US & Canada

ட்றம்ப் மீது கொலை முயற்சி!

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியும் குடியரசுக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படவிருப்பவருமான டொனால்ட் ட்றம்ப் மீது நேற்று (சனி) கொலை முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டதெனவும் அதில் அவர் சிறு காயத்துடன் தப்பிவிட்டாரெனவும் தெரிகிறது. துப்பாக்கிதாரி பென்சில்வேனியாவைச் சேர்ந்த 20 வயதுடைய தோமஸ் மத்தியூஸ் குறூக்ஸ் எனவும் அவர் இரகசிய பொலிசாரினால் சுடப்பட்டு இறந்துவிட்டதாகவும் அறியப்படுகிறது. சூடு நிகழ்த்தப்பட்டதற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை, மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பென்சில்வேனியாவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ட்றம்ப் பேசிக்கொண்டிருந்தபோது சுமார் 50 மீட்டர் தூரத்திலுள்ள ஒரு கொட்டகையின் கூரையிலிருந்து துப்பாக்கிதாரி றைபிள் மூலம் சுட்டதாகவும் அதில் ஒரு குண்டு ட்றம்பின் வலது காதின் மேற்புறத்தைக் காயப்படுத்திவிட்டதெனவும் வேட்டுச் சத்தத்தைக் கேட்டு ட்றம்ப் உடனே மேடையில் பதுங்கிக்கொண்டதனால் அவர் தப்பிவிட்டதாகவும் தெரிகிறது. இதன்போது ஒரு பார்வையாளர் துப்பாக்கிதாரியின் குண்டுக்குப் பலியாகிவிட்டதாகவும் இன்னுமொருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிகிறது.


சமபவம் நடைபெறுவதற்கு சில நிமிடங்களின் முன்னர் துப்பாக்கிதாரி கூரையில் நகர்வதைப் பார்த்த ஒருவர் இதுபற்றி இரகசியப் பொலிசாரிடம் தெரிவித்ததாகவும் ஆனால் அவர்கள் அதைச் சிரித்துக்கொண்டு உதாசீனம் செய்துவிட்டதாகவும் இதன் காரணமாக இதற்குப் பொறுப்பான பொலிஸ் தலைமை உடனடியா பதவி விலகவேண்டுமெனக் குரல்கள் எழுப்பப்பட்டுவருகின்றன எனவும் தெரிகிறது.

துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து எலான் மஸ்க் டொனால்ட் ட்றம்பிற்கு தனது ஆதரவைத் தெரிவித்ததுடன் பொலிசார் மீது விசாரணை ஒன்று நிகழ்த்தப்படவேண்டுமென கோரிக்கையும் விடுத்துள்ளார்.