும்படி ஆகஸ்ட் 5 அன்று கொழும்பிலுள்ள சீனத் துதுவர்மூலம் கோரிக்கை விடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து சீனத் தூதுவர் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் நேரில் பேசியிருந்தார். இருப்பினும் இலங்கையின் கோரிக்கையைச் செவிமடுக்காது சீனா அதன் முடிவில் உறுதியாக இருப்பதாகவும் அம்பாந்தோட்டைத் துறைமுகம் ஏற்கெனவே சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருப்பதால் அது தனது எண்ணப்படி ஆகஸ்ட் 11 இற்கு முதல் அத் துறைமுகத்தில் யுவான் வாங் 5 ஐத் தரிப்பதற்கு முடிவுசெய்துள்ளதாகவும் அறியப்படுகிறது.

இதே வேளை, இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடவேண்டாமென்று இலங்கை-சீன நட்புறவுச் சங்கம் இந்தியாவுக்குக் கடினமான எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது.