டென்னிஸ் | நயோமி ஒசாகா பிரென்ச் ஓப்பிண் போட்டியிலிருந்து விலகினார் – குவியும் பாராட்டுக்கள்

ஊடகங்களுக்கு பேட்டி வழங்கவில்லை என்பதற்காக $15,000 அபராதம் விதித்தமையை எதிர்த்து போட்டியிலிருந்து விலகினார்

உலகின் இரண்டாவது சிறந்த பெண் டென்னிஸ் ஆட்டக்காரரான நயோமி ஒசாகா, பிரென்ச் ஓப்பிண் போட்டியிலிருந்து விலகியமை குறித்து அவரது முடிவைப் புகழ்ந்தும், ஆதரித்தும் பல முன்னணி ஆட்டக்காரர்களும், பிரபலங்களும் குரலெழுப்பி வருகிறார்கள்.

நடைபெற்றுவரும் பிரென்ச் ஓப்பிண் கிராண்ட் ஸ்லாம் போட்டியின் ஒப்பந்த விதிகளின்படி ஆட்டம் முடிந்ததும் அங்கு காத்திருக்கும் ஊடகவியலாளருக்கு பேட்டி கொடுக்கவேண்டும். ஆனால் ஞாயிறன்று நடைபெற்ற ஆட்டத்தின் பின்னர் நயோமி ஒசாகா ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்க மறுத்திருந்தார். இதன் காரணமாக ஆட்ட ஒழுங்கமைப்பாளர் அவருக்கு $15,000 டாலர்கள் அபராதத்தை விதித்திருந்தனர். இவ்வபராதத்தை எதிர்த்து அவர் ஆட்டத்திலிருந்து வெளியேறிவிட்டார்.

பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் அவரது இந் நடவடிக்கை தொடர்பாக, முன்னாள் சம்பியன், அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை பிலி ஜீன் கிங்க் உட்பட, வில்லியம்ஸ் சகோதரிகள் போன்ற பலர் தமது ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கு முன்னர் இப்படியொரு ஊடக சந்திப்பின் பின்னர் தனக்கு தீராத மன அழுத்தமும், மனப் பதட்டமும் ஏற்பட்டதாகவும் அதனாலேயே தான் இந்த ஊடக சந்திப்பிற்கு உடன்படவில்லை எனவும் நயோமி தனது ருவிட்டர் மூலம் தெரிவித்திருக்கிறார்.

விம்பிள்டன், பிரென்ச் ஓப்பிண், யூ.எஸ். ஓப்பிண் போன்ற கிராண்ட் ஸ்லாம் தரத்திலான சுற்றுப் போட்டிகள் ஏகப்பட்ட பெருஞ்செலவில் ஒழுங்கு செய்யப்படுகின்றன. இவற்றில் ஆடும் பிரபல ஆட்டக்காரர்களுக்கு ஆட்டத்தில் வெற்றி பெறும்போது புகழுடன், பெரிய பண முடிச்சுகளும் கிடைக்கின்றன. இந் நிகழ்வுகளை ஒழுங்கு செய்பவர்களுக்கு பார்வையாளரது அனுமதிச் சீட்டு விற்பனையால் கிடைக்கும் வருமானத்தை விட ஊடக அனுமதிகளை விற்றுக் கிடைக்கும் பணமே மிகப் பெரியது. இதனால் ஒப்பந்தம் செய்யும்போது ஆட்டம் முடிந்த பின்னர் ஆட்டக்காரர் ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கவேண்டுமென்பது கட்டாயமான ஒன்று.

இதை விடவும், நிகழ்வுகளுக்கு பார்வையாளரை வருவிப்பதற்காகவும், ஊடகங்களின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காவும், ஒழுங்கமைப்பாளர் நட்சத்திர அந்தஸ்துள்ள ஆட்டக்காரரை ‘விசேடமாகத் தனியே கவனித்துக்’ கொள்வதும் ஒழுங்கமைப்பாளரினால் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கை.

நயோமி ஒசாகா நான்கு தடவைகள் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை வென்று உலகின் இரண்டாம் இடத்தை எட்டியிருப்பவர்.

” இப் போட்டியிலிருந்து விலகுவதால் எனக்கும், ஏனைய விளையாட்டு வீரர்களுக்கும், நடைபெறும் சுற்றுப் போட்டிக்கும் நல்லது. அப்போதுதான் எல்லோரும் போட்டியில் கவனம் செலுத்த முடியும்” என அவர் தனது ருவிட் செய்தி மூலம் அறிவித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் பல ஆட்டக்காரர் மத்தியில் நயோமியின் வெளியேறல் குறித்து எதிரான கருத்துக்கள் கூறப்பட்டிருந்தாலும், கூடைப்பந்ந்தாட்ட வீரர், ஸ்டீபன் கறி, ட்றாக் அண்ட் ஃபீல்ட் யூசெயின் போல்ட், கோல்ஃப் மிஷெல் வை போன்ற பலதரப்பட்ட விளையாட்டு வீரர்களும் நயோமிக்கு ஆதரவாகக் குரலெழுப்பி வருகிறார்கள்.

பணத்துக்காக ஆடும் ஆட்டங்களில் எந்த அதிர்ச்சி தரும் செய்தியும் மேலும் பணத்தை அள்ளிக்கொட்டும் என்பதால் எப்போதும் இதில் இழப்பவர்கள் பார்வையாளர்கள் மட்டும்தான்.