World

ட்ரம்ப் மீதான விசாரணை (Impeachment) | ஒரு பழிவாங்கலா?

சிவதாசன்

இந்த வாரம், அமெரிக்க பிரதிநிதிகள் சபை வாக்களித்தன் மூலம், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான பொது விசாரணைக்கான வாசலைத் திறந்துவிட்டிருக்கிறது. இவ் விசாரணையால் ஜனாதிபதியைப் பதவியிலிருந்து அகற்ற முடியுமா? அது பல காரணிகளில் தங்கியிருக்கிறது.

ஜனாதிபதி தண்டிக்கப்படுவதற்கு அவர் செய்த குற்றமென்ன?


பிரதிநிதிகள் சபை ஜனாதிபதி மீது சாட்டியிருக்கும் முக்கியமான குற்றங்கள் இரண்டு: 1. டொனால்ட் ட்ரம்ப் தன் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்; 2: நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நடந்திருக்கிறார். இரண்டாவது விடயத்தில் யூக்கிரெயின் நாட்டுக்கு வழங்கப்படவிருந்து $400 மில்லியன் டாலர்கள் பெறுமதியான இராணுவ உதவியைத் தன் அரசியல் எதிரியான ஜோ பைடன் பற்றிய தகவல்களைப் பெறுவதற்காகப் பேரம் பேசப் பாவித்திருக்கிறார் என்பதே குற்றச்சாட்டு. இக்குற்றச்சாட்டுகளைப் பொது விசாரணையாகச் செய்ய வேண்டுமென்றும் எவரும் வந்து சாட்சியம் தரலாமென்பதும் விதி. பொது விசாரணைக்கான நாள் வெகு விரைவில் குறிக்கப்படும் எனப் பிரதிநிதிகள் சபை அறிவித்திருக்கிறது.

பொது விசாரணையை மேற்கொள்ளும் பிரதிநிதிகள் சபையினால் ஜனாதிபதி முறைப்படி குற்றம்சாட்டப்படலாமே தவிர பதவியிலிருந்து அகற்ற அதற்கு அதிகாரமில்லை. இதைத் தொடர்ந்து செனட் சபையினால் மேற்கொள்ளப்படும் விசாரணையில் ஜனாதிபதி குற்றவாளியாகக் காணப்பட்டால் மட்டுமே அவர் பதவியிலிருந்து நீக்கப்படுவார்.

தற்போது, பிரதிநிதிகள் சபையின் அதிகாரம் ஜனநாயகக் கடசியின் கைகளில் இருப்பதால் முதலாவது கட்டமாக குற்றம்சாட்டப்படுதல் வெற்றிகரமாக நிகழலாம். ஆனால் செனட் சபை தற்போது ஜனாதிபதியின் கட்சியான குடியரசுக் கட்சியின் கட்டுபாட்டில் இருப்பதால் செனட் சபையால் அவர் குற்றவாளியாகக் காணப்படுவது நடக்கக்கூடிய காரியமில்லை, எனவே ஜனாதிபதி, வழக்கம்போலத் தப்பித்துக்கொள்ளவே வாய்ப்புகளுண்டு.

ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டால்….

அமெரிக்க அரசியற் சாசனத்தின்படி, பதவியிலிருக்கும் ஜனாதிபதி இறந்தாலோ, விலகினாலோ, விலக்கப்பட்டாலோ உப ஜனாதிபதி ஜனாதிபதியாகப் பதவியுயர்த்தப்படுவார்.

President Donald Trump talks to reporters before boarding Air Force One [File: Evan Vucci/AP Photo]
ஜனாதிபதி ட்ரம்ப் – படம் AP

ஜனாதிபதி எப்படி இந்த நிலைக்கு ஆளானார்?

பிரச்சினைக்கு மூல காரணம், டொனால்ட் ட்ரம்ப் தனது அரசியல் எதிரியான ஜனநாயகக் கட்சியின் முன்னாள் உப ஜனாதிபதியான ஜோ பைடனின் மீதுள்ள ‘அழுக்குகளை’ அறிவதற்கு யூக்கிரெயின் நாட்டின் தலைவர்களிடம் உதவி கேட்டமை. ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் யூக்கிரெயின் நிறுவனமொன்றிற்கு வேலை செய்தபோது செய்த சில ‘திருகுதாளங்களை’ அறிவதற்கு ட் ரம்ப் முயன்றார். அமெரிக்கா ஏற்கெனவே ஒத்துக்கொண்ட $400 மில்லியன் டாலர்கள் இராணுவ உதவியை இவ் விடயத்தில் பேரமாக அவர் பாவித்திருக்கிறார். ட் ரம்ப் இது விடயமாக மேற்கொண்ட உரையாடல்களை ஒட்டுக்கேட்ட அமெரிக்க உளவுப்பிரிவைச் சேர்ந்த ஒருவர் விடயத்தைப் பகிரங்கப்படுத்திவிட்டார். இது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுததலாக வந்திருக்கிறது என்பதுவே ஜனநாயகக் கட்சியின் குற்றச்சாட்டு.

இதற்கு முன்னர், ட் ரம்ப் தேர்தலில் நின்ற போது அவ்ருக்கும் ரஷ்ய வியாபாரிகளுக்கும் இடையில் இருந்த பல ‘கச முச’க்களைத் துருவி எடுப்பதற்கு ஹிலாரி கிளிண்டன் கஷ்டப்பட்டுத் தோற்றுப் போனதன் பழிவாங்கல் தான் இது என்றொரு கிசு கிசுவும் உலா வருகிறது.

ட்ரம்பிற்கு உள்ளேயும் வெளியேயும் பல எதிரிகள் என்பதனால் சாட்சியங்களைத் தேடி ஜனநாயகக் கட்சி எங்கேயும் அலையத் தேவையில்லை. இதுவரை எட்டுப் பேர் சாட்சியமளித்துவிட்டார்கள். வெள்ளை மாளிகையின் இரண்டு தேசிய பாதுகாப்புச் சபை அலுவலர்கள் மூடிய கதவுக்குள் தமது சாட்சியங்களைப் பதிவு செய்துவிட்டார்கள். மேலும் பலர் வரிசையில் நிற்கிறார்கள். ஜனாதிபதியின் தனிப்பட்ட சட்ட ஆலோசகரும் முன்னாள் நியூ யோர்க் மேயருமான ரூடி கிலியானியின் ஆதிக்கம் பல முக்கிய புள்ளிகளைப் பிரித்து வைத்திருக்கிறது.

ட் ரம்ப், தான் ஒரு குற்றமும் செய்யவில்லை எனப் பல தடவைகள் கூறிவந்திருக்கிறார். இது ஜனநாயகக் கட்சியின் பழி வாங்கல் எனவும் கூறுகிறார். இதற்கு முன் பல குற்றச்சாட்டுகளிலும், விசாரணைகளிலுமிருந்து தப்பியிருக்கிறார். எதிர்த்தரப்பிடம் நிரூபிக்கக்கூடிய எதுவும் இருந்திருக்கவில்லை. இந்தத் தடவையும் அதுவே நடக்கலாம்.

அமெரிக்க வரலாற்றில் ஜனாதிபதி தண்டிக்கபடுவது இது நான்காவது தடவை.

பொது விசாரணை இந்த மாதம் ஆரம்பிக்குமென சபாநாயகர் நான்சி பெலோசி (ஜனநாயகக் கட்சி) தெரிவித்தார். அவருக்கு இதில் அதிகம் நம்பிக்கையில்லை என முன்னர் செய்திகள் வந்திருந்தன.

ட்ரம்பைப் பதவியிறக்குவதற்கு ஜனநாயகக் கட்சியைவிட அவருக்கு எதிரான ‘அதிகார வர்க்கத்துக்குத்’ தான் அதிக அவசரம். இரண்டாவது தடவையும் அவர் வென்றுவிடக் கூடாது என்பதில் அவர்கள் மிகவும் குறியாகவிருக்கிறார்கள்.

ட்ரம்ப் சொல்வதுபோல் இது ஒரு பழிவாங்கல்தான்.