News & Analysisசிவதாசன்

ட்றம்பிற்கு நோபல் பரிசு? | மத்திய கிழக்கின் இரகசிய நகர்வுகள்


சிவதாசன்

‘ஆபிரஹாம் ஒப்பந்தம்’ தயார், நோபல் பரிசு தயாரா?

ட்றம்ப் பற்றி என்ன செய்தி வந்தாலும் அதை உண்மை பார்க்குமளவுக்கு (fact check) அவர் தன்னைத் தானே ஒரு நகைச்சுவை நாயகனாக்கியிருக்கிறார். அவரது பேச்சுக்களும், நடவடிக்கைகளும் அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் முக்காடு போட வைத்தாலும் உலகம் அதனால் ஏகப்பட்ட நன்மைகளை அனுபவித்து வருகிறது என்பது ஒரு கணிப்பு.

இக் காரணங்களுக்காக, ட்றம்ப் ஒரு ‘தற்செயல் ராஜதந்திரி’ (accidental diplomat) என அரசியல் ஞானிகள் அழைக்கவாரம்பித்திருக்கிறார்கள். தனக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படவேண்டும் என அவர் எதிர்பார்ப்பதாகவும் செய்திகள் வருகின்றன. அது ஒரு கோமாளித் தனமான எதிர்பார்ப்பாக இருந்தாலும், ஒபாமாவுக்கு அப் பரிசு கொடுக்கப்பட்டதை விட ட்றம்பிற்குக் கொடுக்கவேண்டுமென்பதற்குப் பல காரணங்கள் உண்டு.

மத்திய கிழக்கை எடுத்துக்கொள்வோம். இன்று ஐக்கிய அரபு எமிரேட் (United Arab Emirate (UAE)) மற்றும் பாஹ்ரெய்ன் (Bahrain) நாடுகளுக்கும் பாரம்பரிய எதிரி நாடான இஸ்ரேலுக்கும் உறவுகளை மீள ஏற்படுத்தும் ஒப்பந்தங்கள் வெள்ளை மாளிகையில் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதில் பாஹ்ரெயின் – இஸ்ரேலிய ஒப்பந்தம் அரபுப் பயங்கரவாதத்தின் உச்சமெனக் கருதப்படும் 9/11 நாளன்று ட்றம்ப் தாரை தப்பட்டைகளுடன் அறிவித்திருந்தார். ‘ஆபிரஹாம் ஒப்பந்தம்’ என அழைக்கப்படும் அரபு எமிரேட்டுடனான இஸ்ரேலிய ஒப்பந்தம், மற்றும் பாஹ்றேயின் ஒப்பந்தங்களை ‘வசதிக்கான கல்யாணம்’ எனச் சிலர் வர்ணிக்கிறார்கள். உண்மையாகவுமிருக்கலாம். நமக்கு விருப்பமோ விருப்பமில்லையோ இது வரலாற்றில் குறிக்கப்பட வேண்டிய முக்கிய நிகழ்வுகள்.

ட்றம்ப் பதவியேற்றதிலிருந்து சொல்லிவரும் ஒரு விடயம், அமெரிக்கப் படைகளுக்கு வெளி நாடுகளில் வேலை இல்லை, அவர்களை நான் திருப்பியழைப்பேன் என்பது. அது அமெரிக்கர்களின் உயிர் மீதான கரிசனையால் அல்ல, அமெரிக்கப் பணம் வீணடிக்கப்படுகிறது என்பதற்காக.

2019 இல் அமெரிக்கா பாதுகாப்பு காரணங்களுக்காக ஒதுக்கிய தொகை $686 பில்லியன். மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு வருடா வருடம் கொடுக்கப்படும் உதவி ஏறத்தாள $4 பில்லியன். 1980 இலிருந்து இன்று வரை எகிப்துக்கு அமெரிக்கா வழங்கியிருக்கும் இராணுவ, பொருளாதார உதவி $70 பில்லியன். இஸ்ரேலைச் சூழவுள்ள எதிரி நாடுகளான அரபு நாடுகளிடமிருந்து அதைப் பாதுகாக்க அது அமெரிக்காவை நம்பியிருக்கிறது. இந் நிலையில் அமெரிக்காவிற்கு வரவு இல்லாத செலவுகள் மட்டுமே மிஞ்சுகிறது. போதாததற்கு மத்திய கிழக்கில், ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகளை நிர்வகிக்கும் செலவு வேறு.ஒரு வணிகரான ட்றம்ப் பிற்கு இலாப நட்டம் மட்டுமே முக்கியம். உலக மேலாண்மை பற்றி அவருக்கு அதிகம் அக்கறையில்லை. எனவே உலகெங்குமிருந்து அமெரிக்கப்படைகளை ஊருக்குக் கொண்டுவருவேன் என அவர் மிரட்டுவதற்குக் காரணமிருக்கிறது.

மறு பக்கத்தில், உலக ஏழைகள், சூழல் அது இது என மிதவாதம் பேசி நீலிக்கண்ணீர் வடிக்கும் ஒபாமா போன்ற வால் ஸ்ட்றீட் அடிமைகள் தான் ஆப்கானிஸ்தானில் ட்றோண்கள் மூலம் அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றவர்கள். ட்றம்ப் இதுவரை உலகத்தில் எந்தவொரு போரையும் ஆரம்பிக்கவில்லை. அதுகூட, அப்பாவி மனித உயிர்கள் பற்றிய கரிசனையால் அல்ல. மற்றவர்களின் பிரச்சினைக்குள் எனக்கென்ன வேலை என்கிற எண்ணப்பாடுதான். ஒபாமாவைப் போல், கண்ணீர் சிந்தாமல் அதை ஏளனமாகச் சொல்கிறார்.

மீண்டும் மத்திய கிழக்கிற்கு வருவோம்.

ஈரானின் அணுக்குண்டு தயாரிப்பு விவகாரம் அப் பிராந்தியத்தில் இருக்கும் பல சுனி அரபு நாடுகளுக்கு மிகுந்த அச்சத்தைக் கொடுத்து வருகிறது. அவர்கள் தமது பாதுகாப்புக்கென அமெரிக்காவிடம் ஆயுதங்களை வாங்க முனைந்தார்கள். இதற்கு அமெரிக்காவின் நண்பரும், அரௌ நாடுகளின் பரம எதிரியுமான இஸ்ரேல் எதிர்ப்புத் தெரிவித்தது. இதனால் அந்நாடுகள் ஆயுதக் கொள்வனவுக்காக வேறு நாடுகளைத் தேடிப் போகும் நிலை. பெரும் பணக்கார நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பதன் மூலம் அமெரிக்க வருவாயை அதிகரிக்கும் சந்தர்ப்பம் ட்றம்பின் கையை விட்டு நழுவ ஆரம்பித்தது. அரபு நாடுகளைக் கைக்குள் போட்டு அவர்களுக்கு ஆயுதங்களை விற்க ட்றம்ப் திட்டம் தீட்டினார்.

இந்த நிலையில், ட்றம்ப் இஸ்ரேலிய கடும்போக்குவாதி நெட்டன்யாஹுவுடன் சேர்ந்து தீட்டிய ‘மத்திய கிழக்கு அமைதித் திட்டம்’ குறுக்கே வந்தது. பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப் பிரதேசத்தில் மூன்றிலொரு பங்கை இஸ்ரேலுக்குத் தாரைவார்த்துக் கொடுத்தால், சில வருடங்களில் பாலஸ்தீனத்தைத் தனி நாடாக இஸ்ரேலும், அமெரிக்காவும் அங்கீகரிக்கும் என்பதே அத் திட்டம். பாலஸ்தீனர்கள் அதற்கு உடன்படமாட்டார்கள் என்பது தெரியும். ஆனால் ஜோர்தான் ஆற்றின் கிழக்குக் கரையில் இருக்கும் அமெரிக்காவின் நட்பு நாடான ஜோர்தானுக்கும் இத் திட்டம் தலையிடியைக் கொடுத்த ஒன்று. ஜோர்தானிலும் ஏராளமான பாலஸ்தீனிய அகதிகள் வாழ்கின்றார்கள்.ஜோர்தான் முதற்கொண்டு பல அரபு நாடுகள் பாலஸ்தீன விடயத்தில் இஸ்ரேலுக்கு எதிரான கொள்கையைக் கடைப்பிடிப்பதற்கு ஒரு காரணம் அநேகமான அரபு நாடுகள் ஒன்றில் இராணுவ ஆட்சிக்குள்ளேயோ அல்லது சர்வாதிகாரிகளின் ஆட்சிகளுக்குள்ளேயோதான் இருக்கின்றன. அங்கு மக்கள் புரட்சி ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்காக இந் நாடுகள் பலஸ்தீனக் கொள்கையில் இஸ்ரேலுக்கு எதிராந நிலைப்பாட்டை எடுக்கவேண்டியிருக்கிறது.

இப் பிரச்சினைகளையெல்லாம் வெட்டியாண்டுகொண்டு தீர்வோடு வந்திருக்கிறார், ட்றம்பின் மருமகன், ஜெரார்ட் குஷ்னெர்.

ஜெரார்ட் குஷ்னெர் ஒரு ஜூதர். ட்றம்ப் ஆதரவாளர்களில் பெரும்பங்கினர் தீவிர யூத எதிர்ப்புக் கொள்கைகளைக் கொண்டிருந்தாலும், ஜெரார்ட் குஷ்னெர் ட்றம்பின் மத்திய கிழக்கு ஆலோசகராகத் திறம்படச் செயலாற்றுவது மட்டுமல்ல, இஸ்ரேலிய ஆட்சியாளரின் விருப்பங்களையும், தேவைகளையும் அமெரிக்காவைக் கொண்டு நிறைவேற்றி வருவதிலும் மகா கெட்டிக்காரர்.

தற்போதய அரபு – இஸ்ரேலிய உறவுப் பாலத்தைக் கட்டியெழுப்புவதின் பின்னணியிலும் குஷ்னெர் தான் இருக்கிறார்.

ட்றம்ப் பதவியேற்ற நாளிலிருந்தே அரபு – இஸ்ரேலிய உறவு பின் கதவால் வளர்க்கப்பட்டு வருகின்றது. அரபு நாடுகளுக்கு பாலஸ்தீனப் பிரச்சினை ‘மக்களை அமைதியாக வைத்திருப்பதற்கு’ மட்டுமே தேவை. எனவே ட்றம்பின் ‘மத்திய கிழக்கு அமைதித் திட்டம்’ அவர்களை இக்கட்டான நிலையில் தள்ளிவிட்டிருந்தது. எனவே குஷ்னெர் இன்னுமொரு திட்டம் போட்டார். இதன்படி, ட்றம்பின் ‘மத்திய கிழக்கு அமைதித் திட்டம்’ பெட்டிக்குள் வைத்து நிரந்தரமாக மூடப்பட்டது.

இதற்குக் காரணம் அரபு எமிரேட்டின் தலைவர் ஷேய்க் முகாமட் பின் சாயிட். ‘மேற்குக் கரையை இஸ்ரேல் கைப்பற்றும் திட்டத்தைக் கைவிட்டால் நாம் இஸ்ரேலை அங்கீகரிக்கத் தயார்’ என அவரது பேரம் இருந்தது. ஏற்கெனவே பின் கதவால் இஸ்ரேலுடன் உறவுகளை வளர்த்துக்கொண்டுவரும் அரபு நாடுகளில் எமிறேட்டும் ஒன்று. ‘பாலஸ்தீனர்களுக்காக நாம் இதைச் செய்யத் தயார்” என அது முன்வந்தது பாலஸ்தீனர்களுக்கு மிக்க மகிழ்ச்சி. மேற்குக் கரை காப்பாற்றப் பட்டதில் ஜோர்தானுக்கு மகிழ்ச்சி. எகிப்து, ஜோர்தானுக்கு அடுத்தபடியாக இஸ்ரேலை அங்கீகரித்த மூன்றாவது நாடாக எமிறேட் வருகிறது.மேற்குக் கரையை இணைப்பேன் எனச் சூளுரைத்துக்கொண்டு ஆட்சிக்கு வந்த நெட்டன்யாஹுவிற்கு இது தீவிர வலதுசாரிகளுடனான பிணக்குகளை அதிகரித்தாலும், அரபு நாடுகளின் அங்கீகாரம் என்பது இஸ்ரேலின் பாதுகாப்பை வலுப்படுத்தும் என்பது ஒரு அரசியல் வெற்றியாகிறது.

ஏற்கெனவே சவூதி அரேபியாவிற்கு பின் கதவால் ஆயுத விற்பனையைச் செய்வதற்கு தன் மாமனாரை வற்புறுத்தி இணங்கச் செய்த குஷ்னர் முன் இப்போதுள்ள அடுத்த வேலை, எமிரேட் நீண்டகாலமாகக் கேட்டுவரும் ஆயுதக் கொள்வனவு. ஈரான் என்ற பொது எதிரிக்கு எதிராக அரபு நாடுகளை ஆயுதம் தரிக்க வைக்கும் ராஜ தந்திரம். குஷ்னெரின் ஒரு கல்லில் பல மாங்காய்கள்.

ஈரான் என்ற ஒரு அணு ஆயுத நாடு மத்திய கிழக்கில் நிலைகொள்வதை இஸ்ரேல் ஒருபோதும் விரும்பவில்லை. ஈரான் மீது அமெரிக்காவைப் போர் தொடுக்க வைக்க அது பகீரதப் பிரயத்தனைங்களை எடுத்து வருகிறது. அணுவாயுத உருவாக்கத்தைத் தடுப்பதற்காக ஒபாமா நிர்வாகமும் ஐரோப்பிய நாடுகளும் இணைந்து செய்த ஒப்பந்தத்தை ட்றம்ப் கிழித்தெறிந்தது சுய விருப்பத்தினால் அல்ல. இப்போது ஈரானுக்கு எதிராக சுனி அரபு நாடுகளை அணி திரட்டுவதோடு, அவர்களுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதன் மூலம் அமெரிக்கா மேலும் இலாபமடையப் போகிறது.

எமிரேட்டுக்கு அடுத்தபடியாக பாஹ்றெயினும் இஸ்ரேலை அங்கீகரித்திருக்கிறது. இவர்களுக்கு விற்கப்படும் அமெரிக்க ஆயுதங்களின் கவர்ச்சி விரைவில் மேலும் பல அரபு நாடுகளைப் பின்தொடரச் செய்யும்.

அரபு நாடுகளுக்கு இது மிகவும் இனிப்பான செய்தி. பெருகிக் கிடக்கும் பெற்றோல் பணத்தில் மினுங்கும் ஆயுதங்களை வாங்கிக் குவிக்கலாம்.

இஸ்ரேலுக்கு இச் செய்தி ஒரு வரப்பிரசாதம். எப்போது தலைகள் மீது ஏவுகணைகள் விழலாம் என அச்சத்தில் வாழும் இஸ்ரேலிய மக்கள் இனி தீவிர மதவாதக் கட்சிகளின் தேவைகளற்ற நெட்டன்யாஹு ஆட்சியைத் தெரிவு செய்யலாம்.

பாலஸ்தீனியர்களுக்கு, மேற்குக்கரை இணைப்பு நடைபெறவில்லை என்பது, அங்கு நடைபெறும் இஸ்ரேலிய குடியேற்றங்களை விட நல்ல செய்தியாக இருக்கலாம். மல்கம் எக்ஸ் கூறியது போல, “என்னை 9 அங்குலங்கள் குத்திவிட்டு 6 அங்குலங்கள் கத்தியை வெளியே இழுப்பதை முன்னேற்றம் என்று சொல்ல முடியாது”. பாலஸ்தீனியர்களின் நிலைமையும் இதுவேதான். நிலம் நிரந்தரமாகப் பறிபோவதென்பது இறப்புக்குச் சரி. எனவே அவர்கள் தற்காலிகமாக அரபு நாடுகளை மன்னித்து அமைதி கொள்ளலாம்.தனது படைகளைப் பாதுகாப்பாக வீட்டிற்குக் கொண்டு வந்துவிட்டு, மத்திய கிழக்கில் கடந்த பல தசாப்தங்களாகப் பரம எதிரிகளாக இருந்தவர்களை உறவாக்கி ஆயுதங்களை விற்குமளவுக்கு திடீரென்று ராஜதந்திரியான ட்றம்பிற்கு சமாதானத்துக்கான நோபல் பரிசை நிச்சயம் கொடுக்கலாம். போர்களைப் புரிந்துகொண்டே சமாதனத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற ஒபாமாவைவிட ட்றம்ப் எதையோ சாதித்திருக்கிறார்.

இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால், பலர் இரு பகுதியினரையும் இணைத்து சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதன் இணக்கத்தை எட்டுவார்கள். ட்றம்ப் போன்றோர் எதிரிகளைப் பிரித்து மூலைகளுக்குள் முடக்கிப் பின் இணங்கவைப்பார்கள். கரும்புக்கும் தடிக்கும் எப்போதும் பலன் கிடைக்கிறது.

துரும்பர் (ட்றம்ப்) இரண்டாவது அவதாரம் எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.