World

ட்றம்பிற்கு ‘தங்க ஹெஸ்பொல்லா பேஜர்’ பரிசளிப்பு

இஸ்ரேல் அதிபர் நெட்டந்யாஹுவின் சமீபத்திய அமெரிக்க வரவின்போது அவர் தங்கத்தினால் செய்யப்பட்ட பேஜர் ஒன்றை ஜனாதிபதி ட்றம்பிற்குப் பரிசளித்திருந்த விடயத்தை இஸ்ரேலிய ஊடகமொன்று உறுதி செய்திருக்கிறது.

கடந்த வருடம் செப்டம்பர் 17 அன்று லெபனானிலும் சிரியாவிலும் ஹெஸ்பொல்லா அமைப்பின் அங்கத்தவர்கள் வைத்திருந்த பேஜர்கள் வெடிக்க வைக்கப்பட்டதன் காரணமாக 12 பொதுமக்கள் உட்பட 42 பேர் கொல்லப்பட்டும் 3,500 பேர் காயமடைந்துமிருந்தனர். இவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர். இத்தொடர் குண்டுவெடிப்புகளுக்கு தானே பொறுப்பு என நெட்டன்யாஹு அப்போது கூறியிருந்தார்.


இச்சம்பவம் ஹெஸ்பொல்லா அமைப்பை நிலைகுலையச் செய்திருந்தது மாத்திரமல்லாது அவர்களது மறைவிடங்களையும் காட்டிக்கொடுத்தன் மூலம் செப்டம்பர் 27 அன்று அவ்வமைப்பின் தலைவர் ஹஸ்ஸான் நஸ்ரல்லா அவர்களை இஸ்ரேல் குறிவைத்துக் கொல்லவும் காரணமாக அமைந்தது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்ரேல்-ஹெஸ்பொல்லா போரில் ஹெஸ்பொல்லா தொடர்ச்சியான பின்னடைவுகளைக் கண்டது. இச்சம்பவம் தொடர்பாக அப்போது கருத்துத் தெரிவித்த ட்றம்ப் “இது ஒரு மிகச்சிறந்த நடவடிக்கை” என நெட்டந்யாஹுவை வாழ்த்தியிருந்தார்.

தங்க ‘ஹெஸ்பொல்லா பேஜர்’

இதை மனதில் நிறுத்தி நெட்டன்யாஹு கடந்த வாரம் அமெரிக்கா வந்தபோது தொடர் குண்டு வெடிப்பிற்குக் காரணமான பேஜரின் தங்கத்தினாலான பிரதியொன்றை ட்றம்பிற்குப் பரிசாகக் கொடுத்திருந்தார். இவ்விடயத்தை ட்றம்ப் அறிவிப்பதற்கு முன்னர் நெட்டன்யாஹுவின் ஆலோசகரான டிமிட்றி கெண்டெல்மான் தன்னுடைய ரெலிகிராம் பதிவில் வெளியிட்டு உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இப்பரிசுக்குப் பதிலாக “இது மிகச் சிறந்த தலைவர் பிபி க்கு” எனத் தனது கைப்பட எழுதிய குறிப்பொன்றை ட்றம்ப் பரிசளித்துள்ளார் என அறியப்படுகிறது. நெட்டன்யாஹுவிற்கு நெருக்கமானவர்கள் அவரை பிபி என அழைப்பது வழக்கம்.

ஹெஸ்பொல்லா மீதான தொடர் குண்டுவெடிப்புக்களுக்கான திட்டத்திற்கான தயாரிப்பு வேலைகள் பத்தாண்டுகளுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டுவிட்டதெனவும் அதன் முன்னோடியாக கபடமான நிறுவனங்கள் மூலம் ஹெஸ்பொல்லா அமைப்பினருக்கு வெடிக்கும் பற்றறிகளைக் கொண்ட வாக்கி ரோக்கிகள் விநியோகிக்கப்பட்டு பரீட்சிக்கப்பட்டதென்றும் அது வெற்றியளித்த பட்சத்தில் பின்னர் பேஜர்கள் மூலம் செப்டம்பர் 07 இல் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டதெனவும் மொஸாட் ஏஜெண்டுகள் கூறியதாக கடந்த டிசம்பரில் சீ.பி.எஸ். தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது.

இத்தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்பாகக் கருத்து வெளியிட்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் ஃபோக்க்ர் ரேர்க் “அதிச்சி தரும் இச்சம்பவங்கள் மனித உரிமை மீறல்கள்; இவை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை” என அப்போது கூறியிருந்தார்.