World

ட்றம்பின் பழிவாங்கல் | இரவிரவாகக் கொலைக் களங்களாகும் அமெரிக்கச் சிறைகள்


சிறப்புக் கட்டுரை

மாயமான்

தனது பதவிக்காலம் முடிவதற்குள்ளாக, அமெரிக்க மத்திய சிறைகளில் மரணதண்டனை விதிக்கப்பட்டு நீதிக்காகவும் மன்னிப்புக்காகவும் ஏங்கிக்கொண்டிருக்கும் கைதிகளை இரவோடிரவாக ‘முடித்து’ விடுவதில் இன்பம் கண்டுவருகிறார் ட்றம்ப். இரண்டாம் உலகப் போரிற்குப் பிறகு அதிக மரணதண்டனைகளுக்கு உத்தரவிட்ட ஜனாதிபதியென்ற பெயர் அவருக்குப் போகிறது.

இந்த அவசரக் ‘கொலைகளுக்கு’ ட்றம்ப் மட்டுமல்ல தம்மை நாணயஸ்தராகக் காட்டிக்கொண்டு பதவியைத் துறக்கும் சட்டமா அதிபர் வில்லியம் பார் முதல் ‘கண்ணீர் மன்னன்’ பராக் ஒபாமா வரையில் எல்லோரும் காரணகர்த்தாக்கள் தான்.

இதில் கொடுமை என்னவென்றால் இந்த அவசர பலிபீடத்துக்கு இன்றிரவு யாரைக் கொண்டுபோவது என்பது அதிகாரிகளின் விருப்பு வெறுப்புக்களைப் பொறுத்தது. அதிகாரத்தில் இருப்பவர்கள் யாரென்பதையும் தண்டனை தீர்க்கப்பட்டவர்கள் யாரென்பதையும் முழு அமெரிக்காவுமே அறியும்.

கைதிகளுக்கு விஷ ஊசி ஏற்றுவதன்மூலமே தற்போது மரணதண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன. இந்த முறையைப் பரிந்துரைத்தவர்கள் இரண்டு பேராசிரியர்கள். இப்படியான ஒரு கொலை சமீபத்தில் பிழைத்துப்போனதுமுண்டு.

தண்டனை நிறைவேற்றப்படுவதற்கான நாளை எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் சார்பில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வழக்காடிக்கொண்டிருக்கும்போது அவரைக் கட்டிலில் பிணைத்தபடி கொலைக்களத்துக்குக் கொண்டுபோகக் காத்திருந்தார்கள். இன்னொருவரது மேல்முறையீட்டுக்காகக் காத்திருந்தபோது அவரது மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. புதிய ஜனாதிபதி பைடன் நிர்வாகம் இவர்களை மன்னித்துவிடும் என்ற அச்சம். ‘கைக் காசுக்கு’ பிரத்தியேக கொலைகாரர்களைப் பிடித்து இரவோடிரவாகத் தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன. கொலைக்குப் பாவிக்கப்படும் மருந்து சட்டவிரோத மருந்தகத்திலிருந்து பெறப்படுகிறது.மரண தண்டனைக்குப் பாவிக்கப்படும் மருந்தை உறுதிப்படுத்துவது முதல், மரணதண்டனைகளை அத்தாட்சிப்படுத்துவதுவரை அமெரிக்க சட்டமா அதிபரினால் செய்யப்படுகிறது. தற்போது கடமையிலிருக்கும் சட்டமா அதிபர் வில்லியம் பார், ஜனாதிபதி ட்றம்புடன் கொண்ட கருத்துவேறுபாட்டினால் நாளை (புதன்) கிழமை தனது பதவியிலிருந்து விலகுகிறார். தற்போது நிறைவேற்றப்பட்டுவரும் தண்டனைகள் எல்லாவற்றையும் அத்தாட்சிப்படுத்திய பாருக்கும் இக் கொலைகளில் ஓரளவு பங்கு உண்டு.

மரண தண்டனைகள் மீளக்கொண்டுவரப்பட்டது ஜோர்ஜ் ட்பிள்யூ புஷ் (2003) காலத்தில். ஆனால் பராக் ஒபாமா (2011) காலத்தில்தான் இதற்கான அடித்தளம் போடப்பட்டது. ட்றம்ப் பதவியேற்றதும் இக்காரியம் முடுக்கப்பட்டது. 1994 இல் பில் கிளின்ரனால் கொண்டுவரப்பட்ட சட்டம் அமெரிக்கச் சிறைகளைக் கறுப்பின மக்களால் நிரப்பியது. எல்லா ஜனாதிபதிகளுமே தாங்கள் குற்றவாளிகளுக்கு எதிரானவர்கள காட்டுவதற்காகப் போட்டி போட்டுக்கொண்டு முன்நின்றனர். ஒபாமா அதற்கெதிராகப் போராடவில்லை. அதனால் அவரது காலத்திலும் கிளின்ரனது கொள்கை மிக உக்கிரமாகப் பிரயோகப்படுத்தப்பட்டது. கொலைக்குத் தேவையான மருந்து தட்டுப்பாடு காரணமாக ஒபாமாவினால் மரணதண்டனைகளை நிறைவேற்ற முடியவில்லை. ஜோ பைடன், தான் ஜனாதிபதியானால் மரண தண்டனையை ஒழிப்பேன் எனப் பிரசாரம் செய்தவர். ஜனவரி 20 இல் அவர் ஜனாதிபதியாகிறார். இதற்காகத்தான் ட்றம்ப் நிர்வாகம் அவசரம் அவசரமாக மரணதண்டனைகளை நிறைவேற்றுகிறது.

அமெரிக்க சனத்தொகை, உலக சனத்தொகையின் 5% மட்டுமே. ஆனால் உலக சிறைக்கைதிகளின் 25% அமெரிக்க சிறைகளில் இருக்கிறது. இவர்களைச் சிறைக்குள் தள்ளியதில் நீதித் துறை, சட்டத்தரணிகள், சிறையதிகாரிகள், பேராசிரியர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என எல்லோருக்கும் பங்குண்டு. ட்றம்ப் காலத்தில் மன்னிப்பு கொடுப்பது குறைந்து, மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவது அதிகரித்திருந்தது. ஆனால் அவர்களை உள்ளே தள்ளியதில் ட்றம்பிற்கு அதிக பங்கு இல்லை.

ட்றம்ப் நிர்வாகம் இதுவரை 10 பேரைக் கொன்றிருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களுக்குள் 3 பேரைக் கொல்வதற்குத் திட்டமிட்டுள்ளது.Chart: Isaac Arnsdorf/ProPublica

மரணதண்டனைக்கு ஆதரவான அமெரிக்கர்களின் குரல் நலிந்து வருகிறது. ஆனாலும் குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில், குறிப்பாக மதவாதிகள் மத்தியில், இது இன்னும் பலமானதாகவே இருக்கிறது.

1989 இல் நியூயோர்க்கின் சென்ட்ரல் பார்க்கில் ஒரு வெள்ளைப் பெண்ணைத் தாக்கினார்கள் என ஐந்து கறுப்பின+லத்தீனோ ஆண்கள் மீது தவறாகக் குற்றம் சாட்டப்பட்டது. அப்போது அவர்களுக்கு மரணதண்டனை வழங்கவேண்டுமென நியூ யோர்க் பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரங்களைச் செய்தவர் ட்றம்ப். மனப்பிறழ்வு கொண்ட அவரிடம் கருணை இல்லை. 2020 தேர்தலில் அவரது தோல்விக்குக் காரணமானவர்கள் கறுப்பினத்தவர்கள் என்பது நிதர்சனம். இப்போது அவரது ‘வெலிக்கடை moment’.

மரணதண்டனைகளை நிறைவேற்றுவதற்கு சோடியம் பென்ரோதல் எனப்படும் ஒருவித மயக்க மருந்து பாவிக்கப்பட்டுவந்தது. இதைத் தயாரித்த ஒரே ஒரு அமெரிக்க நிறுவனம் தயாரிப்பை நிறுத்திக்கொண்டது. அப்போது (ஒபாமா காலம்) தண்டனைக்குத் தயாராகவிருந்த ஜெஃப்றி போல் மருந்தின்மையாம் தண்டனையிலிருந்து தப்பினார். பின்னர் பென்ரோபார்பிற்றல் எனப்படும் மருந்து பாவிக்கப்படுகிறது. மாநிலச் சிறைகளில் மரணதண்டனைகள் இம்மருந்தைக்கொண்டே செய்யப்படுகின்றன. இருப்பினும் தமது மருந்து கொலைகளுக்குப் பாவிக்கப்படுகிறது என்பதால் இம்மருந்தைத் தாயரிக்கும் நிறுவனமும் தனது உற்பத்தியைக் குறைத்து வருகிறது.அமெரிக்க மருத்துவர் கழகம் மரணதண்டனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இம் மருந்துகள் மீதானஆலோசனகள் வழங்குவது முதல் மரணதண்டனை தொடர்பான விடயங்களில் தமது உறுப்பினர் பங்கு கொள்வதை அது விரும்புவதில்லை. இதனால்தான் சிறைச்சாலை அதிகாரிகள் சில பேராசிரியர்களை அணுகித் தமது கொலைக்கான மருந்துகளைத் தேர்ந்தெடுத்தார்கள்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவர்

மருந்து பற்றிய சிபார்சுகள் கிடைத்ததும் 2019 இல் சட்டமா அதிபர் வில்லியம் பார், மரணதண்டனைக்காகக் காத்திருக்கும் 60 பேரில், 14 கைதிகளைக் ‘கொலை செய்வதற்கு’ அடையாளமிட்டார். இவர்கள் எல்லோரது மேன்முறையீடுகளும் தோல்வி கண்டிருந்தன. “இவர்கள் அனைவரும் சமூகத்தில் பலவீனமான, முதியவர்களையும், குழந்தைகளையும் துன்புறுத்திக் கொலை செய்தவர்கள்” என வில்லியம் பார் அறிக்கையில் தெரிவித்திருந்தார். ஆனால் இக் கைதிகளில் சிலர் மூளை வளர்ச்சி குறைந்தவர்களெனவும், சிலர் இளைஞர்கள் எனவும், சிலர் தவறாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் எனவும், சிலர் கொலைசெய்யப்பட்ட உறவினர்களால் மன்னிக்கப்பட்டவர்களாகவும் காணப்பட்டனர். ஆனால் மரணதண்டனை நிறைவேற்றப்படவேண்டுமென்று கூக்குரலிடுவது, அரசியல்வாதிகளின் அடுத்த தவணைக்கான மக்கள் வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமே.

கைதிகளின் போராட்டம்

தாங்கள் எப்படிச் சாகவேண்டுமென்பதற்காக்கூடக் கைதிகள் போராடவேண்டியிருக்கிறது. மரணதண்டனைகள் இப்போது பென்ரோபார்பிற்றல் எனப்படும் மயக்க மருந்துகள் மூலம் செய்யப்பட்டு வருகின்றன. அம் மருந்து தருகின்ற வலி மிக மோசமானது எனபதைக் கைதிகளின் கடைசித் தருணங்களைப் பார்த்தவர்கள் கூறுகின்றனர். இதனால் இக் கொலை செய்யும் கருவியை மாற்றவேண்டுமென மரணத்தை எதிர்நோக்கும் கைதிகள் போராடுகின்றனர். துப்பாக்கிச் சூட்டினால் மரணமடைவது இம் மருந்தினால் கொல்லப்படுவதைவிட வலி குறைந்தது என அவர்களது சட்டத்தரணிகள் வாதாடுகின்றனர். இரண்டு வாரங்களுக்குப் பிறகு துப்பாக்கிச் சூட்டை சிறைச்சாலை அதிகாரிகள் அங்கீகரித்தனர். மருந்துத் தட்டுப்பாடு காரணமாகத் தண்டனைகள் நிறுத்தப்படுவதிலிருந்து அரசுக்கு இதனால் நிவாரணம் கிடைத்தது. இம்மாற்றத்தைக் கையெழுத்திட்டு அங்கீகரித்தவர் வில்லியம் பார்.கைதிகளின் பிரியாவிடை

ஒரு கைதி தன் மரணத்திற்குத் தயாராகுமுன் தனது பரிசாகத் தனது உடமையொன்றைத் தனக்கு நெருக்கமான இன்னுமொரு கைதியிடம் கொடுத்துவிட்டுச் செல்வது வழக்கம். அல்ஃபிரெட் பூர்ஜுவா என்னும் கைதிக்கு பெர்ணார்ட் என்னும் கைதி தனது மரணத்திற்கு முன் தன் கைக்கடிகாரத்தைப் பரிசளித்தார். ஆனால் ஒருநாள் கழித்து பூர்ஜுவாவும் தன்னைத் தொடரப் போகிறார் என்பதை பேர்னார்ட் அப்போது அறிந்திருக்கவில்லை.

மரணக் கட்டில்

மறுநாள் பூர்ஜுவா அவரது மரணக்கட்டிலில் பிணைக்கப்பட்டு கைகளில் மருந்தை ஏற்றுவதற்கான I.V. தொடுப்பும் இணைக்கப்பட்டிருந்தது. சில நிமிடங்களில் பென்ரோபார்பிற்றொல் அவரது குருதிக்குழாய்களில் சிறிது சிறிதாக ஏறியது. ஜோர்ஜ் ஹேல் என்னும் வானொலி அறிவிப்பாளர் இந்நடைமுறையைப் பார்த்து விவரணம் செய்துகொண்டிருந்தார். சில மணித்துளிகளில் பூஜுவாவின் வயிறு ஊதி வெடித்தது. கடைசித் தருணங்களில் அவர் சுவாசத்துக்காகத் தவித்தது பார்க்க முடியாத கொடுமை என்கிறார் ஹேல். பெர்னார்ட்டைப் போலல்லாது பூர்ஜுவாவின் உயிர் பிரிவதற்கு இரண்டு மடங்கு நேரம் (28 நிமிடங்கள்) எடுத்தன. ஒருவர் நீரில் மூழ்கும்போது உயிர்வாயுவுக்காகத் திணறும் உணர்வை பென்ரோபார்பிற்றல் மருந்து ஏற்படுத்துகிறது என்கிறார்கள் கைதிகளுக்காக வாதாடும் சட்டத்தரணிகள். இம் மருந்து மிகவும் மனிதநேயமானது எனப்பரிந்துரைத்த பேராசியர் $22,000 டாலர்களைப் பெற்றுக்கொண்டு அமைதியாக வாழ்கிறார்.

இன்னும் இரண்டு நாட்களில் மேலும் மூன்று உயிர்கள் பிரியப்போகின்றன. வலியில்லாது அவை பிரியவேண்டுமென்று வேண்டுவதைத் தவிர வேறு தேர்வு எமக்கில்லை.

மூலம்: புறோபப்ளிகா