Spread the love

தமிழ்நாடு அரசியலில் பொதுவாகத் தலையிடும் வழக்கமில்லாத நடிகர் ரஜினிகாந்த், தமிழ்நாட்டின் மதுபான விற்பனை நிலையங்களான ‘டாஸ்மாக்’ திறக்கப்படுவதற்கு எதிராகக் குரலெழுப்பியுள்ளார். ஊரடங்கு காலத்தில் மூடப்பட்ட இக் கடைகளை மீண்டும் திறப்பது பற்றி தமிழ்நாடு அரசு யோசித்து வருகிறது. சென்னை உயர்நீதி மன்றமும் இந் நிலையங்களை மூடுமாறு பணித்திருக்கிறது.

'டாஸ்மாக்' திறக்கப்படுமானால் மீண்டும் பதவிக்கு வருவதை மறந்துவிடுங்கள்! - ரஜினி 1
ரஜினி, கமல்

‘டாஸ்மாக்’ கடைகளினால் தமிழ்நாடு அரசுக்குப் பெருந்தொகையான வருமானம் கிடைப்பதுண்டு. “தயவு செய்து வேறு வழிகளில் வருமானத்தைப் பெற முயற்சி செய்யுங்கள், இக் கடைகளை மீண்டும் திறந்தால் அடுத்த தடவை ஆட்சிக்கு வருவதை அ.இ.அ.தி.மு.க. மறந்துவிடவேண்டும்” என அவர் இன்று (ஞாயிறு) தனது ருவீட் மூலம் அரசைக் கேட்டுள்ளார். https://twitter.com/rajinikanth

சென்னை உயர்நீதிமன்றம் இக் கடைகளை மூடும்படி அளித்த தீர்ப்புக்கு எதிராக நேற்று, தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைச் சமர்ப்பித்திருந்தது. தொடர்ந்து இக் கடைகளை மூடி வைத்திருப்பதனால் அரசின் வருமானம் பெருமிழப்பைச் சந்திக்கவேண்டிவருமென அரசு அம் மனுவில் குறிப்பிட்டிருந்தது.

மதுபானக் கடைகள் திறக்கப்பட்ட மறுநாளிலேயே அதற்கு முன் மக்கள் கூட்டம் முண்டியடித்ததைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் சகல மதுபானக் கடைகளும் மூடப்படவேண்டுமென, வெள்ளியன்று உத்தரவிட்டிருந்தது. இணையவழி மூலமாக விண்ணப்பிக்கப்படும் மதுபானங்கள் விநியோகம் செய்யப்படுவதஹி அது அனுமதித்திருந்தது.


கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியும், மதுபானக் கடைகள் திறக்கப்படுவதற்கு எதிராக மனுச் செய்திருந்தது. வழக்கறிஞர் பி.ராம்குமார் ஆதித்யன், ஐ.பி.எஸ் அதிகாரி ஏஜி மெளரியா ஆகியோரும் தனித்தனியாக மனுச் செய்திருந்தார்கள்.

ஒரு மாதமாக அடைக்கப்பட்டிருந்த மதுபானக் கடைகள் மே 7 அன்று, சென்னை தலைநகரைத் தவிர்ந்த ஏனைய இடங்களில் மீண்டும் திறக்கப்பட்டன. “இது இனப்படுகொலை செய்வதற்கு ஒப்பானது” என கமல்ஹாசன் அரசுக்கு எழுதிய ‘திறந்த கடிதத்தில்’ குறிப்பிட்டிருந்தார்.

கடைகள் திறக்கப்பட்டு மறுநாள், மாநிலத்தின் பல பகுதிகளிலும் கடைகளின் முன் பெருந்திரளான கூட்டம் கூடிநிற்பது பற்றிய படங்களும், காணொளிகளும் ஊடகங்களில் பரவலாக வெளியாகியிருந்தது. சமூக இடைவெளியற்று மக்கள் கூடுவதைப் பார்த்த பிறகு சென்னை உயர்நீதிமன்றம் கடைகளை மூடும்படி உத்தரவிட்டதாக அறியப்படுகிறது.

Print Friendly, PDF & Email
Related:  இந்தியா | வேகமாக அதிகரிக்கும் கோவிட்-19 தொற்று!