தடுப்பூசி மறுக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர் கோவிட் தொற்றினால் மரணம்!


யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம், தமிழ் ஊடகவியலாளர் பிரகாஸ் ஞானப்பிரகாசம் கோவிட் தொற்றுக்குள்ளாகி மரணமானார். பல தமிழ் ஊடகங்களுக்கு செய்திகளை வழங்கும் அவர் தனக்கு தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சு அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள் என புதனன்று தனது ருவீட் செய்தி மூலம் தெரிவித்திருந்தார்.

பிரகாஸ், தசைச் செயலிழப்பு (muscular dystrophy) நோயால் பீடிக்கப்பட்டிருந்ததால் அவருக்கு தடுப்பூசி மறுக்கப்பட்டது எனவும் தனது ருவீட்டில் தெரிவித்திருக்கிறார்.

“ஐந்து நாட்கள் தொடர்ந்து காய்ச்சல் இருந்த நிலையில் இன்று நான் கோவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளேன். பொதுவாக எனது உடல்நிலை நன்றாகவே இருந்தது. நான் ஒரு தசைச் செயலிழப்பு நோயாளி. ஆனால் எனக்கு இதுவரை தடுப்பூசி வழங்கப்படவில்லை” என, புதனன்று, அவர் தனது ருவீட் செய்தியில் தெரிவித்திருந்தார்.

ஏன் இதுவரை அவர் தடுப்பூசி எடுக்கவில்லை என ருவிட்டரில் கேட்கப்பட்டபோது “நான் தசைச் செயலிழப்பு நோயாளியாக இருந்ததநால் அதிகாரிகள் எனக்குத் தடுப்பூசி வழங்க மறுத்துவிட்டார்கள். எனது தந்தையார் சுகாதார அமைச்சு அதிகாரிகளைக் கேட்டபோது, எனது மருத்துவக் கோவையைப் பரிசோதித்த அவர்கள் தடுப்பூசியைத் தர மறுத்துவிட்டார்கள்” என அவர் பதிலளித்திருந்தார்.

அவர் விரைவில் குணம்பெறவேண்டுமெனப் பிரதமரது அலுவலகம் உட்படப் பலர் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.

இருப்பினும் வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்ற அவர் திடீரென ஏற்பட்ட சுவாசக் கோளாற்றினைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு நேற்று (வியாழன் 02) உயிரிழந்தார். (கொலொம்பொ கசெட்)