• Post category:CANADA / HEALTH
  • Post published:December 21, 2020
Spread the love

நத்தார் தினத்துக்கு முதல் நாளன்று (டிசம்ப்ர் 24) ஒன்ராறியோ மாகாணம் முழுவதையும் முடக்கத்துக்குள்ளாக்கும் (lockdown) மாகாண அரசு திட்டமிடுவதாக ரொறோண்டோவின் 24 மணிநேர வானொலியாகிய 680 NEWS செய்தி வெளியிட்டுள்ளது.

கொறோணாவைரஸ் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் அரசின் திட்டங்களில் ஒன்றாக இப் பணிமுடக்கம் திட்டமிடப்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிடப்படாத அரசாங்க உத்தியோகத்தர் மூலம் இத் தகவல் கிடைக்கப்பெற்றதாக அவ் வானொலி தெரிவித்துள்ளது.

இத் திட்டத்தின் பிரகாரம், வியாழன் அதிகாலை 12:01 முதல், அத்தியாவசியமற்ற சில்லறை வியாபாரம் (retail), உள்ளக உணவுபசாரம் (indoor dining) ஆகியன பொதுமக்களுக்கு சேவைகளை வழங்க முடியாது.

இம் முடக்க காலம், ஒன்ராறியோவின் பிரதேசங்களுக்கேற்ப வேறுபடும். ரொறோண்டோ, பீல் பிராந்தியங்கள் ஜனவரி 4ம் திகதிவரை பணிமுடக்கம் செய்யப்படுமென மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் ஏற்கெனவே அறிவித்துள்ளார். திங்கள் முதல் ஹமில்ட்டன் பிராந்தியமும் இப் பட்டியலில் சேர்க்கப்படுகிறது.



திங்கள் பி.ப. 1:00 மணிக்கு ஒழுங்குசெய்யபட்டுள்ள ஊடக அறிவிப்பின்போது முதல்வர் ஃபோர்ட் மேலதிக திட்டங்களை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப் பணிமுடக்கம், ஒன்ராறியோவின் பல பிராந்தியங்களில் நடைமுறைப்படுத்தப்படலாம் எனவும், 28 நாட்களுக்கு இது தொடரலாம் எனவும், வடக்கு ஒன்ராறியோவில் சில வேளைகளில் அது இரண்டு வாரங்களுக்கு மட்டுமே நடைமுறைப்படுத்தப்படலாம் எனவும் குளோபல் நியூஸ் தெரிவித்துள்ளது.

இத் திட்டத்தின்படி, குடும்ப அங்கத்தவர்களைத் தவிர ஏனையோர் உள்ளக சமூக ஒன்றுகூடல்களில் கூடமுடியாது. அத்தியாவசியமற்ற சில்லறை வியாபார நிலையங்கள், உடற் பயிற்சி நிலையங்கள் மூடப்படுமெனவும், உணவகங்களும், மதுபான நிலையங்களும் உணவு, பான விநியோகங்களை மட்டுமே செய்ய முடியுமெனவும் அறியப்படுகிறது.

Print Friendly, PDF & Email
Related:  கோவிட் 19 | ஒன்ராறியோ அரசு அறிவிக்கும் அவசரகால நடவடிக்கைகள்