Columnsசிவதாசன்

ட்ரம்பிற்குச் சாதமாகிய பதவிநீக்க விசாரணை?

சிவதாசன்

இன்றிரவு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவியிறக்க நாடகம் முடிவுக்கு வந்திருக்கிறது. அவர் பதவியிறக்கப்படத் தகுதியானவர் என, அவரது எதிர்க்கட்சி பெரும்பான்மையாகவுள்ள கீழ்ச்சபை (House of Representatives) தீர்ப்பளித்திருக்கிறது.

வரலாற்றில் மூன்றாவது தடவையாக ஒரு அமெரிக்க ஜனாதிபதி பதவி நீக்கத்துக்காகச் சிபார்சு செய்யப்பட்டிருக்கிறார். இத் தீர்ப்பின் மூலம் அவரைப் பதவியிலிருந்து நீக்க முடியாது. இனி இவ் வழக்கு மேல்சபையில் ( Senate) விசாரிக்கப்படும். மேல்சபையில் பெரும்பான்மையாக இருப்பது ட்ரம்பின் குடியரசுக் கட்சி. அங்கு வழக்கு நடக்கும்போது சட்டத்தை இயற்றுபவர்களும், நீதிபதியும், ஜூரர்களும் செனட் சபை தான். அங்கு ட்ரம்ப் தண்டிக்கப்படுவதற்கான சாத்தியமே இல்லை. இது ஒரு வெறும் நாடகம். மக்களின் வரிப்பணத்தைக் கடலில் கொட்டிய ஒரு நாடகம். கிட்டத்தட்ட 700 பக்கங்கள் ஸ்கிறிப்டில் தயாரிக்கப்பட்ட நாடகம். ஜனநாயகக் கட்சி தனக்குத் தானே தோண்டிய சவக் கிடங்கு.

முன்னிரவில் நாடகம் முடிவுக்கு வந்த போது ட்ரம்ப் பிறிதொரு இடத்தில் தன் ஆதரவாளர்களைச் சந்தித்து இந் நாடகத்தையும் அதன் பிரதான நடிகை நான்சி பெலோசி பற்றியும் வழக்கம்போல விளாசித் தள்ளிக்கொண்டிருந்தார். பணம் கொடுத்து வரவழைக்கப்பட்ட கூட்டம் பல தடவைகள் ஒத்திகை பார்க்கப்பட்ட அதே கூக்குரல்களோடு அவரை மகிழ்வித்துக் கொண்டிருந்தனர். இசைக் குழுவின் கண்டக்டர் போல் அவர் ஒழுங்கான இடைவெளிகளில் தன் நக்கல்களைத் தள்ளிக்கொண்டிருந்தார். ‘அடுத்த தடவையும் நான் தான் ஜனாதிபதி, அப்போது பார்த்துக்கொள்கிறேன்’ என்பதை அவரது முகம் தெட்டத் தெளிவாகக் காட்டிக்கொண்டிருந்தது.

கீழ்ச் சபையில் சில நாட்களாக நடந்துகொண்டிருந்த நாடகம் முடிவுக்கு வந்ததில் ட்ரம்பைப் போலவே சபையினரும் மகிழ்ந்திருப்பார்கள் போல. ஜனநாயகத்தின் காவலர்கள் வரிசையில் நின்று ‘Founding Fathers’ ஐப் புகழ்ந்தது எல்லாம் கொஞ்சம் மிகையான நடிப்புத்தான்.

ட்ரம்பின் வருகை ஒரு correction process தான். அவர் அமெரிக்காவை ஆள்வதற்கு ஏற்றவரல்ல என்பது அவருக்கும் தெரியும். ‘நான் தேர்தலில் வெற்றிபெறுவேன் என்று நினைத்திருக்கவில்லை’ என அவர் தேர்தல் முடியக் கூறியிருந்ததாகச் செய்திகள் வந்திருந்தன. பதவி இப்போது அவரது தலைக்குள் குடிகொண்டு விட்டது. இரண்டாவது தவணைக்கு அவர் தயார். பொருளாதார அளவுகோல்களும் அப்படித்தான் காட்டுகின்றன. அவரது ‘வெள்ளைக் குடி வாக்காளர்கள்’ அவரவர் கிராமங்களில் அப்படியேதான் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் ஒரே சுவிட்சில் இயக்கும் மதப்பிரசங்கிகளும் அப்படியேதான் இருக்கிறார்கள். அவர்களை வாக்குச் சாவடிக்குத் தள்ளிச் செல்லவல்ல பொது எதிரியான ஜனநாயகக் கட்சிதான் சோம்பல் நிலையிலிருந்தது. 2020 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தனது வாக்காளர்களை உசுப்பி விடுவதற்கு வேப்பிலைதாரிகள் அவருக்குத் தேவைப்பட்டனர். இந்த நாடகம் அவருக்கு உதவி செய்திருக்கிறது. அவரது உற்சாகம் கரைபுரண்டோடுகிறது.

ட்ரம்ப் நேர்மையானவரில்லை. அவரது எதிர்க்கட்சியினரும் அப்படியானவர்கள் தான். இவர் சண்டித்தனத்தால் சாதிப்பதை அவர்கள் தந்திரத்தால் சாதிக்கிறார்கள். அதற்காக அவர் செய்வதெல்லாம் சரியென வாதாட வரவில்லை. அவரது வரவு தற்செயலானதல்ல. ஒரு வகையில் system imposed correction process எனச் சொல்லலாம். அதைப்பற்றிப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

ட்ரம்ப் மீது தற்போது முன்வைக்கப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுக்கள்- அதிகார துஷ்பிரயோகம் (abuse of power) மற்றும் காங்கிரசின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்தமை (Obstruction of Congress). கீழ்ச் சபை மேற்கொண்ட விசாரணகளின் போது பெறப்பட்ட சாட்சியங்களின் பிரகாரம் இக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

யூக்கிறெயின் நாடு ரஸ்யாவின் எல்லையில் உள்ளது. சோவியத் யூனியனின் உடைவுக்குப் பிறகு மேற்குநாடுகளின் காவற்படைகள் ரஸ்யாவின் எல்லையில் அமர்வதற்கு யூக்கிரெயின் இடம் கொடுத்தது. இதற்கான பிரதியுபகாரமாக (quid pro quo) 400 மில்லியன் டாலர்கள் பெறுமதியான இராணுவ உதவியை அமெரிக்கா கொடுக்கவிருந்தது.

இதே வேளை, முன்னாள் உதவி ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் யூக்கிறெயினில் பணியாற்றியபோது சில முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கசிந்த விடயங்கள் பற்றித் தகவல்களைத் தந்தால் மட்டுமே இந்த இராணுவ உதவிப் பணத்தைத் தருவேன் என ட்ரம்ப் இரகசியமாக யூக்கிறேயின் ஆட்சியாளருடன் ‘டீல்’ போட முற்பட்டதாகவும் (இன்னுமொரு quid pro quo) அதை விசாரிக்க முற்பட்டபோது அதற்குத் தடையாக இருந்தார் என்பதும் தான் தற்போதய குற்றச்சாட்டுகள். இக்குற்றச்சாட்டுகளுக்கான ஆவணங்களுடனான நிரூபணம் எதுவும் (hardcore evidence) விசாரணைகளை மேற்கொண்ட நீதித்துறைக் குழுவுக்கு (house judiciary committee) கொடுக்கப்படவில்லை. வெறும் சாட்சியங்களை மட்டும் வைத்தே தீர்ப்பை எட்டினார்கள். இதனால் தான் மேல்சபை விசாரணைகளில் இவ் வழக்குத் தோல்வியுறும் எனக் கூறப்படுகிறது.

இவ் வழக்கு, மேல் சபையில் விசாரணைக்கு எடுக்கப்படும்போது அடுத்த தேர்தல் (நவம்பர் 2020) வந்துவிடும். கீழ்ச் சபையைப் போலல்லாது மேல்சபையில் இது ஒரு நீதி விசாரணை போலவே (trial) நடத்தப்படும். அதற்கான சட்ட வரைமுறைகளை உருவாக்கும் பொறுப்பும் மேல்சபையிடமே உண்டு. மேலே கூறியது போல சட்ட உருவாக்கம், நீதிபதி, ஜூரர் எல்லாமே மேல்சபையினர் தான். மேல் சபையில் 53 ஆசனங்கள் குடியரசுக் கட்சிக்கும், 45 ஆசனங்கள் ஜனநாயகக் கட்சிக்கும் 2 சுயாதீனரிடமும் இருக்கின்றன. பதவி நீக்குவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும். எனவே ட்ரம்ப் பதவியையோ, சொத்துக்களையோ இழப்பதற்கோ அல்லது அபராதங்களைச் செலுத்துவதற்கோ கூட அவசியம் ஏற்படாது எனவே நம்பப்படுகிறது.

இது ஒரு வெறுமனே மக்கள் வரிப்பணத்தில் ஆடிய நாடகம். இதில் கைதட்டி ஆராவாரித்தவர்கள் ட்ரம்பும் அவரது ஆதரவாளர்களும் தான்.

அடுத்த தடவையும் ட்ரம்ப் ஜனாதிபதியானால் அவரை ஆட்சியில் இருத்தியது ஜனநாயகக்கட்சியாகவே இருக்கும்.