News & AnalysisSri Lankaமாயமான்

தடுப்பூசி விவகாரம் | ஊழலில் திளைக்கும் இலங்கை மருத்துவர்கள்

மாயமான்

இலங்கைக்கு, Banana Republic என்ற அந்தஸ்தைப் பெற்றுக் கொடுத்தமைக்காக ராஜபக்சக்கள் பட்டம் கொடுத்துக் கெளரவிக்கப்பட வேண்டியவர்கள். கொழும்பில் காலுக்குள்ளும் கையுக்குள்ளும் தவழும் டாக்டர்கள், பேராசிரியர்கள், ஆயுர்வேத வைத்தியர்கள், கலைஞர்கள், மந்திரவாதிகள் எல்லோரையும் ஒன்றாகக் கட்டிப்போட்டு ஒரே குட்டையில் ஊறவைத்த கெட்டித்தனம் அவர்களுக்கு உண்டு.

இலங்கையில் இப்போது ஊழலில் நனையாத ஒருவரைக் கண்டுபிடிப்பது சிரமம். ‘சீனா விசிறியெறிந்து, ஆத்தில போற லஞ்சத்தை அண்ணைபிடி தம்பி பிடி’ என்று எல்லோரும் அள்ளுகிறார்கள். யார் கூட அள்ளுவது என்ற போட்டியில் தலைகள் மற்றவர்களைக் கண்டுகொள்வதில்லை.

இலங்கையின் சீரழிவுக்கு முக்கிய பங்கை ஆற்றி வருபவை தொழிற்சங்கங்கள். அது ‘ரை கட்டியோர்’ சங்கமாகவிருந்தாலென்ன ‘மூட்டை தூக்குவோர்’ சங்கமாகவிருந்தாலென்ன எல்லாம் ஒரே மட்டைகள் தான். படிப்புக்கும் நடைமுறைக்கும் சமபந்தமே இல்லை என கோவிட் திறந்து காட்டிவிட்டது. கும்பமேளாவில் கோமணாண்டிகள் அடித்த கும்மாளத்தை இப்போது இலங்கையில் மருத்துவர்கள் அடித்து அம்மணமாகி நிற்கிறார்கள். நல்ல மருத்துவர்கள் ஒதுங்கி நிநறாலும், by default, அவர்களும் இதில் அடக்கப்படுகிறார்கள், ஆழ்ந்த அனுதாபம்.

கோவிட் தொற்று ஆரம்பத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் கோமாளி டாக்டர் இலங்கையைப் புகழோ புகழ் என்று புகழ்ந்திருந்தார். வண்டிக்குப் பின்பக்கத்தில் பூட்டிய மாட்டைப் போன்ற நிலை அவருடையது. சீனாவின் அபினியில் அவர் திளைத்திருந்தாரோ என்னவோ கோவிட் உலகம் முழுவதும் பரவிய பின்னர் தான் அவர் போதை தெளிந்து சுயநினைவுக்கு வந்தார். வந்த கையோடு சீனாவின் கூசா தூக்கும் நாடுகளுக்கு வக்காலத்து வாங்கினார். இலங்கை வெற்றிகரமாக கோவிட்டை அடக்கிவிட்டது என அங்கீகாரம் கொடுத்தார். எதையுமே செய்யாத அரசியல்வாதிகள் ‘என் கை சுத்தம்’ என்று தம்பட்டம் அடிப்பதைப் போல, PCR பரிசோதனைகளைச் செய்யமுடியாமல் இருந்த இலங்கையில் தொற்றுக் குறைவாக இருக்கும் என்பதை அவர் உணரவில்லை. அரசாங்கத்தை நம்பி அவர் அங்கீகாரம் கொடுத்திருந்தார். பழுதடைந்த இயந்திரத்தைத் திருத்துவதற்கு வந்த சீன நிபுணர் ‘இயந்திரத்தில் பிழை இல்லை’ எனக் கூறிச் சென்றதை எவரும் கவனிக்கவில்லை.

இதற்குள் கோவிட் நிர்வாகத்துக்கென நியமிக்கப்பட்ட கட்டளைத் தளபதி முழுச் சீருடை, பதக்கங்கள், நட்சத்திரங்களுடன் சல்யூட் அடித்து வரவேற்க ஐயா கோதாபய மூன்று டாக்டர்களை நியமித்தார். இவர்கள் மூவரும் ஒருவருக்கொருவர் ‘நான் பெரிசு நீ பெரிசு’ நிலை. அமைச்சர் பவித்திரா (அவரை டாக்டர் என அழைக்க கூசுகிறது) வன்னியாராய்ச்சி மந்திரவாதி / வெத மாத்தயாவின் ‘கோவிட் துரத்தி’ கசாயத்துக்குக்கு ‘மாடலாக’ இருந்து நாறிப்போனது மட்டுமல்லாது, துரத்த முயன்ற கோவிட்டினால் பிடிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இப்போது தான் ‘ரிலிஸாகி’ இருக்கிறார். அவர் தடுப்புக் காவலில் இருந்தபோது இரண்டாம் அமைச்சர், டாக்டர் பெர்ணாண்டோபிள்ளை கொஞ்சம் professional ஆக வேலைசெய்தார். என்னதான் இருந்தாலும் அவர் ஒரு ‘பிள்ளை’யாகவே பார்க்கப்பட்டார். அவரது நிர்வாக காலத்தில் உண்மையான PCR பரிசோதனைகள் / பெறுபேறுகள் பகிரங்கப்படுத்தப்பட்டன. இப்போது பழைய *** கதவைத் திறவடி நிலமை. அவசியமம் ஏற்பட்டால் மட்டுமே PCR பரிசோதனைகள் செய்யப்படவேண்டுமென்பது தளபதியின் கட்டளை.

அவமானப்பட்ட அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (Government Medical Officers Association (GMOA ))

இலங்கையில் ஏகப்பட்ட மருத்துவர் சங்கங்கள் உணடு. அவற்றில் பலமானது அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (Government Medical Officers Association (GMOA )). தோற்றத்தில் துறைமுக தொழிலாளர் சங்க அங்கத்தவர்கள் மாதிரி இருப்பினும், இவர்களில் அநேகமானோர் லண்டனில் , FRCS, FRCP போன்ற நீண்ட பட்டங்களைப் பெயர்ப்பலகைகளில் பொறித்திருக்கும் பிரத்தியேக சேவையாளர்கள் (private practice). இது ஒரு நகைச்சுவையான கும்பல். ராஜபக்சக்களுக்கு மிக நெருக்கமான மூர்க்கமான போராட்டக் குணம் கொண்ட இவர்களும் சிங்கள பெளத்த தீவிரவாதிகள் தான்.

இவர்களது போராட்ட குணம் பற்றி அறிய வரலாற்றில் பல தடயங்கள் உண்டு. அவற்றில் ஒன்று; நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் இந்தியா ‘சுவசேர்ய’ என்ற திட்டத்தின் கீழ் 80 அம்புலன்ஸ்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியிருந்தது. அந்நடவடிக்கையை இச் சங்கம் மிகவும் தீவிரமாக எதிர்த்து வீதிக்கிறங்கிப் போராடியது. அப்போது ராஜபக்சக்கள் எதிர்க்கட்சியாக இருந்தமை ஒரு காரணமாகவும் இருக்கலாம். இச் சங்கத்தின் தலைவர், ஒரு டாக்டர் என அழைக்கப்படுபவர், தொண்டை கிழிய சிங்கள மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார் ” இந்தியா தரும் அம்புலன்ஸ் வண்டிகளில் ஏறினீர்களானால் நீங்கள் உயிரோடு மருத்துவமனைக்குப் போகமாட்டீர்கள். அதில் ஏறுபவர்கள் மின்சாரம் தாக்கிச் சாகிறார்கள். அது இந்திய உளவு அமைப்பான ‘றோ’வின் தேவைக்காக அது கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதில் போவதை விட ‘ஆட்டோவில்’ போவது சிறந்தது” என சிவப்பு ‘ரை’ இறுக்கிய தொண்டைக்குள்ளால் கத்திக் கூறியிருந்தார். இந்தியாவில் வெற்றிகரமாகச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுவரும் இந்த அம்புலன்ஸ் வண்டியில் மின்சாரம் தாக்கி எவரும் மரணமடைந்ததாக வரலாறே இல்லை. ஆனாலும் ஒரு ‘டாக்டர்’ அதைக் கூறுகிறார்.

சரி அதை விடுங்கள். அவர்களைப் பற்றிய உண்மை சிங்கள மக்களுக்குத் தெரியாமல் இருக்கலாம் ஆனால் கோவிட் அவர்களை நிர்வாணமாக்கி விட்டது.

வெற்றிகரமாக கோவிட்டைக் கட்டி வைத்தமைக்காக புகழாரம் சூட்டிய சீனா, இலங்கைக்கு 500,000 டோஸ்கள் ‘சைனோஃபார்ம்’ தடுப்பூசியை, ஒரு நிபந்தனையுடன், இனாமாக வழங்குவதாக அறிவித்தது. நிபந்தனை: இலங்கையில் வாழும் அனைத்து சீனக் குடிமக்களுக்கும் முதலில் அம்மருந்து வழங்கப்பட வேண்டும். இலங்கையின் இன்னுமொரு நண்பனான ரஷ்யாவும் 50,000 டோஸ்கள் ‘ஸ்புட்னிக் V’ தடுப்பூசியைத் தருவதாகவும் அறிவித்திருந்தது. இந்தியாவும் 500,000 டோஸ்கள் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசியை நன்கொடையாகவும் இன்னுமொரு 1 மில்லியன் டோஸ்களை நிர்ணய விலைக்குத் தருவதாகவும் அறிவித்திருந்தது. தமது மக்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்படவேண்டுமென இந்தியாவோ, ரஷ்யாவோ நிபந்தனைகளை விதிக்கவில்லை.

இந்த நிலைமையில், சீனாவைக் கண்டித்து நம்ம டாக்டர்கள் வீதிக்கு இறங்கவில்லை. ஆனால் அதைவிட இவர்களை நிர்வாணமாக்கித் தெருவில் விட்டது இன்னுமொரு சம்பவம்.

கோவிஷீல்ட் தடுப்பூசி (இந்திய அஸ்ட்றாசெனிக்கா)

சீனாவின் ‘சைனோஃபார்ம்’ தடுப்பூசியின் செயற்திறன் பற்றி போற்றும்படியான தகவல்கள் இதுவரை இல்லை. வழமைபோல, சீனா உண்மைகளை மறைக்கும் நாடு என்பதும் உலகமனைத்தும் அறிந்த ஒன்று. அப்போது, உலக சுகாதார நிறுவனம் சீனாவினதும், ரஷ்யாவினதும் தடுப்பூசிகளின் பாவனையை பொதுமக்கள் பாவனைக்கென அங்கீகரித்திருக்கவில்லை. இந்திய தடுப்பூசி ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட ஒக்ஸ்ஃபோர்ட் – அஸ்ட்றாசெனிக்கா ரகமானதாகையால் அதன் பாவனைக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

சீனாவின் தடுப்பூசி கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வந்திறங்கி, ஐயா கோதாபயவினால் நேரடியாக வரவேற்கப்பட்டு, அலங்கார ஊர்திகளில் தாரை தப்பட்டைகளுடன் கொழும்புக்கு வந்திறங்கியது. ஆனால் ராஜபக்ச குடும்பத்தினரோ அல்லது அவர்களது கட்சி ஆதரவாளர்களோ அத் தடுப்பு மருந்தைப் பாவிக்கவில்லை. அவர்கள் எல்லோரும் எடுத்துக்கொண்டது விசேடமாகத் தருவிக்கப்பட்ட ஃபைசர் மற்றும் இந்திய ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிகளையே. அவர்கள் ஒவ்வொருவரும் தமக்கும், தமது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள், கூசாக்கள் என எல்லோருக்குமாகச் சில பெட்டிகளையே தமதாக்கிக் கொண்டனர். யார் யார் எத்தனை ஆயிரங்களை மடக்கிக் கொண்டார்கள் என்ற விடயம் வெளியிடப்படவில்லையாயினும், கொழும்பு மேயர் றோசி சேனநாயக்கா தனக்கும் தனது அலுவலகப் பணியாளர்களுக்குமென 60,000 டோஸ்களைப் பதுக்கிக் கொண்டாரெனச் செய்திகள் வெளிவந்திருந்தன.

பாராளுமன்றத்திலுள்ள அரசியல்வாதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஆளும் கட்சி அண்ணைகளும் தம்பிகளும், அவர்களது அலுவலக உறவினர்களும் இந்தியத் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டனர். மனச்சாட்சியுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் ஊசிகளைப் போட்டுக்கொள்ள மறுத்துவிட்டனர். இவர்களில் பலருக்கு இப்போது கோவிட் தொற்றியிருக்கிறது.

அதைவிட, ஆட்சியாளரின் நண்பர்கள் உலகமும் இவ்வூசியைப் பெற்றுக் களிப்படைந்தது. முன்னரங்க சுகாதாரப் பணியாளர்களுக்கு இவ்வூசிகள் வழங்கப்படாமல், பெருமிடத்துத் தொடர்புடைய ‘சமதர்ம’ வாதிகள், கலைஞர்கள் (பிரசன்ன விதானகே) ஆகியோருக்கு இவ்வூசிகள் வழங்கப்பட்டன. மக்களோ மருத்துவமனைகளுக்குப் போகும் வழிகளில் இந்திய அம்புலன்ஸ்களில் மரணமாகிக் கொண்டிருந்தார்கள்.

இதுவெல்லாம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தாம் அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளப் போவதாக அறிவித்தது. காரணம், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க அங்கத்தவர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் இந்திய ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்தின் ‘இரண்டாம் கட்ட’ தடுப்பூசி வழங்கல் ஏற்கெனவே ஆரம்பமாகி இருந்தது. இந்த அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க அங்கத்தவர்கள் பலர் கொடுத்த பட்டியல்களில் ஒருவருக்குப் பல மனைவிமாரும், பல தகப்பன் மாரும், பல கணவன்மாரும் இருந்தனரெனப் பதிவுகள் த்ரிவிக்கின்றன.

முன்னரங்க சுகாதாரப் பணியாளர்களுக்கு இன்னமும் முதலாவது தடுப்பூசியே வழங்கப்படாத நிலைமையிருக்க, கோவிட்டினால் நோயாளிகள் வரவின்றிப் பூட்டிக்கிடந்த ‘ஸ்பெஷலிஸ்ட்ஸ்’ அலுவலகங்களில், சங்கக் காரர்களுக்கும் (மருத்துவ), அவர்களது குடும்பங்களுக்கும் இரண்டாம் ஊசி ஏற்றப்பட்டு வந்தது. அது ‘இந்திய ஊசி’ என மருத்துவர் சங்கம் நிராகரிக்கவுமில்லை, வீதியில் இறங்கிப் போராடவுமில்லை. அல்லது அது ‘றோ’வின் இரகசிய திட்டம் எனக்கூறி அவற்றைத் தமதுடலில் ஏற்றிக்கொள்ள மறுக்கவுமில்லை. விடயம் அம்பலமாகி நிர்வாணமாக்கப்பட்டதும் மீண்டும் போராட்டம் (damage control) வெடித்தது. சங்கத் தலைவர் பிளந்து கொட்டினார். ‘நாங்களும் முன்னரங்கப் பணியாளர்கள் தான். நாம் வீட்டுக்குக் கொண்டுபோகும் கிருமியால் எங்கள் குடும்பங்கள் பாதிக்கப்படுவது எந்த வகையில் அறமாகும்?” என அவர் பொழிந்து தள்ளினார். (புல்லரிக்கிறது).

இதற்கிடையில், இந்தியாவின் கோவிட் நிர்வாகச் சீர்கேட்டினால் கங்கையில் கோவிட் பிணங்கள் மிதக்கத் தொடங்கவும், இலங்கைக்குத் தருவதாக இருந்த இரண்டாம் கட்ட ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிகளை இப்போதைக்குத் தரமுடியாது என இந்தியா கூறிவிட்டது. கொழும்புத் துறைமுக ஒப்பந்தத்தை இலங்கை கிழித்தெறிந்ததனால் கடுப்பேறிய இந்தியா தடுப்பூசி மூலம் பழிவாங்கிவிட்டது எனச் சில சிங்களத் தேசியவாதிகள் குழம்பிக் கொண்டார்கள். முதலாவது டோஸ் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசியைப் பெற்றவர்கள் தமக்கு இரண்டாவது டோஸ் கிடைக்குமா என்ற சந்தேகத்துடன் ஓடித் திரிந்தார்கள். சுகாதார முன்னரங்குப் பணியாளர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த (முதலாவது டோஸ்) தடுப்பூசிகளை இவர்கள் அள்ளிக் கொண்டார்கள்.

இத் ‘திருட்டில்’ முக்கிய பங்கு வகித்தவர் தற்போதைய சுகாதார அமைச்சர் பவித்திராதேவி வன்னியாராய்ச்சியின் கணவர். தனது நண்பர்கள், உறவினர்கள், கூசாக்கள் என்று சகலருக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை விற்றுவிட்டார். இவரைப் போலவே வேறு பல அதிகாரமுள்ள தலைகளும் தத்தம் பாட்டிற்கு பவித்திராதேவியின் சரக்கைக் கையகப்படுத்திக் கொண்டார்கள். புருஷனே திருடும்போது மற்றவர்களை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. தமது முதலாவது ‘டோசுக்கென’ ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகள் பலம் வாய்ந்தவர்களால் ‘திருடப்படுவது’ முன்னரங்கசு சுகாதாரப் பணியாளர்களை ஆத்திரமடையச் செய்தது. இதனால் பல சுகாதார தொழிற்சங்கங்கள் அடையாள வேலைநிறுத்தமொன்றை அறிவித்தன. இதை அறிந்த அரசாங்கம் ‘சில சுகாதார சேவைகள்’ அத்தியாவசியமானவை என்று கூறி அவர்களது பணிமறுப்புக்கான உரிமையை மறுத்துவிட்டது.

சைனோஃபார்ம்

இதற்கிடையில் முதலாம் ‘சைனோஃபார்ம்’ தடுப்பூசி தேடுவாரும், திருடுவாருமில்லாமல் முடங்கிக் கிடந்தது. உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் இல்லாமல் பாவிக்கக்கூடாது என இலங்கையின் மருந்துப்பாவனை அங்கீகார சபை (NMRA) அதற்கு ஆரம்பத்தில் அங்கீகாரம் வழங்கவில்லை. அம் மருந்தின் செயற்திறன், பாதுகாப்பு பற்றிய முழுமையான தகவல்களையும் வழங்க சீனா மறுத்திருந்ததுவே காரணம். இறுதியில் இச் சபையின் நாணயம் மிக்க அதிகாரிகள் சிலரைப் பவித்திராதேவி அம்மையார் பணிவிலக்குச் செய்து ‘சைனோஃபார்முக்கு’ அங்கீகாரம் பெறப்பட்டது. அப்படியிருந்தும் அதைப் போடுவதற்கு மக்கள் முன்வரவில்லை.

ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக் V இற்கும் இதே நிலைமைதான் எனினும் சீனாவைப் போல் அவர்கள் லஞ்சம் கொடுத்துப் பாவனையை ஊக்குவிக்கவில்லை.

இந்நிலையில், என்ன நடந்ததோ தெரியாது, உலக சுகாதார நிறுவனம் ‘சைனோஃபார்ம்’, ‘ஸ்புட்னிக் V’ இரண்டுக்கும் மக்கள் மீது பாவனைக்கான அங்கீகாரத்தை வழங்கியது. இதைத் தொடர்ந்து, மேலும் 1மில்லியன் டோஸ்கள் ‘சைனோஃபார்ம்” மருந்தை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இலங்கையின் ‘ஃபார்மசூட்டிக்கல் கோர்ப்பரேசன்’ சீனாவுடன் செய்துகொண்டது.

மேலும் திருட்டு

‘சைனோஃபார்ம்’ தடுப்பூசியை பங்களாதேஷ், மற்றும் பாகிஸ்தானுக்கு US$5.50 / dose என்ற விலைக்கே சீனா விற்று வந்தது. ஆனால் இலங்கைக்கு மட்டும் அது US$15.00 / dose ஆக விற்கப்பட்டது. சீநாவின் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து நேரடியாக இவற்றைக் கொள்முதல் செய்யாமல் இரண்டாம் தரகர்களிடமிருந்து இவற்றை இலங்கை ஃபார்மசூட்டிக்கல் கோர்ப்பொரேசன் வாங்கியிருந்தது என ‘லங்கா ஈ நியூஸ்’ ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது. சீனி, தேங்காய் எண்ணை ஊழல்களைப் போல், இலாபம் இன்னுமொரு கூட்டாளியின் வங்கிக் கணக்கில் இடப்பட்டிருக்கலாம். யாரோ சிலரின் பேராசைக்கு நாடு தீனி போடுகிறது.

இவ்வூழல் திட்டத்தின் கீழ்,1 மில்லியன் டோஸ்கள் ‘சைநோஃபார்ம்’ தடுப்பூசிகள் ஜூன் 9ம் திகதி வந்திறங்கவுள்ளன. அவற்றைக் கட்டாயமாகத் திணிப்பதற்கு அரசாங்கம் தயாராகிவிட்டது. மேலும் 14 மில்லியன் டோஸ்கள் வரவிருக்கின்றன என்கிறார்கள்.

அது இருக்கட்டும், சிங்களத் தலைவர்கள், மக்கள், விரும்பாத ‘சைனோஃபார்ம்’ எங்கே அனுப்பப்படுகிறது? பவித்திராதேவியின் கட்டளைப்படி 25,000 டோஸ்கள் மாத்தளை, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, பொலானறுவை, குருணாகல், புத்தளம், மொனராகல ஆகிய மாட்டங்களுக்கும், 50,000 டோஸ்கள் நுவர எலிய, அம்பாந்தோட்டை, அனுராதபுரம், பதுளை, கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது. வட மாகாண மாவட்டங்களுக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுவிட்டது. யாழ்ப்பாணத்தில் இத் தடுப்பூசியைப் போட மறுத்தவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென மிரட்டப்படுவதாகவும் கேள்வி.

தடுப்பு மருந்து விநியோக முறை

உயர் தலைவர்களிலிருந்து கிராம நாட்டாண்மைகள் வரைக்கும் ஒவ்வொருவருக்கும், அவரவர் ஆதிக்கத்துக்கு ஏற்ப டோக்கன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்படித்தான் அதிகக் குரலெழுப்பும், அதி வணக்கத்துக்குரிய முறெத்தெட்டுவ தேரோவுக்கும் கொடுக்கப்பட்டது. ஒருநாள் அவர் தனது பக்த கோடிகளைத் தனது விகாரைக்கு அழைத்துத் தமக்கு உடனடியாகத் தடுப்பு மருந்து தரவேண்டுமென ஆர்ப்பாட்டம் செய்ய வைத்தார் தேரர். தமது விநியோகப் பட்டியலில் இல்லாமலிருந்தும், எங்கே அங்கு கூடியவர்களுக்கு கோவிட் தொற்றிவிடுமோ என அஞ்சிய பவித்திராதேவியார் உடனடியாகச் சில பெட்டிகளை அனுப்பி அம்மக்களுக்கு ‘அஸ்ட்றா செனிக்கா’ மருந்தை வழங்கிவிட்டார். மகிழ்ச்சியடைந்த தேரர், இப்போது அரசாங்கத்தைப் பற்றிக் குரலெழுப்புவதை தவிர்த்துக்கொண்டார். மொறட்டுவ மேயருக்கும் இப்படி டோக்கன்களும், வாக்குறுதியும் கொடுக்கப்பட்டிருந்தது. அதையும் மீறி ஒரு துணிச்சலான பெண் சுகாதாரப் பணியாளர் உரியவர்களுக்குத் தடுப்பூசிகளை வழங்கியதால் அரசியல்வாதிகள் பிடிபட்டுப் போனார்கள். வழக்கம்போல கோதாபயவுக்குக் கடும் கோபம் வந்து அதைச் சர்வ வல்லமை பொருந்திய நாமலின் மன்னிப்பு அடக்கி விட்டிருந்தது.

பேச்சாளர்கள்

எப்படி ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்து மக்களைக் கோவிட் நோயிலிருந்து காக்கிறதோ அப்படி, அரசாங்கத்தை எதிர்நோக்கும், ஊழல், பொறுளாதாரம், உட்கட்சிப் போராட்டம், குடும்பப் பகை, தொழிற்சங்கங்களின் போராட்டம், புத்த பிக்குகளின் போராட்டம், மேற்குநாடுகளின் போராட்டம், சிறுபான்மை இனத்தவரின் போராட்டம் என்ற பல வகையான பேரிடர்களிலுமிருந்தும் அரசாங்கத்தை கோவிட் இதுவரை காப்பாற்றி வருகிறது. வந்தவர் போனவரெல்லாம் தான்தோன்றிப் பேச்சாளர்களாகிப், பேச்சு வராத ஜனாதிபதியைக் காப்பாற்றி வருகிறார்கள். அதிகம் பேசாதவகையில் அவரை எவரும் குற்றம் காண முடியாமலிருக்கிறது. தேவையானால் ஜனாதிபதி செயலணியை அவர் எந்நேரமும் உருவாக்குவார். போதுமான அளவுக்குப் பேராசிரியர்களும், டாக்டர்களும், ஜெனெரல்களும் வரிசையில் நிற்கிறார்கள். இக் கூட்டங்களுக்கு ஷங்கிரிலா ஓட்டல் 24/7 திறந்து மதுவுவந்து பணியாற்றக் காத்திருக்கிறது. செலவு அரசாங்கத்தில்.

ஒவ்வொரு ஊடகத்துக்கும் ஒவ்வொரு பேச்சாளர்கள் எதிரெதிரான கருத்துக்களைக் கூறி வருவதால் மக்கள் எதையும், எவரையும் நம்புவதில்லை. எனவே அதுபற்றி அரசாங்கமும் கவலை கொள்வதில்லை. மக்களுக்கும் இப்போது கோவிட் பற்றிய கவலைகளைவிடத் தாம் எங்கே எப்போது எதற்காகக் கைதுசெய்யப்படுவோம் என்பதுவே கவலை. போர்க்காலத்தில் ஜோர்ஜ் புஷ் சொன்னதைப் போல, “if you are not with us, you are with the enemy’ என்பதுவே தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் கொள்கை. எனவே மக்கள் இப்போது அபிப்பிராயம் சொல்வதில்லை. அரசியல்வாதிகளே தமக்குள் முரண்பாடான கருத்துக்களைச் சொல்லி வருகிறார்கள். எதிர்க் கட்சி, காற்றுப்போன வாகனமாகக் கட்டையில் ஏற்றப்பட்டு நிற்கிறது.

இப்பேரிடர்களிலிருந்து அரசாங்கத்தையும் அதில் புளுத்துப்போயிருக்கும் பெருச்சாளிகளையும், மக்களையும் காப்பாற்ற வல்ல ஒரே ஆபத்பாண்டவனாக துறைமுக நகரம் கடலிலிருந்து தோற்றமெடுத்திருக்கிறது என சீனாவின் பக்தகோடிகள் தீர்க்கமாக நம்புகிறார்கள். இதற்காகச் சீனக் கடவுளுக்குக் கொழும்பு நகரம் படிப்படியாகப் பலியிடப்பட்டு வருகிறது. அரசாங்கம் எதிர்பார்ப்பதைப்போல் சீன நிலத்தில் களியாட்டம் காண உலகம் படையெடுக்கப்போகிறது; கஜானா நிரம்பி நாடெங்கும் வழியப்போகிறது என இலங்கை ஆட்சியினர் வீணி வடிப்பது வெற்றியளிக்குமா என்பது சந்தேகமே. இதுபற்றிப்பேசிக்கொண்டிருந்தபோது ‘don’t underestimate India’ என்றார் நண்பரொருவர். முள்ளிவாய்க்காலில் இந்தியாவையும், அமெரிக்காவையும், உலகத்தையும் overestimate பண்ணிய தமிழர்கள் நாம். மாறிகள் (variables) என்னவென்பதை அறியாமல் சமன்பாட்டைத் தீர்க்க முடியாது. உலகத்தை auto mode இல் விட்டுவிடுவதே நல்லது எனப்படுகிறது. தக்கன பிழைத்துப் போகட்டும்.